Translate

Thursday 30 August 2012

காணாமல்போனோர் தொடர்பான உண்மைகள் புதைந்துவிட்டன – சுரேஸ் பிரேமசந்திரன்


இலங்கையில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கு ஜக்கிய நாடுகள் சபை, இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்கள் கொடுக்கவில்லை. இதனால் காணாமல் போனோர் தொடர்பான உண்மைகள் புதைந்து விட்டன’ என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன்   தெரிவித்தார்.

இது தொடர்பில் சுரேஸ் எம்.பி மேலும் தெரிவித்ததாவது,
‘காணாமல் போனவர்கள் தொடர்பில் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் சபையினால் 3பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடத்துவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை.  கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் வெளியிடப்பட்டவாறும் இலங்கை அரசாங்கம் எந்தவித விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை.
விசாரணைகள் முன்னெடுப்பதற்கு 2 – 5 வருடங்கள் தேவை என தெரிவித்துள்ளது. அதற்கான நடவடிக்கைகளை இராணுவம் மற்றும் பொலிஸ் மேற்கொள்ளும் என்று அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால், இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸ் செய்யும் செயல்களுக்கு யார் பொறுப்பு கூறுவது?
காணாமல் போனோர்கள் தொடர்பிலான மனித உரிமைகளை இன்னும் அரசாங்கம் சீர்திருத்தம் செய்யவேண்டியுள்ளது. 2006 – 2007ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடத்தப்பட்டுள்ளார்கள், கடத்தப்பட்டவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.  இவர்களின் பெற்றோர்கள் நிர்கதியான நிலையில் பி;ள்ளைகளை தேடி திரிகின்றார்கள். பிள்ளைகளை தொலைத்த பெற்றோர்களுக்கு அரசாங்கம் சொல்லும் வழி என்ன?
சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் ஜ.நா அமைப்புக்கள் காணாமல் போனோர் தொடர்பாக இலங்கை அரசாங்கத்திற்கு அறிவுறுத்தல்கள் கொடுக்கப்படாததற்கான காரணங்கள் என்ன? காணாமல் போனோர்களின் விபரங்கள் தொடர்பான உண்மைகளை கண்டறிய எந்த விதமான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்வாறான சூழ்நிலையில் காணாமல் போனோர் தினம், பிள்ளைகளை தொலைத்த பெற்றோர்களுக்கு வலிகளை அள்ளிக் கொடுக்கின்றதே தவிர பிள்ளைகளை பெற்றோர்களுக்கு மீட்டு கொடுக்கும் தினமாக இல்லை’ என்றார்.

No comments:

Post a Comment