Translate

Tuesday, 21 August 2012

போராடுவதைத் தவிர வேறு வழியில்லை

போராடுவதைத் தவிர வேறு வழியில்லை
essay"இலங்கையில் தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான போராட்டங்களால் உடனடிப் பயன்கள் ஏதும் இல்லாத போதும், மீண்டும் மீண்டும் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோகணேசன். அவருடனான உரையாடல் இது...
இப்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஜனநாயகவழிப் போராட்டங்களின் அடுத்த கட்டம் எவ்வாறு அமைய வேண்டுமென நினைக்கின்றீர்கள்?
தற்போதுள்ள நிலையில், தமிழர்கள் இரண்டு வகையான அரசியல் தெரிவு முறைகளை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில் வாழ்கின்றனர்.ஒன்று, எதேச்சாதிகாரத்தை ஏற்று அடிமையாக வாழ்ந்து, இனம் அழிந்து போவது.
 
மற்றையது, ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை மெல்ல மெல்ல முன்னெடுத்து,   வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் அதனைப் பரவலடையச்செய்து எதேச்சாதிகார அரசிடமிருந்து உரிமைகளை வென்றெடுத்தல்.
 
இவை இரண்டும்தான் இப்போதைக்கு நமக்கு முன்னுள்ளவை. ஏனையவை அனைத்தும் உப வழிமுறைகளே. அமெரிக்கா, இந்தியா அல்லது சர்வதேச சமூகம் இதற்குத் துணையாக இருக்க முடியும். 
 
இப்போது வடக்கில் மேற்கொள்ளப்படும்  ஜனாநாயக ரீதியிலான போராட்டங்களில்  தெற்கிலிருந்து எமது பிரச்சினையை விளங்கிக் கொள்ளக்கூடியவர்கள் கலந்துகொள்கின்றமை  குறிப்பிடத்தக்க ஒரு விடயம். இது வரவேற்கத்தக்கது. அவர்களாலும்கூட, தமிழர்களால் முன்னெடுக்கும் போராட்டங்கள் பலமானதாக இருந்தால் மட்டுமே  துணையாக இருக்க முடியும்.
 
 
30 வருடப் போர், அதனோடு இணைந்த பயம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் தெருவில் இறங்கி ஜனநாயக ரீதியில் போராடுவது சாத்தியமா? மக்களை பயத்திலிருந்து வெளியில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை  அரசியல் கட்சிகள் மேற்கொண்டனவா?
 
இது ஆரோக்கியமான விமர்சனம். பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஏனைய கட்சிகள், அமைப்புகள் இருக்கின்றன. இங்கிருக்கும் இந்த அரசியல் கட்சிகள் தங்களை ஒரு தேர்தல் அரசியல் கட்சிகள் அல்லாமல் தேசிய விடுதலை இயக்கம் என்ற கட்டத்துக்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். அந்த வளர்ச்சியின் ஊடாகத்தான் போராட்டங்களை விரிவுபடுத்த முடியும். இலங்கையில் மட்டும் 40இற்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன.  
 
பெரும்பாலான தென்னிலங்கைக் கட்சிகள் பொருள்களின் விலையேற்றம், எரிபொருள் கலப்படம், எஸ்.எல்.பீ.எல். பிரச்சினை, இசற் புள்ளிப் பிரச்சினை, நுரைச்சோலை அனல்மின் நிலையப் பிரச்சினை போன்றவற்றுக்கு எதிராகத்தான்   போராடுகின்றன. 
 
வடக்கின் நிலைமை வேறு.  தமிழர் பூர்வீக நில அபகரிப்பும், சமீபகால வரலாற்றில் ஒப்பிட்டு பார்க்க முடியாதளவுக்குப் படுகொலைகளையும் சந்தித்த நிலம் இது. உலகம் படுகொலை என்றவுடன் சிரியாவையும் லிபியாவையும், எகிப்தையும்தான் திரும்பிப் பார்க்கின்றது. ஆனால் அந்த மூன்று நாடுகளில் நடந்திருக்கக் கூடிய படுகொலைகள் மிக மோசமானவை. ஆகவே இந்த மாதிரியான எதேச்சாதிகாரப் போக்கைக் கண்டித்து போராடக் கூடியளவுக்கு இங்கு வாழும் பாதிக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் வலுப்பெற வேண்டும். கட்சிகளிடையே உள்ளக ஐக்கியம் வளரவேண்டும். அனைத்துக் கட்சிகளும் அரசியல் இயக்கமாக மாறவேண்டும்.
 
எல்லாக் கட்சிகளுடனும் தொடர்பு வைத்திருப்பவர் என்ற வகையில்,  எந்தக் கட்சி அரசியல் இயக்கமாக மாறக்கூடிய தகுதியைக் கொண்டுள்ளது என நினைக்கிறீர்கள்?
 
இதற்குப் பதிலளிப்பது இந்த இடத்தில் சிரமமானது. எங்களைப் பொறுத்தவரையில், உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்கு கைகொடுப்போம் என்ற அடிப்படையில், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணைத்து, தென்னிலங்கையில் இருக்கின்ற முற்போக்குக் கட்சிகளுக்கும், இங்கிருக்கின்ற   கட்சிகளுக்கும் இடையில் பாலமாகச் செயற்பட்டு போராட்டங்களை முன்னெடுப்போம். 
 
அதிலும் தலைநகரில் இருந்து உரிமைக்குரல் கொடுப்பது, யாழ்ப்பாணத்திலிருந்தோ அல்லது வன்னியிலிருந்தோ கொடுக்கும் அழுத்தத்தை விட அதீத பலம் கொண்டது. சர்வதேசத்தை வலுவாகச் சென்றடைகிறது.
 
எதேச்சாதிகாரத்துக்கு எதிராக மக்களை போராடச் செய்வதற்கு முன்னர், கட்சிகளை இணைத்துப் போராடுதல் சாத்தியமா?
 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் உள்ளூராட்சி, நகராட்சி,பிரதேசசபை உறுப்பினர்களும்தான் இந்த மக்களை வழிநடத்தக்கூடிய தலைவர்கள்.  தனிநபர்கள் அல்லர். கிரமமாகத் திட்டமிட்டமுறையில் இவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அண்மையில் நிமலரூபன்,டெல்றொக்சன் கொலை தொடர்பில்  போராட்டம் நடத்தினோம். இது போன்ற போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். 
 
அதேவேளை, இதற்கும் அப்பால் சென்று ஒடுக்குமுறை, நில அபகரிப்பு, அரசியல் கைதிகளின் பிரச்சினை, மீனவரின் வாழ்வாதாரப்  பிரச்சினை, சிங்களக் குடியேற்றம், இராணுவ கட்டடங்கள் அமைப்பு, மீள்குடியேற்றம், வன்னி விதவைப் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகள் இதுமாதிரியான அன்றாடப் பிரச்சினைகளை  முன்நிறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும். 
 
இப்போது நாம் அரசியல் தீர்வு பற்றி பேசவரவில்லை. 13 +அல்லது 18 திருத்தச் சட்டம் பற்றியும், அல்லது ஐக்கிய இலங்கையா? சமஷ்டியா? தனிநாடா? என்பதைப் பற்றி அரசும், சர்வதேச சமூகமும் பேசிக்கொள்ளட்டும். மக்கள் எதிர்கொள்ளும் அன்றாட மனித உரிமைகள் பிரச்சினைகள்  பற்றிப் பேச இந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஏனையவர்களும் கிரமமாக முன்வர வேண்டும். செயற்பட வேண்டும். 
 
வடக்கு, கிழக்கு ஆகிய இரண்டு பகுதிகளிலும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து அடையாள உண்ணாவிரதங்களை  நடத்த வேண்டும்.  யாழ்ப்பாணம், வவுனியா,  முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, கிளிநொச்சி, மட்டக்களப்பு என  தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட வேண்டும். இந்த உண்ணாவிரதப் போராட்டங்களில் முன்னிறுத்தப்படும் விடயங்களை உலகத்தின் கவனத்துக்கு கொண்டுவர வேண்டும். தலைமைகள் போராடத் தொடங்கினால் மக்கள் முன்வருவார்கள். அது அல்லாமல் கட்சிகள் ஒரு போராட்டத்தை நடத்திவிட்டு, மக்கள் வரவின்மையை குறைசொல்வதோ, விமர்சிப்பதோ நியாயமாக அமையாது.
 
அடிக்கடி போராட்டம் நடத்தினால் மக்கள் சலிப்படைய வாய்ப்பு இருக்கின்றதே?
 
