Translate

Wednesday, 18 July 2012

பசில், கோத்தாபய, லலித் அணி – இந்த வாரம் புதுடெல்லி பயணம்?


சிறிலங்காவின் உயர்மட்டக்குழு இந்த வாரத்தில் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 
சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, சிறிலங்காஅதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோரைக் கொண்ட குழுவே புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள் இருப்பதாக ‘சண்டே ரைம்ஸ்‘ தெரிவித்துள்ளது.

வரும் நொவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வுக் கூட்டம் தொடர்பான சிறிலங்காவின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கவே இந்தக் குழு இந்தியா செல்லவுள்ளது.
இந்த மீளாய்வுக் கூட்டத்துக்கான சிறிலங்காவின் பதில் அறிக்கை வரும் 23ம் நாளுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.10,700 சொற்களைக் கொண்ட இந்த அறிக்கையை சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்க தயாரித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இந்த அறிக்கை சிறிலங்கா அதிபரின் ஒப்புதலுக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபரின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னர், இது ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் கையளிக்கப்படும்.
அதற்கு முன்னதாக, சிறிலங்காவின் உயர்மட்டக் குழு புதுடெல்லி செல்லக் கூடும் என்று தெரிகிறது.நொவம்பரில் நடைபெறவுள்ள மீளாய்வுக் கூட்டத்தில் சிறிலங்காவின் மனிதஉரிமைகள் நிலையை மீளாய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
ஏனைய இரு நாடுகளான ஸ்பெய்ன் மற்றும் பெனின் ஆகிய நாடுகள், சிறிலங்கா விவகாரத்தில் அவ்வளவு அக்கறை கொண்டவையல்ல என்பதும், இந்த நாடுகளுடன் சிறிலங்கா இராஜதந்திரத் தொடர்புகளைக் கூட வைத்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இந்தியாவை தன் கைக்குள் போட்டுக் கொள்ளவே சிறிலங்கா அரசாங்கம் மூவர் அணியை புதுடெல்லிக்கு அனுப்பலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, நெருக்கடிகளைத் தீர்க்க இந்த மூவர் அணியே புதுடெல்லியுடன் உறவுகளை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment