Translate

Monday 30 July 2012

தமிழீழ மாவீரர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிப்பு. மாவீரர்களின் விபரங்கள் தந்துதவுமாறு தமிழீழ மாவீரர் பணிமனையின் பிரான்ஸ் இணைப்பகம் வேண்டுகோள்.

தமிழீழ மாவீரர்கள் தொடர்பான விபரங்கள் சேகரிப்பு.
மாவீரர்களின் விபரங்கள் தந்துதவுமாறு தமிழீழ மாவீரர் பணிமனையின் பிரான்ஸ் இணைப்பகம் வேண்டுகோள். 

தமிழீழ தேசத்தின் விடுதலைக்கான விலைமதிப்பில்லாத தமது இனிய இளைய உயிர்களை அர்ப்பணித்துவிட்ட எங்கள் மாவீரர்களின் அன்புக்குரிய பெற்றார் குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்கள் பொதுமக்களுக்காக, இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது. 
எங்கள் இனம் விடுதலை அடைகின்ற காலம் வரையும் அதற்கு அப்பாலும், தமிழர்களின் வரலாறு நெடுகிலும், புனிதமாகப் போற்றிப் பாதுகாக்கப்படவேண்டிய மாவீரர்களின் விபரங்கள், நினைவுக் குறிப்புக்கள், போரால் சிதிலமடைந்த எங்கள் தேசம் போல், அவையும் இங்கும் அங்குமாக சிதைந்தும் சிதறுண்டும் போயுள்ளன. எங்கே அவை முற்றாக மண்ணோடு மண்ணாய் மறைந்தழிந்துபோய்விடுமோ என்ற ஆபத்தான துயர் நிரம்பிய கேள்விகள் எம்முன்னே அச்சுறுத்துகின்றன. 


தனது விடுதலைக்காகப் போராடும் ஒரு இனம், இந்தப் போராட்டத்திற்காக நிகழ்த்தப்பட்ட அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் என்பனவற்றைத் தேடிச் சேகரித்து அவற்றை ஆவணப்படுத்தி, எதிர்காலத்திடம் அதன் மேன்மை மாறாமல் கையளிக்கவேண்டியதை தனது போராட்டப்பணியில் ஒரு அங்கமாகக் கொள்ளவேண்டும். 
மெய் சிலிர்க்க வைக்கும் பல தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள், இன்னும் பதிவுகளில் வராமலேயே சதாரண நிகழ்வுகள் போல செய்திகளாய் கடந்து செல்வதை நிட்சயமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது.

அந்த அற்புதமான தியாகங்களின் உயிர் அத்திவாரங்களில் இருந்துதான், எங்கள் இனத்தின் விடுதலைக்கான போராட்டம் கட்டிஎழுப்பப்படுகின்றது. 
அந்த மாவீரர்களின் உயிர்த் தியாகங்கள்தான், விடுதலைக்காகப் போராடும் இனத்தின் உந்துசக்தி. புனிதமான அவர்களின் நினைவுகள்தான், பாதைமாறாத பயணத்தின் வழிகாட்டி. 
இந்த நோக்கத்தில், களமாடி வீழ்ந்த எங்கள் மாவீரர்களின் விபரங்களைச் சேகரித்து உறுதிப்படுத்தும் பணியை, தமிழீழ மாவீரர் பணிமனையின் பிரான்ஸ் இணைப்பகம் ஆரம்பித்துள்ளது. 

கடந்த ஆண்டு, மாவீரர் நாள் நிகழ்வு பிரான்ஸ் ஸ்தான் மைதானத்தில் நடைபெற்றபோது, மாவீரர் துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்ட கல்லறைகளில் பல மாவீரர்களின் பெயர்கள் தவறவிடப்பட்டிருப்பதாக, வணக்க நிகழ்வுக்கு வந்திருந்த பெற்றார் உறவினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர். 
இந்தக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கும், மாவீரர் விபரங்கள் சேகரிப்பு நடவடிக்கை பெரிதும் உதவும் என்பது எமது எதிர்பார்ப்பு. 

எனவே அன்பான உறவுகளே!
தற்போதைய சூழலில் மிகக் கடினமானதாக இருந்தபோதும், இதனை ஆற்றப்படவேண்டிய ஒரு முக்கிய பணியாகக் கருதி, இதனைச் செயற்படுத்த முனைகின்றோம். அதற்கு மக்களாகிய உங்களின் ஒத்துழைப்பே முக்கியமானது.  
இறுதிப் போர்க்கால கட்டங்களில், வீரச்சாவடைந்த உங்கள் பிள்ளைகள், உங்கள் குடும்ப உறவுகள், உறவினர்கள், நண்பர்கள் போன்றோரின் விபரங்களை, புகைப்படங்களை, ஏனைய நினைவுக்குறிப்புக்களை எங்களுக்குத் தந்துதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம். 

தொடர்ச்சியாக சனி ஞாயிறு இரு தினங்களும், மதியம் பன்னிரண்டு மணியில் இருந்து மாலை எட்டு மணிவரையும், தமிழர் நடுவப் பணிமனையில், இந்தப் பணிகளை மேற்கொள்ளப்படும். 
மாவீரர்களின் விபரங்களைச் சேர்ப்பிக்க விரும்புவோர், இவ்விரு தினங்களும் குறிப்பிட்ட நேர இடைவெளியில், தமிழர் நடுவப் பணிமனைக்கு வருகைதந்து தமது விபரங்களைச் சேர்ப்பிக்கலாம். 
தமிழீழ மாவீரர் பணிமனையின் இணைப்பாளராக பணிபுரியும் மலரவன் அவர்களை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டும், இதுதொடர்பாக கலந்துரையாடமுடியும். 

தொடர்புகளுக்கு
தொலைபேசி இலக்கம் - 0980578092
மின்அஞ்சல் முகவரி - Lep.sankar @ gmail.com 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு - பிரான்ஸ்

No comments:

Post a Comment