Translate

Sunday, 15 July 2012

சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் சிறிலங்கா – ‘வொசிங்டன் போஸ்ட்‘


சீனாவின் ஆதரவு போன்ற சவால்களின் மத்தியிலும், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகள் சிறிலங்காவில் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்துவதில் உறுதியாக உள்ளன.” 

இவ்வாறு ‘வொசிங்டன் போஸ்ட்‘ நாளேட்டில் Simon Denyer எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரையை ‘புதினப்பலகை‘க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

மூன்று பத்தாண்டுகளாக தொடர ப்பட்ட உள்நாட்டுப் போரில், உலகின் மிகப் பெரிய, ஆபத்துமிக்க பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்று தோற்கடிக்கப்பட்டதை தொடர்ந்து, இந்து சமுத்திரத் தீவான சிறிலங்காவில் புதிய, பிரகாசமான விடிவொன்று பிறந்திருக்க வேண்டும். 


சிறிலங்காத் தீவின் தற்போதைய பொருளாதாரம் மிகத் துரித வளர்ச்சியடைந்து வருவதுடன், அதன் சுற்றுலாத்துறையிலும் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஆனால் யுத்தம் முடிவுற்று மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், சிறிலங்காத் தீவு தற்போது சர்வதிகாரப் போக்கை நோக்கிச் செல்வதாகவும், இங்கே செயற்படும் ஊடகங்கள் தாக்கப்படுவதுடன், யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுபான்மைத் தமிழ் மக்களின் நிலை மேலும் மோசமடைவதாகவும், இவர்கள் தற்போதும் நாட்டின் இரண்டாந்தர குடிமக்களாக கருதப்படுவதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

அமெரிக்கா மற்றும் இந்தியா என்பன சிறிலங்காவின் பிரதான வர்த்தக பங்காளி நாடுகளாக உள்ள போதிலும், மூன்று ஆண்டுகளின் முன்னர் முடிவுற்ற யுத்தத்தை வேறு விதமாகப் பார்த்தனர். 

இந்த யுத்தத்தில் 7,721 தொடக்கம் 40,000 வரையான மக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 

இந்நிலையில் சிறிலங்காவின் இந்த யுத்த வெற்றி தொடர்பில் இவ்விரு நாடுகளும் வேறுவிதமான அபிப்பிராயங்களைக் கொண்டிருந்ததுடன், சிறிலங்காத் தீவில் யுத்தத்தின் பின்னான மீளிணக்கப்பாட்டு முயற்சிகள் போதியதாக காணப்படவில்லை எனவும், இத்தீவில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் வலியுறுத்திக் கூறின. 

இதேவேளையில், சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுடன் சிறிலங்கா பொருளாதார மற்றும் இராஜதந்திர ரீதியான தொடர்புகளை மிக நெருக்கமாக பேணிவந்த நிலையில், தாம் ஓரங்கட்டப்படுவதாக அமெரிக்க மற்றும் இந்திய அரசாங்கங்கள் தாமாகவே கருதிக் கொண்டன. 

'தற்போது சிறிலங்காவின் பக்கம் காற்று வீசுகின்றது. ஆகவே சிறிலங்கா இதனைச் சரியாகப் பயன்படுத்தி தனது நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்ப விரும்புகின்றது' என லண்டன் King's கல்லூரியில் பாதுகாப்புத் துறைக் கற்கைநெறியைக் கற்பிக்கும் ஹார்ஸ் வி. பான்ற் தெரிவித்தார். 

இந்நிலையானது, சிறிலங்காவின் உள்விவகாரங்களில் செல்வாக்கைச் செலுத்துவதில் இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு பெரிதும் கடினமானதாக இருக்கும். 

அனைத்துலக நாடுகள் மத்தியில் சிறிலங்கா பிரச்சினைகளைக் கொண்டிருப்பதால், அது சீனா மீதே நம்பிக்கை கொள்ள முடியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்' எனவும் ஹார்ஸ் மேலும் தெரிவித்துள்ளார். 

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழர் அதிகம் வாழும் சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களை தமது ஆளுகையின் கீழ் வைத்திருந்த போது, அங்கே நிழல் ஆட்சியை நடத்தி வந்தனர். 

