Translate

Thursday, 30 August 2012

வடகிழக்கில் இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு, சிவில் நிர்வாகம் மக்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்: கனடா


Posted Imageஇலங்கையில், தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டுமென்பதிலும், சிவில் நிர்வாகம் முழுமையாக வடகிழக்குப் பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலும், கனடிய அரசு மிகத் தெளிவாக இருப்பதாக கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் தெரிவித்தார்.




அஜெக்ஸ் தொகுதிக்கான கனடிய நாடாளுமன்ற உறுப்பினரும், ஆசிய நாடுகளுக்கான வெளிநாட்டு அமைச்சின் ஆலோசகரும், மக்கள் செல்வாக்குள்ள இராஜதந்திரியுமான கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சாண்டரர் உடனான மக்கள் சந்திப்பொன்று, ரொறன்ரோ பெரும்பாகத்தில் வாழும் தமிழ் மக்களால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26) மாலை 7 மணியளவில் மார்க்கம் நகரிலுள்ள, முன்னாள் படைவீரரின் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் மண்டபத்தை நிறைத்திருக்க, மிகவும் ஆக்கபூர்வமான கலந்துரையாடலும் கருத்துப் பரிமாற்றமும் சிறப்பாக இடம்பெற்றது.
கௌரவ கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் தமது ஆரம்ப உரையில்,
தமிழ் மக்களின் மனித உரிமை மீறல்கள் விடயத்திலும், தமிழ் மக்களுக்கு நிரந்தரமான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் கனேடிய அரசாங்கம் மிக உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

கனடியப் பிரதமர் திரு.ஸ்ரீபன் ஹார்ப்பர் அவர்கள் ஏற்கனவே உறுதி கூறியபடி, இலங்கை அரசாங்கம் மனித உரிமை விடயத்தில் முன்னேற்றத்தை நடைமுறைப்படுத்தாவிடின், இலங்கையில் 2013ம் ஆண்டில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளுக்கான மாநாட்டில் பங்குபற்றுவது பற்றிய நிலைப்பாட்டில் மாற்றம் எதுவும் இல்லையென்றும், அம் மாநாட்டில் கலந்து கொள்வது சாத்தியப்படாதென்றும் கூறினார்.

அத்துடன் இப்பொழுது கனடா மட்டுமே உலக அரங்கில் ஊக்கமெடுத்து குரல் எழுப்புகிறதென்றும், இந்த அறிவுறுத்தலுக்கு இலங்கை செவிசாய்க்காவிடின் இன்னும் பல நாடுகள் கனடாவுடன் இணைந்தால், இலங்கையில் ஒரு சிக்கலான சூழ்நிலையே உருவாகும் எனவும் எச்சரித்தார்.
அவர் தொடர்ந்து கருத்துக் கூறுகையில்,
அண்மையில், தனது குழுவினருடன் தான் இலங்கை சென்றிருந்த போது, தாங்கள் நேரில் கண்டறிந்த அனுபவங்களையும், பல தரப்பட்ட சமயத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரைச் சந்தித்து உரையாடி, அவர்களிடம் கேட்டறிந்த உண்மை நிலவரங்களையும், தமது பயணம் தொடர்பான விரிவான அறிக்கையையும், தங்களது பிரத்தியேக பரிந்துரைகளையும், கனடிய வெளிவிவகார அமைச்சர் கௌரவ ஜோண் பெயார்ட் அவர்களிடம் கையளித்ததாகவும் கூறினார்.

கனடிய வெளிநாட்டமைச்சர், ஏற்கனவே இலங்கை விடயத்தில் அதீத அக்கறை கொண்டிருப்பதையும்,பேச்சளவில் மட்டுமன்றி, நேரடியாக பல்வேறு நடவடிக்கைகளை செயற்படுத்தி இருப்பதையும் உதாரணங்களோடு தெளிவு படுத்தினார்.
தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து இராணுவம் அகற்றப்பட வேண்டுமென்பதிலும், சிவில் நிர்வாகம் முழமையாக வடகிழக்குப் பகுதிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதிலும், கனடிய அரசு மிகத் தெளிவாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவரது உரையினைத் தொடர்ந்து நிகழ்வில் பங்குபற்றிய மக்கள் எழுப்பிய வினாக்களுக்கு, குறிப்பாக, கனடாவில் வெளிநாட்டு முதலீடுகள், பொருளாதார அபிவிருத்தி மற்றும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்து விடயங்களுக்கும், திரு.கிறிஸ் அலெக்ஸ்சாண்டர் அவர்கள் மிகத் தெளிவான பதிலளித்தார்.

இதனால் மக்கள் தங்கள் திருப்தியையும் நன்றியையும் வெளிக்காட்டினர்.
இறுதியாக திரு.கிறிஸ் அவர்கள் தனது முடிவுரையில், கனடாவிலுள்ள தமிழ் மக்கள் அனைவரும் இலங்கையிலுள்ள பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அபிவிருத்திகளில் உதவ வேண்டுமென்றும், இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்தார்.

யோர்க் பிராந்தியத்தைச் சேர்ந்த பல்வேறு தமிழ் அமைப்புக்களின் ஆதரவுடன் Canadian Tamil Economic  Forum  தலைமையில் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நிகழ்வு, மிகவெற்றியுடன் நடைபெறுவதற்கு உதவிய அனைவருக்கும், குறிப்பாக கனேடிய தமிழ் குழுமத்திற்கும் கலந்துகொண்ட மக்கள் தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து விடைபெற்றனர்.

No comments:

Post a Comment