Translate

Thursday, 30 August 2012

உறவுகளை தொலைத்த மக்கள் அனுட்டிக்கும் காணாமல் போனோர் தினம் இன்று


அனைத்துலக காணாமற்போனோர் நாள் இன்று உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது.  உலகின் பல நாடுகளிலும் காவல்துறை யினராலும் பாதுகாப்புப் படையினராலும், ஆயுதக்குழு க்களாலும் கைது செய்யப்பட்டு கடத்தப்பட்டு காணாமற்போவோர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக இந்நாளை ஐக்கிய நாடுகள் சபை பிரகடனம் செய்துள்ளது.

கொஸ்டாரிக்காவில் 1981 இல் தொடங்கப்பட்ட கைதாகிக் காணாமற்போவோரின் உறவினர்களின் கூட்டமைப்பினால் இக்கோரிக்கை முதன் முதலில் ஐக்கிய நாடுகள் சபையிடம் விடுக்கப்பட்டது.
இலங்கை உட்பட உள்நாட்டு கலவரங்கள், போர்கள் நடைபெறும் நாடுகளில் காணாமல் போவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் குறிப்பாக அனைத்துலக மன்னிப்புச் சபை, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் செஞ்சிலுவைச் சங்கம் ஆகியன இந்த இரகசியக் கைதுகளுக்கு எதிராக அதிக அக்கறை எடுத்து வருகின்றன.
இதேவேளை காணாமல் போனோர் தினத்தையொட்டி மனிதாபிமான அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.  வவுனியா பஸ் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பான விவரங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
காணாமல் போனோரின் உறவினர்கள் காலை 9.30 மணிக்கு வவுனியா கண்டி வீதியிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளை முடித்துவிட்டு ஊர்வலமாக கண்டி வீதி வழியாகச் சென்று குடியிருப்பு பிள்ளையார் கோவிலிலும்; இறம்பைக்குளம் அந்தோனியார் தேவாலாயத்திலும் பஜார் வீதியிலுள்ள பள்ளிவாசலிலும் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.  பின்னர் இவர்கள் வவுனியா பஸ் நிலையத்தை வந்தடைந்து ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர்.

No comments:

Post a Comment