சர்வதேச காணாமல்போனோர் தினத்தை ஒட்டி நாளை வவுனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் நாம் கலந்துகொள்ள போவதில்லை என மக்கள் கண்காணிப்பு குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் மக்கள் கண்காணிப்பு குழுவின் இணைத்தலைவர் சிறிதுங்க ஜெயசூரிய விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது,
சர்வதேச காணாமல்போனோர் தினத்தையொட்டி வவுனியாவில் நாளை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளில் மக்கள் கண்காணிப்பு குழு கலந்து கொள்ளபோவதில்லை என்ற முடிவை நாம் எடுத்துள்ளோம். நேற்று மாலை கொழும்பில் என்னுடன் சக இணைத்தலைவர் நிமால்கா பெர்னாண்டோ, ஏற்பாட்டாளர் மனோ கணேசன், செயலாளர் பி. ஆரியரத்ன ஆகியோர் கலந்துகொண்ட எமது நிர்வாக குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. எமது முடிவிற்கு கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன்,செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் தமது இணக்கத்தை தெரிவித்துள்ளனர்.
வவுனியா நிகழ்வுகள் முழுக்கவும் அரசு சார்பற்ற அமைப்புகள் நடத்தும் நிகழ்வுகளாக நடத்தப்படும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள். இனவாத அரசியல் நோக்கங்களுக்காக கடத்தப்பட்ட பெருந்தொகையான தமிழர்களின் குடும்ப உறுப்பினர்களின் சார்பாக அரசாங்கத்திற்கு கடுமையான செய்தி ஒன்றை இந்த கால கட்டத்தில் விடுப்பதற்கு இந்த அரசு சார்பற்ற நிறுவனங்கள் தயக்கம் காட்டுவதை எம்மால் ஏற்றுகொள்ள முடியவில்லை. அரசுக்கு எதிரான அரசியல் கட்சி தலைவர்களை காணாமல் போனோர்களின் போராட்டத்தில் முழுமையாக இணைத்து கொள்ள கூடாது என்றும், குறிப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் அரசு சார்பற்ற நிறுவனங்களை சார்ந்த ஏற்பாட்டாளர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், தமிழ் கட்சிகளுக்கும் எதிராக கருத்து தெரிவித்து வருவதையும் நாம் நிராகரிக்கின்றோம்.
அத்துடன் யுத்தத்தின்போது போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு காணாமல் போனதாக அறிவிக்கப்பட இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களையும், காணாமல் போன தமிழர்களின் குடும்ப உறுப்பினர்களையும் ஒரே அடிப்படையில் இந்த நிகழ்ச்சியை நடத்தும் அரசு சார்பற்ற நிறுவனங்கள் முன்னிறுத்துவதையும் நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. காணாமல் போன படை வீரர்களது குடும்பத்தவர்களின் துன்பங்களையும் நாம் புரிந்துகொள்கிறோம். ஆனால், படைவீரர்களின் குடும்பங்களுக்கு அரசு பல்வேறு ஒத்தாசைகளை வழங்கி பக்க பலமாக இருக்கின்றது.
யுத்தத்தின் போது போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு மரணமடைந்த படை வீரர்களை இன்னமும் காணாமல் போனவர்களாக காட்டுவதற்கு அரசு முயற்சிக்கிறது. அவர்களையும் காணாமல் போனோர் பட்டியலில் சேர்ப்பது அரசின் நோக்கங்களுக்கு சாதகமானது. இன்றைய உலக சூழலில் இரண்டு தரப்பினரையும் ஒன்று சேர்த்து, இலங்கையில் எல்லா இனத்தவர்களும் காணாமல் போயுள்ளார்கள் என்று உலகத்துக்கு சொல்லி, தமிழர்களின் பெருந்துயரை மூடிமறைப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்தி கொடுப்பதற்கு நாம் தயாரில்லை.
எனவே, இன்றைய காலகட்டத்தில் காணாமல் போன ஆயிரக்கணக்கான தமிழர்களின் துன்பங்களே முன்னிலை வகிக்க வேண்டும் என்பது எமது கொள்கையாகும். சொல்லொணா கொடுமைகளுக்கு உள்ளாகியுள்ள தமிழர்களின் துன்பங்களை மூடிமறைப்பதற்கு முன்னெடுக்கப்படும் எந்த ஒரு நடவடிக்கையையும் நாம் ஆதரிக்க முடியாது.
நாளை வவுனியாவில் நடத்தப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளின் உள்நோக்கங்கள் தொடர்பில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் இந்நிகழ்வுகளை வெறும் அரசு சார்பற்ற நிறுவன நிகழ்வுகளாகவே நாம் கருதுகிறோம். எனவே தெளிவான அரசியல் நோக்கங்கள் இல்லாமல், அரசு சார்பற்ற நிறுவனங்கள் நடத்தும் இந்த நிகழ்வில் நாம் கலந்துகொள்ள மாட்டோம்.
No comments:
Post a Comment