காலி சிறையிலிருந்து, காலி கராபிட்டிய மருத்துவமனையில் சுயநினைவு அற்ற நிலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான சுந்தரம் சதீஷ்குமாரை கொழும்பு பொது மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என மக்கள் கண்காணிப்பு குழு அழைப்பாளரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பு மகசின் சிறைசாலையிலிருந்து வழக்கு விசாரணைக்காக காலி நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சதீஷ்குமார், வலது காது பகுதியில் கட்டு போடப்பட்ட நிலையில், காலியில் உள்ள இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கீழே விழுந்ததால் இந்த காயம் ஏற்பட்டதாக, நேற்று அவரை சென்று பார்வையிட்ட கைதியின் மனைவியிடம் அதிகாரிகள் தெரிவித்ததாக, கைதியின் மனைவி தன்னிடம் தெரிவித்துள்ளார் என மனோ கணேசன் தெரிவித்தார்.
அதனையடுத்து, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவை இன்று தொலைபேசியில் நேரடியாக தொடர்பு கொண்டு, அரசியல் கைதி சதீஷ்குமாரை உடனடியாக காலி கராபிட்டிய மருத்துவமனையிலிருந்து கொழும்பு பொது மருத்துவமனைக்கு கொண்டுவர ஆவன செய்யும்படி தான் கூறியுள்ளதாகவும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,
கொல்லப்பட்ட தமிழ் கைதிகள் நிமலரூபன், டெல்றொக்ஷன் ஆகியாரை அடுத்து தற்போது சதீஷ்குமாருக்கும் ஏற்பட்டுள்ள இந்த நிலை, தமிழ் அரசியல் கைதிகளை பரிதாப நிலைமையினை படம் பிடித்து காட்டுகின்றது.
கொழும்பிலிருந்து நல்ல நிலைமையில் வழக்கு விசாரணைக்காக காலிக்கு அழைத்து செல்லப்பட்ட இந்த கைதி, எவ்விதம் சுயநினைவற்ற நிலைமையில் கராபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது பற்றி குழப்ப நிலை நிலவுகின்றது. அவரது வழக்கை முன்னெடுக்கும் சட்ட மற்றும் மனிதவுரிமை நிறுவனத்திற்கும் நான் இதுபற்றி அறிவித்துள்ளேன்.
கொடிகாமத்தை பிறப்பிடமாக கொண்ட சதீஷ்குமாரின் மனைவி வவுனியாவை சேந்தவர். மக்கள் கண்காணிப்பு குழுவின் உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரனின் கவனத்திற்கு, கைதியின் மனைவி இது தொடர்பில் தகவல்களை அறிவித்த நிலையிலேயே, இந்த விடயம் எனது கவனத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக தகவல்களை நாம் எதிர்நோக்கி உள்ளோம். என்றார்.
No comments:
Post a Comment