அதற்கு வாய்ப்பில்லை. பிரச்சினைகள் மலைபோல் இருக்கும் போது போராடித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லையே! அரசியல் கைதிகள் படுகொலை, நில அபகரிப்பு போன்றவற்றை மட்டும் வைத்துப் போராடாமல், அதற்கும் அப்பால் சென்று ஒட்டுமொத்த அடக்கு முறைக்கும் எதிராக, தமிழினத்தின் இன்றைய துயரை ஏனைய மக்களுக்கும், உலகத்தவருக்கும் காட்டுவதற்காகத் தலைமைகள் ஒன்றுசேர வேண்டும். 
 
இது போன்ற போராட்டங்களில் தமிழர் தரப்பின் அனைத்துப் பிரதிநிதிகளும் கலந்துகொள்வது அவசியம். அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரு மேடையில் அமர்ந்திருந்து சத்தியாக்கிரகம் நடத்தினால், அது மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியைக் கொடுக்கும். அவ்வாறான எழுச்சிமிகு போராட்டங்கள் ஊடாகத்தான் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். 
 
இப்போதைய நிலையில் தமிழ் மக்களுக்குப் போராடுவதைத் தவிர,  வேறு வழியில்லை. அதைத்தான் சர்வதேச சமூகமும் சொல்கிறது. "நீங்கள் ஒன்றுமே செய்யாமல் அனைத்தையும் எம்மிடமிருந்து எதிர்பார்ப்பீர்களானால்,  நாங்கள் சொல்வதைத்தான் செய்ய வேண்டும்'' என சர்வதேசம் எதிர்பார்க்கின்றது. இந்தியாவும் அதையே சொல்கின்றது.  
 
 நாம் ஜனநாயக ரீதியாகப் போராட்டங்களை முன்னெடுத்தால், அமெரிக்காவும், இந்தியாவும் எம்மிடம் வரும். எமது சார்பில் அந்த நாடுகளே அரசுடன் பேசும் வாய்ப்புகள் உருவாகலாம். அதுமட்டுமன்றி, இலங்கையில் போராட்டங்கள் நடத்தப்படுகின்ற அதேவேளையில், புலம்பெயர் நாடுகளிலும் அதற்கு ஆதரவான சாத்வீக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதைத் தவிர எமக்கு வேறு வழியிருப்பதாகத் தெரியவில்லை.
 
முற்போக்குச் சிங்கள சக்திகளுக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு எப்படி? அதன் மூலம்  நாம் எதனை அடைய முடியும்?
 
என்னால் மூன்று மொழியிலும் சேவையாற்ற முடிவதனால் சிங்கள மக்களுக்கு தமிழரின் பிரச்சினைகளைச் சொல்லமுடியும். அண்மையில் கூட இது சம்பந்தமாக சிங்கள தொலைக்காட்சிக்கு விளக்கவுரை ஒன்றை  வழங்கியிருந்தேன். தினசரி இரண்டுக்கு மேற்பட்ட சிங்கள ஊடகங்களில் நேரடியாகக் கலந்துகொண்டு கருத்துப் பகிரும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.  இதன் மூலமாக அங்குள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள், ஜனநாயகவாதிகள் மத்தியில் எமக்கு ஓர் ஆதரவுத்தளம் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மறுபக்கத்தில் மஹிந்தராஜபக்ஷவின் அடக்குமுறை ஆட்சி காரணமாக மனம் வெதும்பியிருக்கும் சிங்கள மக்களை எமக்குச் சார்பாகத் திரட்டிக் கொள்ளலாம். தென்னிலங்கை முற்போக்கு சக்திகளின் தளம் பெரியளவானதாக இல்லாவிட்டாலும்,  உறுதிவாய்ந்த, மன வைராக்கியம் கொண்ட தளமாக உருவாகிவருகிறது. 
 
புலம்பெயர் தமிழர் போராட்டங்கள்  இங்குள்ள தமிழ் அரசியல் கட்சிகளால்  கண்டு கொள்ளப்படவில்லையே?
 
அது கவலைக்குரியது. துரதிஷ்டம். சகித்துக்கொள்ள முடியாதது. புலம்பெயர்தளம், இலங்கை (வடகிழக்கு)  தமிழகம் இந்த மூன்றும் போராட்ட ரீதியாக ஒரே நேர்கோட்டுக்கு வரவேண்டும். இந்த மூன்று தளங்களுக்கும் இடையில் ஓர் ஒருங் கிணைப்பு அவசியம். அது உடனடியாகச் செய்யக்கூடிய தேவை.
 
அதை யார் செய்வது?
 
அது கேள்விக்குரியது. தமிழ் அரசியல் தலைவர்கள் தான் செய்ய வேண்டும். அதற்காக ஒரு ஊக்குவிப்பான முன்மொழிவை உதயன் முன்னெடுக்க வேண்டும்.அப்படியொரு முன்மொழிவை வைத்தே டெசோவை கருணாநிதி நடத்தினார். ஆனால் அதை அனைவருமே  நீங்கள் உட்பட விமர்சித்தீர்களே.
 
டெசோ மாநாட்டில் நாம் கலந்துகொள்ளாமை தொடர்பில் உரிய தரப்பினருக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டோம். நாம் அறிவித்த பின்னரே ஏனைய தமிழ்க் கட்சிகளும்  அறிவித்தன என நினைக்கிறேன். நாம் தமிழகக் கட்சிகள் ஈழத் தமிழர் குறித்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விமர்சிப்பதில்லை. அது எமது நிலைப்பாடு. அவர்கள் தமது அரசியல் நலனுக்காகவோ அல்லது தமிழர் பிரச்சினையில் வைத்திருக்கும் உண்மைத் தன்மைக்காகவோ  செய்யும் போராட்டங்கள், மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழுத்தங்களை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே அதை நாம் விமர்சிப்பதில்லை.  ஆனால் இந்த விடயத்தில் தவிர்க்க முடியாதபடி சில வார்த்தைகள் சொல்லவேண்டியிருந்தது. இது தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சியால் மட்டும் நடத்தப்பட்ட மாநாடு. ஈழப் பிரச்சினை பற்றி அதிகம் கதைக்கும் ராமதாஸோ, சீமானோ, வைகோவோ, நெடுமாறனோ அல்லது முக்கிய எதிர்கட்சிகளான, பாரதிய ஜனதா கட்சி, அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சி, தி.மு.கவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் என எந்தக் கட்சியுமே இந்த மாநாட்டோடு    சம்பந்தப்பட்டிருக்கவில்லை.  ஆகவே இது ஒரு தனிக்கட்சியின் மாநாடு. ஆகையினால் தமிழகத்தின் உள்ளகக் கட்சி போட்டா போட்டி அரசியலில் நேரடியாக நாம் சம்பந்தப்படவிரும்பவில்லை. 
 
இது போன்ற தமிழக உள்கட்சி அரசியலை நீங்கள் சாதகமாக கையாளாகாதவரை இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாதல்லவா?
 
உண்மையானதுதான். அதில் நாம் கலந்து கொண்டிருப்பின் வரும் தீமைகளை விட, கலந்துகொள்ளாததால்  நாம்  அடைய உள்ள நன்மைகள்தான் அதிகம். தமிழக கட்சிகளிடமிருந்து இன்று தூர விலக்கிவைக்கப்பட்டிருப்போம். போகாததால் எமது நிலைப்பாட்டை அவர்கள் புரிந்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.  ஆகவேதான் நாம் தெளிவாக சொல்லியிருந்தோம். விரைவிலே அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய ஈழ ஆதரவு மாநாடு நடைபெற வேண்டும். அதில் தமிழகத்தின்  இளைஞர்களும், மாணவர்களும் கூட உள்வாங்கப்பட வேண்டும். அப்படியொன்று  நடைபெறுமானால் நிச்சயமாக நாம் கலந்துகொள்வோம். ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ள வாய்ப்புண்டு. 
 
தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் இணைந்து மாநாடு நடத்துவது சாத்தியமில்லைத்தான். பெரும்பாலான கட்சிகள் நடத்தினால் கலந்து கொள்வோம். அதுவெறுமனே இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் அமையாமல் அதற்கு அப்பால் சென்று இலங்கையில் தற்போது நிகழ்த்தப்படும் மனித உரிமை மீறல்கள், நில அபகரிப்பு, இவை சம்பந்தமாக அந்த மாநாடு ஆராய வேண்டும். குறிப்பாக வன்னி, யாழ்.குடா என இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் நிலக் கபளீகரம்  தொடர்பான பிரச்சினையை சர்வதேச மட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக ஈழ மண் பாதுகாப்பு மாநாடு என்று ஒரு மாநாடு நடத்தினால் கூட பரவாயில்லை. 
 
இலங்கைத் தமிழ்க் கட்சிகள் டெசோவை இப்படிப்பார்த்தாலும், சிங்களத் தேசியக் கட்சிகள் அதனை வேறுமாதிரி நோக்கியிருக்கின்றன. டெசோவுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கூட தலைநகரில் நடத்தப் பட்டுள்ளன. அதனை தமிழீழத்துக்கு நிகரான ஒன்றாகவே நோக்குகின்றனர். இவ்வாறான ஒரு மனநிலை சிங்கள தேசியவாதிகளிடம் காணப்படும் போது நாம் பிளவுபட்டு இப்படி நோக்குவது சரியாகுமா?
 
டெசோ குறித்த சிங்களத் தேசியவாதிகள் எல்லோரது பார்வையும் அப்படித்தான்  இருக்கின்றது. அதில் வேறு கருத்துக்கு இடமேயில்லை.  கொழும்பில் ஆர்ப்பாட்டம் செய்து, த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் கருணாநிதி ஆகியோரின் கொடும்பாவியும் எரித்திருக்கிறார்கள். உண்மையில் சிங்கள பௌத்த தீவிரவாதிகள் தான் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முட்டுக் கட்டையாக இருந்து வருகின்றனர். இந்தப் பிரச்சினைக்கான  தீர்வை  சர்வதேச சமூகத்திடம் எதிர்பார்க்க வேண்டிய சூழலை உருவாக்கியவர்கள் அவர்களே.
 
இதுபோன்று சிங்களத் தேசியவாதிகள் தமிழர்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களைச் செய்யும் போது, ஜனநாயக மக்கள் முன்னணியால் அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை ஏன் செய்ய முடியவில்லை?
 
எமது கட்சி தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்களை செய்துவருகின்றது. சிங்களத் தேசியவாதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக நாம் நடத்தாவிட்டாலும்கூட,  தமிழ் மக்களது பிரச்சினைகள் தொடர்பான பல்வேறு போராட்டங்களை ஜனநாயக ரீதியில் மேற்கொண்டிருக்கின்றோம். சமீப காலத்தில் அதிகமான ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்த கட்சியாக ஜனநாயக மக்கள் முன்னணி இருக்கின்றது. எமது கட்சியின் தளம் கொழும்பாக இருந்தாலும்கூட, எமது வீச்சு  வடக்கு, கிழக்கு, உட்பட மலையகம் வரையிலும்  உள்ளது. அனைத்து பகுதியிலும் வாழக்கூடிய தமிழர்கள் என்றாவது ஒரு நாள் ஒரு குடையின் கீழ் வரவேண்டும் என்பதே எமது நோக்கமாகும். வடக்கில் வாழுகின்ற மக்களுக்கு துன்பம் வரும்போது, கொழும்பில் வாழுகின்ற எங்களுக்கும் வலிக்கின்றது. அதன் காரணமாகவே நாம் இங்கு போராடுகின்றோம். தொடர்ந்தும் இந்த மக்களின் பிரச்சினை தீர்வுக்காக குரல்கொடுப்போம். இது அரசியல், தேர்தல் கால தேவை களுக்கு  அப்பாற்பட்டது. எமது வருகை இனரீதியான, உணர்வு ரீதியான உறவு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
 
தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடர்பில், இதுவரை நடத்தப்பட்ட போராட்டங்கள் எந்த வகையிலான  விளைவுகளைத் தந்தன?
 
இது தொடர்பில் நாம் போராட்டங்களை மட்டும் நடத்தவில்லை. மக்கள் கண்காணிப்புக் குழு, இலங்கையில் மீறப்படும் மனித உரிமைகள் பற்றி கண்காணிப்பதற்காக  உருவாக்கப்பட்ட அமைப்பு. அந்த அமைப்பின் சார்பாக, கொழும்பில் இருக்கக் கூடிய அனைத்துத் தூதரகங்களின் அதிகாரிகளையும் அழைத்து ஒரு கருத்தமர்வை மூன்று வாரங்களுக்குள் நடத்தியிருந்தோம். அங்கே நாட்டு நிலைமை தொடர்பில் பல விடயங்கள் அவர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டன. தவிர தூதுவர்களையும், உயர்ஸ்தானிகர்களையும் சந்தித்து உரையாடியிருக்கின்றோம்.  இவை அனைத்துமே எதிர்வரும் டிசெம்பர் மாதம்  ஐ.நா. சபையில் மீளாய்வுசெய்யப்படவுள்ள யூ.ஆர்.பி. (க்கீக) மாநாட்டில் இலங்கை அரசுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும். அது மாத்திரமன்றி எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐ.நா. சபையில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் நாம் வழங்கிய தகவல்கள் பயன்படுத்தப்படும். அதன் மூலமாக இலங்கை அரசுக்கு சர்வதேச அழுத்தம் அதிகரிக்கும். எனவே அதற்கு முன்னால் அரசியல் கைதிகளை  விடுவிக்க வேண்டும். தீர்வுகாண வேண்டும் என்பதுதான் இலங்கை அரசுக்கு இருக்கின்ற ஒரேவழி. 
 
இதுதான் நாம்  இதுவரை செய்த போராட்டங்களின் நன்மை எனச் சொல்ல வேண்டும். எனவே போராட்டங்களை நடத்தி விட்டு வெறுமனே சும்மாயிருக்கவில்லை. தொடர்ச்சியை பேணிக் கொண்டுதானிருக்கின்றோம். 
 
அதன் வழியாக எதிர்வரும் செப்ரெம்பர் 25 ஆம் திகதியளவில் கொழும்பில் மக்கள் கண்காணிப்பு குழுவின் 4 ஆவது மாநாடு நடத்தப்படவுள்ளது. காணாமல் போனவர்கள். கடத்தப்பட்டவர் கள்,  சரணடைந்து காணாமல் போனவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் என அனைத்து தரப்பினரதும் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட உள்ளனர். 
 
இலங்கையில் உள்ள அரசியல் கட்சியினர், ஏனைய நாடுகளின் தூதுவர்களை வரவழைத்து அவர்களின் முன்னால் இந்த உறவுகளின் மனக் குமுறல்களை வெளிப்படுத்துவதோடு, மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பேரணியாக சென்று ஐ.நா. தூதரகத்தில் உத்தியோகபூர்வமாகக் கையளிக்க முடிவு செய்துள்ளோம். அந்த மனு இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் மாநாட்டில் அழுத்தத்தை உருவாக்கும் என்பது எமக்குத் தெரியும். 
 
இலங்கை அரசு இதனைத் தடுக்க வேண்டுமாயின், கைதிகளின், காணமல் போனோரின் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும். நிமலரூபன், டெல்றொக்சனைக் கொன்றவர்கள் இனங்காணப்பட வேண்டும். குறித்த சம்பவத்தில் காயப்பட்ட ஏனைய கைதிகளுக்கு அந்தத் தமிழ் அரசியல் கைதிகளைக் கொன்றவர்களைத் தெரியும். அவர்களின் நேரடி சாட்சியங்கள். அவர்களை விசாரித்துக் குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குமானால், நாம் எமது இந்த நடவடிக்கையை, போராட்டங்களை நிறுத்துவோம். அவர்கள் நிறுத்தாவிட்டால், நாமும் நிறுத்தத் தயாரில்லை.
 
ஆளுந்தரப்பை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட கடுமையாக விமர்சிக்கின்றீர்கள். உங்களுக்கு உயிர் அச்சுறுத்தல்கள் இல்லையா?
 
அச்சுறுத்தல்கள் இருக்கின்றன. கொசுக்கள் நிறைந்த சூழலில் உறங்கி பழக்கப்பட்டவர்களுக்கு கொசுக்கடி பெரிய பிரச்சினையாக இருப்பதில்லை.  2004 2009 வரை மிகவும் மோசமான அச்சுறுத்தலை எதிர்கொண்டேன்.இறுதிப்போரின் போது தலை நகரிலிருந்து பல்வேறு போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது. இதனால் அதிகளவில் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டேன். அதையெல்லாம் மீறி போராடிக் கொண்டிருக்கிறோம். வரலாறு பணித்த பணியில் உறுதியாக நடக்கின்றோம். 
                                                                                                                                                                                                              நேர்காணல் - தம்பி

No comments:

Post a Comment