Translate

Thursday, 30 August 2012

“முடிந்தால் என்னைத் தண்டித்துப் பாருங்கள்” – நரேந்திர மோடி சவால்!

குஜராத்தில் முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை – 2002 தொடர்பாக சிஎன்என் – ஐபின் தொலைக்காட்சியின் “டெவில்ஸ் அட்வகேட்” நிகழ்ச்சியில் கரண் தப்பார், “கலவரம் தொடர்பாக நீங்கள் மன்னிப்பு கேட்பீர்களா?” என்று கேட்ட போது நரேந்திர மோடி வெளிநடப்பு செய்ததைஅறிவோம். அது பாசிஸ்டுகளுக்கே உரிய அடக்க முடியாத கோபம்.ஆனால் அந்த கோபத்தை பாசிஸ்டுகளின் தலைவன் அமெரிக்காவிடம் காட்ட முடியுமா? மனித உரிமை என்.ஜி.வோக்களைத் திருப்பதிப்படுத்தும் வண்ணம் அமெரிக்கா அவருக்கு விசா கொடுக்க மறுத்து வருகிறது. இருப்பினும் அதையெல்லாம் மோடி ஒரு மானக்கேடாக எடுத்துக் கொள்ளவில்லை. ராஜபக்சேவும் அப்படித்தான் இத்தகைய எதிர்ப்புகளை சட்டை செய்வதில்லை.
மன்னிப்பு கேட்க முடியுமா என்று கேட்டதை பொறுத்துக் கொள்ளாத மோடி அதே கேள்வியை அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை கேட்ட போது அமைதியுடன் பதிலளிக்கிறார். கடைசியில் இந்து ஞான மரபில் வந்தவரே ஐரோப்பிய காலனிய சிந்தனையின் அடிமைத்தனத்தில்தான் வாழ்கிறார். தெரியாதவர்கள் அரவிந்தன் நீலகண்டன் மற்றும் ஜெயமோகனிடம் கேளுங்கள்.

அதற்கு மோடியின் பதில் என்ன?
” ஒருவர் ஒரு சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிக்கிறார் என்றால், அவர் அந்தக் குற்றத்தினைப் புரிந்துள்ளார் என்று பொருள். அந்தக் குற்றம் அவ்வளவு கடுமையான குற்றம் என்று நீங்கள் கருதினால், அந்த மோசக்காரனிடம் எதற்காக நீங்கள் வருத்தத்தையோ மன்னிப்பையோ எதிர்பார்க்கிறீர்கள்? மோடி ஒரு முதலமைச்சராக இருக்கிறார் என்பதற்காக எதற்கு நீங்கள் மோடி மன்னிப்பு கேட்டு தப்பித்துக் கொள்வதை எதிர்பார்க்கிறீர்கள்? மோடி உண்மையில் தவறிழைத்திருந்தால், அவருக்கு மிகப் பெரும் தண்டனை கொடுக்க வேண்டும். அவ்வாறு குற்றம் இழைக்கும் அரசியல் தலைவர்களை உலகம் எந்தக் காரணத்தைக் கொண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடாது”  என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் நரேந்திர மோடி. (தினமணி)
நேரடியான பதில். ‘நியாயமான’ பதிலும் கூட. ஆனால் இந்தப் பதில் கேள்வி கேட்பவர்களின் இரட்டை வேடத்தை எள்ளி நகையாடுகிறது. கேள்விகளின் பரிதாப நிலையை வைத்து பதில்கள் இறுமாப்படைகின்றன. உண்மைதான். 2000 பேருக்கும் அதிகமாக முசுலீம் மக்களை கொல்வதற்கு தலைமை தாங்கியவர் ஒரு மன்னிப்பு கேட்டு விட்டால் போதுமென்ற சிந்தனையை எதைக் கொண்டு அடிப்பது? இன்னும் கொஞ்சம் உள்ளே போய் விளங்கிக் கொண்டால், மோடியை தண்டிப்பது நடக்கவே போவதில்லை, ஒரு மன்னிப்பாவது வாங்கி விடலாம் என்ற தோல்வி மனப்பான்மையும் இதில் ஒளிந்துள்ளது.

இதைப் புரிந்து கொண்டதால்தான் மோடி அப்படி ஒரு தெனாவெட்டான பதிலை சவால் போன்று சொல்ல முடிகிறது. இந்தியாவின் அரசுகள், நீதிமன்றங்கள், தேசிய அரசியல் கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு, பெரும்பான்மை நடுத்தர வர்க்கம் அனைத்தும் இந்துத்துவத்தின் செல்வாக்கில் இருக்கும் போது ஒரு கலவரத்திற்காக இந்துமதவெறியர்களின் ஒரு தலைவரை தண்டித்து விட முடியுமா என்ன? ஆதாரங்கள் இருந்தாலும் அதை சஞ்செய் பட் போன்ற போலீசு உயர் அதிகாரிகள் எடுத்துக் கூறினாலும் மோடியை யாரும் நெருங்க முடியாது என்பதற்கு இந்தியா இந்துயாவாக இருக்கிறது என்பதே காரணம்.

அடுத்து என்ன ஆதாரங்கள் வந்தாலும் சட்டத்தின் மொழிகளில் நீர்த்துப் போகச் செய்வதற்கு நீதிபதிகளும், வழக்கறிஞர்களும், ஊடகங்களும் இருக்கும் போது சட்டப்படியே மோடி தப்பித்துவிடுவது ஒன்றும் சாதனையில்லையே?

இதுதான் யதார்த்தமென்றால் மோடி ஏன் அப்படி ஒரு சவாலை விட முடியாது? மோடியிடம் மன்னிப்பை எதிர்பார்ப்பவர்கள் புரிந்து கொள்ளட்டும்.

No comments:

Post a Comment