Translate

Monday, 30 July 2012

கேட்பது வடக்கு மாகாணத் தேர்தலை; திணிப்பதோ தேவையில்லாத தேர்தலை! திருமலையில் ரணில் ஆவேசம்


கேட்பது வடக்கு மாகாணத் தேர்தலை; திணிப்பதோ தேவையில்லாத தேர்தலை! திருமலையில் ரணில் ஆவேசம்
வடக்கிற்கான தேர்தலை நடத்துங்கள் எனக் கோரி நிற்கின்றோம். ஆனால், அரசு தேவையில்லாத தேர்தலை மக்கள் மீது திணிக்கின்றது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஊக்குவிக்கவென தேர்தல் பிரசாரத்துக்காக நேற்றுமுன்தினம் சனிக்கிழமை காலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அந்தக்கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருண நாயக்க ஆகியோர் திருகோணமலை சென்றனர்.

அங்கு நகராட்சிமன்ற ஒன்று கூடல் மண்டபத்தில் நடை பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ரணில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது: கிழக்கு, வடமத்திய, சப்ரகமுவ ஆகிய மூன்று மாகாணங்களுக்கான தேர்தலை மக்களோ அல்லது எதிர்க்கட்சியோ வேண்டி நிற்கவில்லை.

அதேசமயம் வட மாகாணத்திற்கான தேர்தலை நடத்துங்கள்; அந்த மக்களுக்கு தங்களது முதலமைச்சரை, உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் உரிமைகளை வழங்குங்கள் என்றே கூறி வருகின்றோம்.

ஆனால், அரசு இன்று தேவையில்லாத தேர்தல்களைத் திணித்து வருகின்றது. பல்வேறு பொய்களை அரசு கூறிவருகின்றது. கிழக்கு அபிவிருத்தி கண்டுள்ளது என்று அரசு கூறிவருகிறது.

இந்த அபிவிருத்திகள் 2002 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியின் போது டோக்கியா மாநாட்டில் முன் மொழியப்பட்ட ஆலோசனைகள் தான். அவையே இன்றைய அபிவிருத்திகள். அங்கு பெறப்பட்ட பணத்தைத் தமக்கு சாதகமான மாகாணசபையை உருவாக்கி, செலவு செய்கின்றது இந்த மஹிந்த அரசு.

இந்தக் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பிள்ளையான், ஹிஸ் புல்லா அணிகளைத் தங்களுடன் சேர்த்து ஓர் அணியாகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தனி ஓர் அணியாகவும் களத்தில் இறக்கி நாடகமாடுகின்றது இந்த அரசு.

முஸ்லிம்களின் வாக்குகளைக் கவருவதற்கு பல பொய்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது மஹிந்த அரசு. ஆனால், இந்த அரசு தம்புள்ள பள்ளிவாசல் உடைப்பு குறித்து சத்தமில்லாமல் இருந்துள்ளது. எனவே, இவ்வாறு மக்களை ஏமாற்றும் வெற்றிலைக்கோ அல்லது மரத்திற்கோ அளிக்கப்படும் வாக்கு முட்டாள்களுக்கே போய்ச்சேரும். எனவே, மக்களே புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள் என்றார்.

No comments:

Post a Comment