கொழும்பு: எதிர்வரும் சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் ஆறுமுகன் தொண்டமானுடன் மனோ கணேசன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதை 'வெட்கக்கேடான அரசியல் நடவடிக்கை' என இலங்கையின் ஜாதிக ஹெல உறுமயக் கட்சி விமர்சித்துள்ளது.
இதற்குப் பதிலளித்துப் பேசிய ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன், "சப்ரகமுவ மாகாணத்தில் தமிழ் வாக்குகள் சிதறடிக்கப்படுவதைத் தடுத்துநிறுத்தி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் தமிழ் மக்களின் ஜனநாயகப் பிரதிநிதித்துவங்களை உறுதிப்படுத்த நாம் எடுத்துள்ள முயற்சியை வெட்கக்கேடான அரசியல் என்று கூக்குரல் இடுகிறது, ஜாதிக ஹெல உறுமய. புத்தரையே தலைகுனிய வைக்குமளவிற்கு இனவாத, மதவாத அரசியல் நடத்தும் வெட்கங்கெட்ட கட்சியான ஹெல உறுமய, வெட்கம் பற்றிப் பேசுவது வேடிக்கையான விடயமாகும்" என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "கீரியும் பாம்பும் போல் இரு துருவங்களான மனோ கணேசனும் ஆறுமுகன் தொண்டமானும் எப்படி இணைய முடியும் என ஜாதிக ஹெல உறுமய கேள்வி எழுப்பியுள்ளது. மக்களுக்கு நன்மை நடக்க வேண்டுமானால் மனோவும் தொண்டமானும் அல்ல, சிங்கமும் புலியும் கூட இணையும் காலம் வரலாம். இதைப் புரிந்துகொண்டு மதவாத, இனவாத, அடிப்படைவாத அரசியல் செய்யும் கட்சிகள் என்னைப் பார்த்து விமர்சனம் செய்து நேரத்தை வீணடிப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால், நான் விமர்சனங்களைக் கண்டு ஓடி ஒளியும் கோழை அல்ல. நாலு பேருக்கு நல்லது நடக்கும் என்றால், நாளை நான் ஹெல உறுமயவுடனேயே பேச்சுவார்த்தை நடத்தத் தயார்" என்று தெரிவித்துள்ளார்.
"இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு இடையிலான உண்மையான இன ஒற்றுமைக்குத் தடையாகவும், ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரப் பரவலாக்கலுக்கு எதிராகவும் நின்று, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதஸ்தலங்களை அகற்றும் தேசிய இயக்கத்தை நடத்தும் கட்சி, இந்த இன மதவாதக் கட்சியாகும். இத்தகைய வெட்கங்கெட்ட கொலைவெறி அரசியல் கொள்கைகளை முன்னெடுத்துவரும் ஜாதிக ஹெல உறுமய தியானத்தில் இருந்து எழுந்து வந்து நம்மை குற்றம் சாட்டுவது கைக்கொட்டிச் சிரிக்கத்தக்க வேடிக்கையே ஆகும்" என திரு. மனோ கணேசன், ஜாதிக ஹெல உறுமயக் கட்சியின் செயற்பாடுகளை வன்மையாகச் சாடியுள்ளார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், "சப்ரகமுவ மாகாணத்தில் அரசியல் அனாதைகளாக வாழும் அப்பாவித் தமிழ் மக்களுக்கு உரிய நியாயமான குரலை உறுதிப்படுத்தவேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் சப்ரகமுவ சிவில் சமூகப் பிரதிநிதிகளின் வேண்டுகோளை ஏற்று, பல்வேறு விட்டுக்கொடுப்புக்களின் அடிப்படையில் பொதுப் பட்டியலில் நாம் போட்டியிடுகின்றோம். நீண்டகாலமாக ஒதுக்கப்பட்ட மாவட்டங்களாக இருக்கும் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மக்கள் குறிப்பாக, அப்பாவித் தோடந்த் தொழிலாளர்கள் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். அவர்களது பாதுகாப்பு, கல்வி, தொழிலுரிமை ஆகிய பல்வேறு பிரச்சினைகள் பற்றிக் கேட்பாரற்ற நிலைமையே காணப்படுகிறது.
சப்ரகமுவவில் மிகக் குறைந்தளவே தமிழ் வாக்குகள் உள்ளன. நமது வாக்குகளை ஒன்று திரட்டினால் மட்டுமே நமது பிரதிநிதித்துவத்தை அங்கு நாம் உறுதிப்படுத்த முடியும். கடந்த காலங்களில் நாம் பிரிந்து நின்று வெவ்வேறு அணிகளாகப் போட்டியிட்ட போது நமது தமிழ் மக்களின் வாக்குகள் சிதறின. நம்மில் எவரும் வெற்றிபெறவில்லை. ஆனால், தமிழர் வெற்றி பெறவில்லை என்பதற்காக மாகாண சபையில் அங்கத்தவர் எண்ணிக்கை குறைந்து விடுவதில்லை.
உண்மையில், நமது பிரதிநிதித்துவத்துக்கான சந்தர்ப்பத்தையும் அபகரித்துக்கொண்டு பெரும்பான்மை இன வேட்பாளர்கள் வெற்றி பெற்று, மாகாண சபையில் அமைச்சர்களாக அமர்ந்து விடுகிறார்கள். இதுதான் நேற்றுவரை உள்ள நடைமுறை. இம்முறை இந்த நடைமுறையை மாற்றி, நமது நியாயமான பிரதிநிதித்துவத்தை ஜனநாயக ரீதியாகப் பெற நாம் முயல்கிறோம். தமிழ் வாக்குகள் எடுப்பார் கைப்பிள்ளையாகச் சிதறுவதைத் தடுக்கவே நாம் முயல்கின்றோம்.
உண்மையில் இதுதான் இன்று ஜாதிக ஹெல உறுமயவிற்கு வலிக்கிறது. அது அவர்களது இனவாத வலி. ஆனால், நமது மக்கள் கேட்பாரற்று அனாதைகளாகத் துன்பப்படும்போதுதான் எனக்கு வலிக்கிறது. அது எனது இன உணர்வின் வலி. அதனால்தான், கொழும்பிலும் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் நுவரெலியாவிலும் இரத்தினபுரியிலும் என எந்த ஒரு பேதமும் இல்லாமல், நாடு முழுக்கவும் உள்ள தமிழ் மக்களுக்காக எங்கள் குரல் ஒலிக்கின்றது" என்று ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் திரு மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment