Translate

Thursday, 9 August 2012

டில்ருக்சனின் படுகொலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் ; உடல் நாளைய தினம் பெற்றோரிடம் கையளிப்பு

டில்ருக்சனின் படுகொலைக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் ; உடல் நாளைய தினம் பெற்றோரிடம் கையளிப்பு
news
வுனியா சிறையில் நடைபெற்ற அசம்பாவிதத்தில் தாக்கப்பட்டு கோமா நிலையில் ராகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மரியதாஸ் டில்ருக்சனின் மரணத்திற்கு அரசியல் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளதுடன் கண்டனமும் தெரிவித்துள்ளனர்.


அதனடிப்படையில் படுகொலையினைக் கண்டித்து ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாக ஜயலத் ஜயவர்தன மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோர் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

வவுனியா சிறைச்சாலை சம்பவத்தில் கொடூர தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டு நேற்று உயிழந்த மரியதாஸ் டில்ருக்சனின் படுகொலைக்கு அரசாங்கமே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த மரணம் தெருவில் நடந்தது அல்ல. வழமையாக சொல்வதனைப்போல், விசாரணைகள் நடைபெறுகின்றது, கொலையாளிகளை இன்னமும் கண்டு பிடிக்க முடியவில்லை என்று சொல்லி அரசாங்கம் தப்ப முடியாது.

ஏனெனில் இந்த படுகொலை அரசாங்கத்தின் பாதுகாப்புடன் உள்ள சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்றுள்ளது. இத்துடன் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டு இன்னும் பல தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலையிலும், வைத்தியசாலைகளிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையினை அரசு மறைக்க முடியாது.

உயிரிழந்த யாழ்ப்பாணம் பாஷையூரை பிறப்பிடமாக கொண்ட தமிழ் அரசியல் கைதி மரியதாஸ் டில்ருக்சனின் மரணம் தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,

மரியதாஸ் டில்ருக்சன் மரணமடையும் வரை சுய நினைவின்றியே இருந்துள்ளார். இந்நிலையிலும் அவரது கால்கள் சங்கிலியால் அவர் படுத்திருந்த வைத்தியசாலை கட்டிலுடன் பிணைக்கப்பட்டு இருந்தது. இந்த உண்மை அரசியல் கைதிகள் மீது காட்டப்படும் கொடூரத்தை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகள், தாக்குதலுக்கு பிறகும் முறையான வைத்திய சிகிச்சைகள் இல்லாலாமல் சாக விடப்பட்டுள்ளார்கள் என்று நாம், வவுனியாவில் நடைபெற்ற நிமலரூபனின் மரணசடங்கின் போது சொன்ன உண்மை இன்று டில்றொக்சனின் மரணத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், யுத்தம் முடிந்து மூன்று வருடங்களின் பின்னரும் இந்த அரசாங்கம் தமிழர் மீது பழி வாங்கும் எண்ணத்தை கைவிடவில்லை என்ற உண்மையும் நிரூபணமாகியுள்ளது.

டில்ருக்சன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானமற்ற, காட்டுமிராண்டித்தாமான செயலாகும் என ஜயலத் ஜயவர்தன
தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

வவுனியா சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவத்தின் பின்னர் தாக்கப்பட்டு, கடுமையான காயங்களுடன் கோமா நிலையில் ராமக வைத்தியசாலையில் இன்று உயிரிழந்த டில்ருக்சனின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்பதோடு, இச்சம்பவத்திற்கு மிகுந்த கவலையை தெரிவித்துள்ளார்.

வவுனியா சிறைச்சாலை சம்பவத்தை அடுத்து தாக்கப்பட்டு, கடந்த 3 மாத காலமாக கோமா நிலையில் ராமக போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த டில்ருக்சன் இன்று உயிரிழந்தமை எனக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது. உண்மையில் சிறைச்சாலையில் இருந்த போது மனிதாபிமானமற்ற முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் உயிரிழக்கும்வரை கோமா நிலையில் இருந்துள்ளதுடன், அந்த நிலைமையிலும் அவருக்கு விலக்கிடப்பட்டிருந்தமை கவலைக்குரியதாகும். அவர் வைத்தியசாலையில் இருந்தபோது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு அவரை பார்த்து நலம் விசாரிப்பதற்குக்கூட அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை.

அத்துடன் அவரை பார்க்கச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களையும் அதிகாரிகள் தடுத்தனர். சிறைச் கைதிகளும் மனிதர்களே என்ற இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் தொனிப்பொருளை இன்று அந்த திணைக்கள அதிகாரிகளே பிரசித்தமாக மீறுகின்றனர்.

இந்த துரதிஷ்டவசமான சம்பவம் குறித்து இன்று பாராளுமன்றில் நடந்த சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் கருத்து தெரிவித்தேன்.

கடந்த ஜுலை மாதம் 27ஆம் திகதி இந்தத் தாக்குதலில் பலத்த காயமடைந்த இடம்பெற்ற அவர் கோமா நிலையில் ராமக போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவரையும், வவுனியா சிறைச்சாலையிலிருந்து மஹர சிறைக்கு மாற்றப்பட்ட ஏனைய தமிழ்க் கைதிகளையும் சந்தித்து ஆசீர்வதிக்க வந்த மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களையும் சிறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

மேலும் இன்று துரதிஷ்டவசமாக உயிர் நீத்த இவரது இறுதிக் கிரியைகளில் ஜெபம் மற்றும் ஆசிர்வாதம் செய்வதற்கும் மன்னார் ஆயருக்கு முடியாமல் போனதை இட்டு நான் மனவருத்தம் அடைகின்றேன்.

இது தொடர்பில் இன்று இடம்பெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஆலோசனை தெரிவுக் குழுக் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பி.டபிள்யூ. கொடிப்பிலிக்கு அனுப்பி வைத்த கடிதத்தின் பிரதி ஒன்றை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீரவிடம் கையளித்தேன்.

மேலும் அவரது சொந்த இடத்திலேயே இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இறந்த டில்ருக்சனின் உடல் நாளைய தினம் அவரது பெற்றோரிடம் கையளிக்க உள்ளதாகவும் அவரது சொந்த ஊரிலேயே இறுதிக் கிரியைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அரசு தங்களுடைய வீரதீரச் செயலினால் இரண்டு அப்பாவி உயிர்களை வெற்றிகரமாக படுகொலை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment