Translate

Tuesday, 21 August 2012

டெசோ தீர்மானமோ தமிழக எதிர்ப்போ இலங்கையை எவ்விதத்திலும் பாதிக்காது: கெஹெலிய


டெசோ தீர்மானமோ தமிழக எதிர்ப்பு நடவடிக்கைகளோ இலங்கையை எவ்விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் காணப்படக் கூடிய அனைத்து சவால்களிலும் இலங்கை வெற்றி கொள்ளும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளதுடன் இந்திய மத்தியரசுடன் மிக நெருங்கிய அந்நியோன்னிய உறவே காணப்படுகின்றது. எனவே தமிழக எதிர்ப்புகள் குறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது. 


இது குறித்து அமைச்சரவை பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கூறுகையில், 

தமிழகத்தில் அண்மையில் நடைபெற்ற டெசோ மாநாடு முற்றிலும் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விடயம். எனினும் பிராந்திய அரசின் இவ்வாறான நடவடிக்கைகள் குறித்து இந்திய மத்தியரசு இதை விட விழிப்புடனும் பொறுப்புடனும் செயற்பட்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும் இந்திய மத்தியரசுடன் மிக நெருங்கிய உறவே தற்போதும் காணப்படுகின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கையின் இறையாண்மைக்கோ சுயாதீன தன்மைக்கோ களங்கம் ஏற்படும் வகையில் இந்தியா நடந்து கொள்ளாது என்ற நம்பிக்கை எமக்குள்ளது. 

இலங்கை அரசாங்கத்தை பொறுத்த வரையில் வேறொரு நாட்டின் பிராந்திய அரசுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. டெசோவின் தீர்மானங்கள் ஐ.நா. விற்கு கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இது குறித்து அரசாங்கம் அலட்டிக் கொள்ளாது ஐ.நா. வில் இலங்கைக்கு எதிராக எந்தவிதமான தீர்மானங்கள் முன் எடுக்கப்படாலும் அதனை சிறந்த வகையில் எதிர்கொள்வோம். 

முப்பதாண்டு கால உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் வடக்கு கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்களை அனைத்து தரப்புக்களும் பார்வையிட முடியும். அது மட்டுமன்றி நல்லிணக்கத்திற்காக அரசு முன்னெடுக்கும் பல்வேறு வகையான நடவடிக்கைகளும் மிகவும் வெளிப்படையாகவே இடம் பெறுகின்றது. எனவே எவ்விதத்திலும் இலங்கையை எவராலும் குறை கூற இயலாது எனக் கூறினார்.

No comments:

Post a Comment