நமது மலையக தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர்கள் நமது தமிழ் வாக்குகளை மாத்திரம் பெற்று இரத்தினபுரி மாவட்டத்திலும், கேகாலை மாவட்டத்திலும் வெற்றி பெற முடியும். ஆனால் வெற்றிலை சின்னத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலும், யானை சின்னத்தில் ஐக்கிய தேசிய கட்சியிலும் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டுமானால், அவர்கள் சிங்கள வாக்குகளையும் பெற்றால் மட்டுமே வெற்றி பெற முடியும். இந்த இரண்டு வழிமுறைகளில் எது நடக்க கூடியது என்பது புத்தியுள்ள இரத்தினபுரி தமிழர்களுக்கு நன்கு தெரியும்.
எனவே ஆளும் கட்சியிலும், ஐக்கிய தேசிய கட்சியிலும் இன்னமும் இருக்கின்ற சில தமிழ் அரசியல்வாதிகள், தமது தமிழ் வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும் என உண்மையிலேயே விரும்பினால், தங்கள் கட்சிகளுக்கு வாக்களிக்கும் சிங்கள மகா ஜனங்களின் விருப்பு வாக்குகளையும் தமது கட்சி தமிழ் வேட்பாளர்களுக்கு பெற்று கொடுக்கட்டும். நான் அதை வேண்டாம் என்று சொல்லவில்லை. எமது மலையக தமிழ் கூட்டமைப்பு வேட்பாளர்கள் தமிழ் வாக்குகளை மாத்திரம் பெற்று நிச்சயம் வெற்றி பெறுவார்கள். அதற்கு மேலதிகமாக பெரும்பான்மை கட்சி தமிழ் வேட்பாளர்களும், சிங்கள வாக்காளர்களின் வாக்குகளையும் பெற்று வெற்றி பெற்றால், நல்லதுதானே?
ஆனால் இரத்தினபுரி, கேகாலை மாவட்ட தமிழ் வாக்குகளை மாத்திரம் பெற்று தமிழ் பிரதிநிதித்துவம் பெறமுடியும் என உண்மைக்கு புறம்பாக பேசி, தமிழ் வாக்குகளை சிதறடிக்க வேண்டாம் என ஆளும் கட்சி - ஐக்கிய தேசிய கட்சி தமிழ் அரசியல்வாதிகளுக்கு திட்டவட்டமாக சொல்கிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
காவத்தை சதொச மண்டபத்தில் மலையக தமிழ் கூட்டமைப்பின் பிரச்சார கூட்டம் நேற்று நடைபெற்றது. மலையக மக்கள் முன்னணி தலைவி சாந்தினி சந்திரசேகரன், ராதாகிருஷ்ணன் எம்பி, இதொகா உப தலைவர் ராம், ஜதொகா பொதுசெயலாளர் முரளி ரகுநாதன், வேட்பாளர்கள் ரூபன் பெருமாள், எம். சந்திரகுமார், எஸ். மாசிலாமணி ஆகியோர் உட்பட பெருந்தொகையானோர் கலந்துகொண்ட கூட்டத்தில் மேலும் உரையாற்றிய மனோ கணேசன் கூறியதாவது,
இரத்தினபுரியில் ஒரு தமிழ் வேட்பாளர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் போட்டியிடுகிறார். இவர் வெற்றி பெறாவிட்டாலும், இவருக்கு போனஸ் ஆசனம் வழங்கப்படும் என பிரச்சாரம் செய்யப்படுகிறது. இவருக்கு ஆதரவாக நாமல் ராஜபக்ச எம்பி பிரச்சாரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த வேட்பாளர் இன்று பலாங்கொடை பிரதேச சபையில் ஆளும் கட்சி உறுப்பினர். கடந்த காலங்களில் இவருக்கு இந்த பிரதேச சபையில் உப தலைவர் பதவி தருவதாக சொன்னார்கள். ஆனால் அது கிடைக்கவில்லை. பிரதேசசபையில், பதவி தர முடியாதவர்கள்தான், இன்று மாகாணசபையில் தமிழனுக்கு போனஸ் ஆசனம் தருவதாக பிரச்சாரம் செய்கிறார்கள். இது கூரையேறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போய் சூரியனை பிடிக்கும் கதை.
எனவே இந்த கதையெல்லாம் தமிழ் வாக்குகளை பெறுவதற்காக செய்யப்படும் பொய் பிரச்சாரங்கள் என்பதை இரத்தினபுரி தமிழர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
இந்த விடயத்தில் ஆளுகின்ற கட்சியும், என்றாவது ஒருநாள் ஆளுவோம் என கனவு காணும் கட்சியும், ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இந்த நாட்டில் நடைமுறையில் உள்ள தேர்தல் சட்டம் காரணமாக நாம் சில வேளைகளில் இவர்களுடன் சேர்ந்து தேர்தல்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் இந்த இரண்டு கட்சிகளை பற்றியும் நாம் நன்கு தெரிந்துகொண்டு செயற்படவேண்டும்.
நாம் கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு, போராடி, வீடு வீடாக சென்று பேசி, எமது மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினால், அதையும் தட்டி பறிக்க இந்த பெரும்பான்மை கட்சிகள் முயல்கின்றன. எனவே இரத்தினபுரி தமிழ் வாக்காளர்கள், இந்த பெரும்பான்மை கட்சிகள் தொடர்பில் கவனமாக இருக்க வேண்டும். தமிழ் வாக்குகளை காவு கொடுக்க கூடாது.
இன்று நடைமுறையிலுள்ள தேர்தல் முறைமை, சிறிய கட்சிகளுக்கு சாதகமானது. இதை பயன்படுத்துகொண்டுதான் கடந்த மாகாணசபை தேர்தலில், இரத்தினபுரியிலும், கேகாலையிலும் ஜேவிபி, 9,500 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றது. எனவே சுமார் 10,000 ஆயிரம் வாக்குகள் பெற்று தமிழ் பிரதிநிதித்துவம் பெரும் சாத்தியம் எமக்கு இருக்கின்றது. அதை நாம் ஏன் பயன்படுத்திக்கொள்ள கூடாது? இதுதான் எனது கேள்வி.
கடந்த தேர்தலின் போது, இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் நாம் ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிட்டோம். நமது தமிழ் வேட்பாளர்களுக்கு,சிங்கள விருப்பு வாக்குகளையும் பெற்று தருவதாக அன்று உறுதி வழங்கப்பட்டது. ஆனால் கடைசியில், நமது தமிழ் வாக்காளர்களின் விருப்புவாக்குகளை சிங்கள வேட்பாளர்கள் கேட்டு வாங்கி கொண்டார்கள். நமக்கு சிங்கள விருப்பு வாக்குகள் வரவில்லை. இதுதான் நடந்தது. எனவேதான் இம்முறை நாம் தனித்து போட்டியிட தீர்மானித்தோம் .
இந்த முறையும், யானை, வெற்றிலை சின்னங்களில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள், தமிழ் வாக்குகளை சிங்கள வேட்பாளர்களுக்கு வாங்கி கொடுக்கும் வேலையை மட்டுமே செய்கிறார்கள். அவர்களால், சிங்கள வாக்குகளை பெற்று வெற்றிபெற முடியாது. ஏனென்றால் சிங்கள வாக்காளர்கள், தமிழ் வேட்பாளர்களுக்கு தமது விருப்பு வாக்குகளில்ஒன்றையேனும் வழங்க தயார் இல்லை. இதுதான் இன்றைய அரசியல் யதார்த்தம்.
No comments:
Post a Comment