புலிகள் தமிழ் பேசும் மக்களின் உரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக போராடினர். 
அவர்கள் அதற்காக தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டதுடன், வயதில் குறைந்த சிறார்களையும் போராட்டத்தில் பலவந்தமாக இணைத்திருந்தனர். 

அவர்களின் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு மிதவாத தமிழர்கள், சிறிலங்கா அதிபர் ஒருவர் மற்றும் 1991ல் இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஆகியோரும் பலியாகினர். 

இவ்வாறு புலிகளுக்கு எதிரான யுத்தம் பல ஆண்டுகளாகத் தொடரந்ததன் பின்னர், முன்னெப்போதும் இல்லாதவாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச யுத்தத்தை முன்னெடுத்து புலிகளை தோற்கடித்தார். 

புலிகளை அழிப்பதில் குறிக்கோளாக இருந்த அதிபர் மகிந்த ராஜபக்சவால் முன்னெடுக்கப்பட்ட யுத்தம் 2009ல் முடிவுக்கு கொண்டு வரப்பட்டபோது பல பத்தாயிரக்கணக்கான மக்களின் உயிர்கள் இதற்காக விலையாக கொடுக்கப்பட்டன என ஐ.நா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், இது தொடர்பில் அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் யுத்தத்தில் பங்கு கொண்ட இரு தரப்பினரும் பல்வேறு யுத்த மீறல்களை மேற்கொண்டுள்ளதாகவும் ஐ.நா சுட்டிக்காட்டியது. 

விடுதலைப் புலிகள் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தமது கட்டுப்பாட்டிலிருந்த மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதாகவும், சிறிலங்கா இராணுவத்தினர் எவ்வித தயவுதாட்சண்ணியமுமின்றி பொதுமக்கள் வாழிடங்கள் மீது செறிவான எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதுடன், பொதுமக்களுக்கு சென்று சேரவேண்டிய மனிதாபிமான உதவிகளையும் தடுத்து நிறுத்தினர் எனவும் ஐ.நா அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 

பயங்கரவாத யுத்தத்துள் அகப்பட்டுக் கொண்ட 20 மில்லியன் மக்களை அதிலிருந்து மீட்டமை தொடர்பில் சிறிலங்காத் தீவில் வாழும் பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச பிரபலம் பெற்றுள்ள போதிலும், நாட்டில் சமாதானத்தை நிலைநாட்டுவதில் இவர் தவறிவிட்டதாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன. 

சிறிலங்காவின் வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் வாழும் மக்களின் நாளாந்த வாழ்வில் சிறிலங்கா இராணுவத்தின் தலையீடுகள் காணப்படுவதாகவும் இதனால் இங்கு வாழும் மக்கள் மிகமோசமான முறையில் பாதிப்புக்களைச் சந்திப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் தற்போது சிறிலங்கா அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் காணாமற் போவது அதிகரித்து வருவதாகவும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. 

இவ்வாண்டில் சிறிலங்காவின் தென்பகுதியில் மட்டும் 52 பேர் காணாமற்போயுள்ளனர். 
யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து காணாமற் போவோரில் பெரும்பாலானவர்கள் தமிழர்களாவர். 

அத்துடன் அரசாங்கத்தை எதிர்த்து குரல் கொடுக்கும் சிங்கள மிதவாதிகளும் ஆபத்தைச் சந்திக்க வேண்டியுள்ளனர். 

2009ல், சிறிலங்காவில் வெளிவரும் முன்னணிப் பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். 

அதேபோன்று, ஜனவரி 2010ல் கேலிச்சித்திர வடிவமைப்பாளரும், அரசியல் ஆய்வாளருமான பிரகீத் எக்னலிகொட, தனது பணியகத்துக்கு புறப்பட்டுச் சென்றவர், அதற்குப் பின்னர் காணப்படவேயில்லை. 

அதற்கு சில மாதங்களின் முன்னர், ஆட்கடத்தல் சம்பவத்தின் குறியீடாக விளங்கும் வெள்ளை வான் ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கொண்டு வரப்பட்ட எக்னலிகொட பின்னர் வீதியில் தூக்கி வீசப்பட்டிருந்தார். 

இவர் குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்று அடுத்த நாள் விடுதலை செய்யப்பட்ட போதும், அரசாங்கத்தில் நடக்கும் ஊழல் தொடர்பான கருத்துக்களை வெளிப்படுத்தியதற்காக தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவரது துணைவியாரான சந்யா கூறுகிறார். 

சிறிலங்காவில் 2007லிருந்து 23 ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டதாகவும் இவர்களில் மூவர் மட்டுமே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. 
ஊடக சுய-தணிக்கை தொடர்ந்தும் நிலவுவதுடன், ஊடகத் தலையீடுகளும் காணப்படுகின்றன. 

சிறிலங்கா தொடர்பாக பொய்யான தகவல்களை வெளியிட்டதாக சுட்டிக்காட்டி, அண்மையில் சிறிலங்கா காவற்துறையினர் இரு இணையத்தளங்களில் பணிபுரியும் ஒன்பது பணியாளர்களை கைது செய்தனர். 

அத்துடன் இவ்விரு இணையத்தள அலுவலகங்களும் முற்றுகையிடப்பட்டு சோதனையிடப்பட்டன. 

ஊடக சுதந்திரத்தில் தலையீடு செய்தமை தொடர்பில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தனது ஆழ்ந்த அதிருப்தியைத் தெரிவித்திருந்தது. 

அத்துடன் சிறிலங்காவில் தொடரப்படும் ஊடக அடக்குமுறை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டுமெனவும் அமெரிக்கத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்தது. 

ஊடக சுதந்திரத்தைப் பேணுகின்றமை தொடர்பில் 179 உலக நாடுகள் மத்தியில் எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சிறிலங்கா 169வது இடத்திலுள்ளது. 

சிறிலங்காவில் இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள காணாமற் போதல் மற்றும் தலையீடுகள் என்பன பொய்யானவை எனவும் சிறிலங்கா வாழ் மக்கள் அனைத்துலக நாடுகளில் தமக்கான அரசியல் அகதி நிலையை இலகுவில் பெற்றுக் கொள்வதற்காகவே இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். 

'நாட்டில் என்ன நடந்தாலும் அரசாங்கத்தின் மீதே பழி சுமத்தப்படுகிறது' எனவும் பீரிஸ் தெரிவித்துள்ளார். 

யுத்தம் முடிவுற்ற பின்னர், சிறிலங்கா அதிபர் கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவை உருவாக்கிய போது அது தொடர்பாக மனித உரிமை அமைப்புக்கள் மத்தியில் மிகக் குறைந்தளவான எதிர்பார்ப்பே காணப்பட்டது. 

இவ் ஆணைக்குழுவானது சிறிலங்கா இராணுவத்தால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக 18 மாத கால விசாரணையை மேற்கொண்டது. 

ஆனால் இது தொடர்பில் ஒரு சில தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக மட்டுமே இவ் ஆணைக்குழுவானது நம்பகமான விசாரணையை மேற்கொண்டது. 

அத்துடன் போருக்குப் பின்னான மீளிணக்கப்பாட்டை உருவாக்குவதற்கு தேவையான சில பரிந்துரைகளையும் இவ் ஆணைக்குழு முன்வைத்தது. 

இதில் சிறிலங்காவின் வடக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை மீளஎடுத்தல் மற்றும் காணாமற் போனவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுதல் போன்றனவும் இவ் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்டது. 

2010ல் மேற்கொள்ளப்பட்ட தேர்தலில் சிறிலங்கா அதிபர் ராஜபக்ச வெற்றி பெற்றுக் கொண்டதன் பின்னர், தனது அதிகாரத்தை மேலும் அதிகரிப்பதற்கான சில சரத்துக்களை காவற்துறை, நீதி மற்றும் சிவில் சேவைகள் போன்றவற்றில் நடைமுறைக்கு கொண்டு வந்தது மட்டுமல்லாது, அதிபர் தேர்தலில் இரு தடவைகள் மட்டுமே போட்டியிட முடியும் என்கின்ற கட்டுப்பாட்டையும் முடிவுக்கு கொண்டுவந்தார். 

இத்தேர்தலின் பின்னர் தனக்கு எதிராக போட்டியிட்ட சரத் பொன்சேகாவை கைது செய்வதற்கான உத்தரவை ராஜபக்ச வழங்கினார். 

அத்துடன் சரத் பொன்சேகாவுக்கு இரு ஆண்டுகால சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டது. 

சிறிலங்கா அதிபரின் சகோதரர்களில் ஒருவரான கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய இடத்தை தக்கவைத்துள்ளதுடன், பிறிதொரு சகோதரரான பசில், பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும், மூன்றாவது சகோதரர் நாடாளுமன்ற சபாநாயகராகவும் பதவிவகிக்கின்றனர். 

ராஜபக்சவுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் தூதர்களாகவும், பிரதம மந்திரிகளாகவும் கடமையாற்றுகின்றனர். 

இவரது மருமகன் ஒருவர் எயார்லைன்ஸ் விமானசேவைக்கு பொறுப்பாக உள்ளார். 

இந்நிலையில் சிறிலங்காத் தீவில் ஊழல் என்பது உச்ச அளவில் உள்ளதாக வர்த்தகர்களும், சட்டவாளர்களும் கூறுகின்றனர். 

கடந்த மார்ச்சில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இந்தியாவின் ஆதரவுடன் அமெரிக்காவால் நிறைவேற்றப்பட்ட சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தில், சிறிலங்கா கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரப்பட்டது. 

ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக சாட்சியமளித்தவர்களை சிறிலங்கா அரசுக்கு ஆதரவான ஊடகங்கள் 'தேசத் துரோகிகள்' என முத்திரை குத்தி செய்தி வெளியிட்டன. 

இந்த விடயத்தில் சிறிலங்கா மீது மேற்கொள்ளப்பட்ட இந்தியாவின் முயற்சிகளும் தோல்வியடைந்தன. 

இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் சிறிலங்கா அதிபருடனான இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் சந்திப்பில், சிறிலங்கா அதிபர் தமிழ் மக்கள் அதிகம ;வாழும் வடக்குக்கு மட்டுப்படுத்தப்பட்ட தன்னாட்சி உரிமையை வழங்குவது தொடர்பில் வரையப்பட்ட 15 ஆண்டுகால அரசியல் சாசனத்தை மதித்து நடப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார். 

ஆனால் இவ்வாக்குறுதி வழங்கப்பட்ட பின்னர், அதாவது கிருஸ்ணா சிறிலங்காவை விட்டு வெளியேறிய கையோடு இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதியை சிறிலங்கா அதிபர் நிறைவேற்றவில்லை. 

கற்றுக் கொண்ட பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் ஆனால் வெளிநாடுகளின் அழுத்தத்தின் கீழ் இப்பரிந்துரைகளை நிறைவேற்றாது எனவும் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்திருந்தார். 

சிறிலங்கா அதிபர் ராஜபக்சவின் சொந்த இடமான அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படும் புதிய ஆழ்கடல் துறைமுகம் சீன நிதியுதவியுடனேயே அமுல்படுத்தப்படுகிறது. இதற்காக பெருந்தொகையான நிதி ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் தலையீடு அதிகரிப்பதை இந்தியா அடியோடு மறுக்கிறது. அதை இந்தியா ஒருபோதும் விரும்பவில்லை. 

சீன ஆயுதங்கள் சிறிலங்காவின் உள்நாட்டுப் போரை நிறைவுக்கு கொண்டு வர உதவின. 

தற்போது சீனாவின் ஆதரவு சிறிலங்கா அரசாங்கம் தனது எதிர்காலத்தை வரையறுத்துக் கொள்வதற்கு அனுமதிக்கின்றது. 

இவ்வாறான சவால்களின் மத்தியிலும், அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும் சிறிலங்காவில் தொடர்ந்தும் செல்வாக்குச் செலுத்துவதில் உறுதியாக உள்ளன என இராஜதந்திரிகளும் அதிகாரிகளும் தெரிவிக்கின்றனர். 

மேற்குலகிலிருந்து முற்றாகப் பிரிந்து பர்மாவின் பாதையை தொடர்வதையோ அல்லது மேலும் சீனாவின் பிடிக்குள் சிக்குண்டு கொள்வதையோ சிறிலங்கா விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment