Translate

Wednesday, 18 July 2012

பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் கொலை வழக்கின் தீர்ப்புத் திகதி நீதிமன்றத்தினால் அறிவிப்பு


ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் படுகொலை வழக்கின் தீர்ப்பு அடுத்த மாதம் 8 ஆம் திகதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று முன்தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் போது எதிர்த் தரப்பு சட்டத்தரணி க. ஜெயக்குமார் எதிரி சார்பிலான வழக்கின் தொகுப்புரையினை எழுத்து மூலமாக நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

அதனடிப்படையில் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ வழக்கின் தீர்ப்புக்கான திகதியை அறிவித்துள்ளார்.
கடந்த 2008 ம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ம் திகதி கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலுக்கு வழிபாட்டுக்காக சென்ற வேளை, பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரன் கோயில் வளாகத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் படுகொலை வழக்கானது கடந்த மூன்றரை வருடங்களாக தொடர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் 26 ம் திகதி மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசு தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணியான துஷித குமாரகே வழக்கின் தொகுப்புரையினை நீதிமன்றில் முன் வைத்தார்.
அரச தரப்பு தொகுப்புரையினைத் தொடர்ந்து எதிர்த்தரப்பு தொகுப்புரையினை சமர்ப்பிப்பதற்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. அதன்போது எதிர்த்தரப்பு சட்டத்தரணி க. ஜெயக்குமார் எதிரி சார்பாக தொகுப்புரையினை வழங்குவதற்கு கால அவகாசம் கோரியதையடுத்து ஜூலை ஒன்பதாம் திகதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஒன்பதாம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிர்த்தரப்பு சட்டத்தரணி ஜெயக்குமார் சாட்சியான வைத்திய நிபுணர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட குறுக்கு விசாரணை வழக்கு பதிவுகளில் இடம் பெற்றிருக்கவில்லை.
இதனால் எதிரி சார்பான தொகுப்புரையினை எழுத்து மூலமாக சமர்ப்பிப்பதற்கு கால அவகாசம் கோரியிருந்தார். அதனடிப்படையில் நேற்று வரை வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்தும் குறித்த வழக்கு மேல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிர்த்தரப்பு சட்டத்தரணி ஜெயக்குமார் எதிரி சார்பிலான தொகுப்புரையினை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன் போதே வழக்கின் தீர்ப்பிற்கான தினத்தை மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ அறிவித்தார்.
மகேஸ்வரனின் படுகொலை தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது வழக்கின் எதிரி நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டார். எனினும் இந்த வழக்கு தொடர்பான அரச மற்றும் எதிர்த் தரப்பு சார்பான இரண்டு தொகுப்புரைகளும் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment