Translate

Thursday 9 August 2012


உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக நாடுகளின் திருவிளையாடல்கள் -   அனலை நிதிஸ் ச. குமாரன்


தலைமையுடன் அழிக்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்ட விடுதலைப்புலிகளை மேலும் இரண்டு ஆண்டுகள் தடை செய்யும் சட்டத்தை நீடித்தது உலகின் முதலாவது பெரிய ஜனநாயக நாடான இந்தியா. ஒரு காலத்தில் அமெரிக்காவை எதிர்த்த இந்தியா தற்போது அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாகவும் சர்வதேச தீவிரவாதிகளுக்கெதிரான சர்வதேச போரின் முன்னணி நாடாகவும் திகழ்கின்றது. உலகின் இரண்டாவது ஜனநாயக நாடு என்று கூறும் அமெரிக்காவோ இந்தியா ஒரு மாதத்துக்கு முன்னர் செய்த காரியத்தையே செய்து அறிக்கையையும் விட்டுள்ளது.

வேடிக்கையென்னவெனில் விடுதலைப்புலிகளினால் அமெரிக்காவின் இறையாண்மைக்கு எந்தவித பாதிப்பும் வந்துவிடாது என்று அறிந்தும் விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் வைத்துள்ளது அமெரிக்கா. ஒரு அமைப்பை உலக அரங்கில் முன்நிறுத்துவதற்காகவே குறித்த அமைப்புக்களின் பெயர்களைக் கூறுவதென்பது நியதி. அமெரிக்கா போன்ற மூத்த ஜனநாயக நாடுகள் பின்பற்றும் யுக்திகளும் இவையே.
ஒரு அமைப்பை வளர்ப்பது பின்னர் அதற்கு எதிரான போர் என்ற காரணத்தை முன்வைத்து நாடுகளை கைப்பற்றுவதுவே தற்போது கடைப்பிடிக்கப்பட்டுவரும் யுக்தி. ஒரு காலத்தில் நாடுகளை வணிக நலன்களுக்காக கைப்பற்றினர் ஐரோப்பியர்கள். அதன் பின்னர் தமது பிரசன்னத்தை உலகம் அனைத்தும் பரப்பினார்கள். தற்போது இராணுவக் காரணங்களை முன்வைத்தே நாடுகளை கைப்பற்றும் வேலைகள் இடம்பெற்று வருகிறது.
இந்தியாவே அனைத்திற்கும் காரணம்
விடுதலைப்புலிகளை சர்வதேச அளவில் தடை செய்ய இந்தியாவே காரணம். ராஜீவ் கொலையை காரணம் காட்டி விடுதலைப்புலிகளை தடைசெய்தது இந்திய நடுவன் அரசு. இதன் தொடர்ச்சியாக பல நாடுகள் விடுதலைப்புலிகளை தடை செய்தன. இந்தியாவும் ஒவ்வொரு இரண்டு வருடத்துக்கு ஒருமுறை இந்திய மக்களுக்கு ஞாபகப்படுத்த ஏற்கனவே தடைசெய்யப்பட்ட அமைப்பை மீண்டும் அத் தடையை புதுப்பிக்கும் அறிக்கை வெளிவரும்.
விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரே முக்கிய இரு பிரதான குற்றவாளிகளாக பிரகடனப்படுத்தி அவர்களை இந்தியா கொண்டுவந்து தனியாக விசாரிக்க உத்தரவு பிறப்பித்தது இந்தியாவின் நீதித்துறை. இருபது ஆண்டுகள் கடந்த பின்னரும் மீண்டும் ராஜீவ் கொலையை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்காரர்களின் உண்மை முகம் என்னவென்பது இதிலிருந்து புரியும். ஒருவர் இறந்துவிட்டால் அவருடைய ஆத்மாவையாவது அமைதியாக இருக்க விடவேண்டும். அதைவிடுத்து இந்த காங்கிரஸ் அரசியல்வாதிகள் ராஜீவை மீண்டும் வம்புக்கு இழுத்து தமிழர்களை அரக்கர்கள் என்கிற பட்டத்தை வழங்க முற்படுகிறார்கள் போலும்.
நடந்த ஒரு சம்பவத்துக்காக பல்லாயிரம் மக்களை காவு கொண்டது இந்திய அரசு. இதற்கு துணை போனது அமெரிக்க அரசு. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆண்டும் வேலையையே அமெரிக்கா தொடர்ந்தும் செய்து கொண்டுள்ளது. 2004-இல் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டது ஈழத் தமிழர்களே. அவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதை விடுத்து சிங்கள அரச கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கு அமெரிக்காவின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள் பயணம் செய்து சிங்கள அரசுக்கு பல்லாயிரம் கோடிகளை உலக நாடுகள் வழங்க காரணமாக இருந்ததன் காரணமோ என்னவோ இந் அனர்த்தத்துக்கு பின்னர் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடிக்க மகிந்த ராஜபக்சாவுக்கு வீரம் வந்தது போலும்.
பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அமெரிக்காவுக்கு சிறிலங்காவில் தமிழர் சுதந்திரத்துடன் வாழ வேண்டுமென்பது ஒரு விடயமே இல்லை. சிறிலங்கா விடயத்தில் இராமன் ஆண்டாள் என்ன இராவணன் ஆண்டாள் என்ன என்பதுதான் அமெரிக்காவின் கொள்கை. இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது அகண்ட காலை பதித்து நிற்கும் அமெரிக்காவுக்கு சிறிலங்காவை அண்டிய பிரதேசத்தில் அமைதி நிலவ வேண்டும். அதனூடாக பூகோள அரசியல் மற்றும் இராணுவ திட்டங்களை மேற்கொள்ள வசதியாக இருக்கும் என்பதே அமெரிக்காவின் நோக்கம். அதற்காக அமெரிக்கா எதனையும் செய்யத் தயாராகவே இருக்கிறது.
கோத்தபாயவுடன் நேசம் கொண்ட நாடுகள்
சிறிலங்காவின் அரச பயங்கரவாதியென வர்ணிக்கப்படும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சமீபத்தில் கூறிய அதே கருத்தையே அமெரிக்கா மற்றும் இந்தியா கூறியுள்ளன. இதன் மூலமாக இன் நாடுகள் கோத்தபாயாவை தமது தலையில் வைத்தே ஆடுகிறார்கள் என்பது தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. சமீபத்தில் கோத்தபாய கூறுகையில், “விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் வலுவான நிலையில் காணப்படுகின்றது. விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள், புலி ஆதரவாளர்கள், புலி அனுதாபிகள் உள்ளிட்ட தரப்பினர் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பல்வேறு நாடுகளில் இயங்கி வருகிறார்கள். ஜனநாயகக் கட்டமைப்பில் இணைந்து கொண்டவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், ஆயுததாரிகள் என பல்வேறு போர்வையில் புலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகிறார்கள்” என தெரிவித்தார்.
கோத்தபாயாவின் அறிக்கைக்கு சற்றும் சளைக்காமலேயே அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை அமைந்துள்ளது. 2011-ஆம் ஆண்டுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பை வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகள் இராணுவ ரீதியாக 2009-ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட போதிலும், புலிகளின் நிதி வலையமைப்பு தொடர்ந்தும் இயங்கி வருவதாக இராஜாங்கத் திணைக்கள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டு முழுவதும் விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பு இயங்கி வந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் சர்வதேச மற்றும் நிதி வலையமைப்புக்கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றமை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் நிதி வலையமைப்பை கட்டுப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் சிறிலங்காவில் தற்போதைக்கு மீள ஒழுங்கிணையக் கூடிய அபாயம் கிடையாது எனவும் கூறியுள்ளது அமெரிக்காவின் இராஜாங்க திணைக்களம். வேடிக்கை என்னவெனில், மீள ஒழுங்கிணைய முடியாத இயக்கத்துக்கு எதற்கு மீண்டும் தடை என்கிற கேள்வியே வலுவாக எழுகிறது. அமெரிக்கா மற்றும் இந்தியாவின் செயற்பாடுகளுக்கும் சிறிலங்கா அரசின் முக்கிய தலைவர்களின் பேச்சுக்களுக்கும் எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்பதனையே அமெரிக்க, இந்திய மற்றும் கோத்தபாயாவின் அறிக்கைகள் அமைந்துள்ளன.
தண்டனை அளிக்கப்பட வேண்டிய நபர்களுடன் கூத்தாடும் உலகின் இரு பெரும் ஜனநாயக நாடுகள் சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளை செய்வது தமக்குத் தாமே கரி பூசுவது போன்றது. அநீதி மறுக்கப்பட்டு அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுடன் இணைந்து அவர்களுக்கு விடுதலையை பெற்றுத்தர வேண்டிய நாடுகள் குறிப்பாக இந்தியா மற்றும் அமெரிக்கா தாம் வரலாற்றில் கடந்து வந்த பாதைகளை மறந்து செயற்படுவது உலக மனித குலத்திற்கே ஒவ்வாத செயல்.
இவ் ஆய்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புகொள்ள வேண்டிய மின்னஞ்சல்: nithiskumaaran@yahoo.com

No comments:

Post a Comment