Translate

Monday 30 July 2012

நீண்டகாலக் கனவை நிறைவேற்ற கிழக்குத் தேர்தல் நல்ல சந்தர்ப்பம்; மக்களை அழைக்கிறார் கூட்டமைப்பின் வேட்பாளர்


நீண்டகாலக் கனவை நிறைவேற்ற கிழக்குத் தேர்தல் நல்ல சந்தர்ப்பம்; மக்களை அழைக்கிறார் கூட்டமைப்பின் வேட்பாளர்
news
 என்றுமில்லாதவாறு இந்தமுறை கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ் மக்கள் அக்கறையோடும், ஆர்வத்தோடும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கு அவர்கள் வழங்குகின்ற பலத்த ஓர் ஆணையாக இம்முறை இடம்பெற இருக்கின்ற இத்தேர்தல் இருக்கப் போகின்றது.

 
இவ்வாறு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் கல்முனை மாநகரசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் த.அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
 
நற்பிட்டிமுனையில் மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் தெரி வித்ததாவது:
இன்று தமிழர்களினுடைய பிரச்சினை தொடர்பாக சர்வதேச நாடுகள் பலவழிகளிலும் அக்கறை செலுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறான காலகட்டத்திலேதான் தமிழ் மக்களாகிய நாம் எமது உரிமைகளை வென்றெடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து செயற்படவேண்டிய காலமாக இதனைக் கருத வேண்டும். அப்போதுதான் எமது இலக்குச் சரியான பாதையை நோக்கி நகரும்.
 
மூன்று மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகளவான ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டுவதற்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள தமிழ்மக்கள் அயராது உழைப்பதில் முன்நிற்க வேண்டும். அதிலும் குறிப்பாக, இளைஞர்கள், யுவதிகள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி தமிழ் மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும்.
 
அம்பாறை மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ்மக்கள் தூரநோக்குடன் வாக்களித்து மூன்று தொகுதிகளுக்குமான பிரதிநிதிகளைத் தெரிவுசெய்ய வேண்டும். முன்பு நடந்த தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்குப்பலத்தை சிதறடித்தது போன்று இம்முறையும் சிதறடிக்காமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை நிலை நாட்டி எமது ஒற்றுமையை உலகறியச் செய்து சர்வதேசத்தின் பார்வை எங்கள் பக்கம் பலமாக இருப்பதற்கு நம்முடைய முக்கிய ஆயுதமான வாக்குப்பலத்தை பிரயோகிக்க வேண்டும்   என்றார்.   

No comments:

Post a Comment