Translate

Thursday, 30 August 2012

அரசாங்கத்துக்கு வாக்களித்து பாவங்களையும் சாபங்களையும் நாட்டு மக்கள் பெறக்கூடாது


மஹிந்த சிந்தனை ௭ன்ற நரகததிலிருந்து நாட்டை பாதுகாக்க எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் பொது மக்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அரசாங்கத்திற்கு வாக்களித்து  பாலியல் வல்லுறவு, கொலை, கொள்ளை மற்றும்  ஊழல் மோசடிகள் போன்ற குற்றச்செயல்களின்  பாவங்களையும்  சாபங்களையும் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளக் கூடாது என்று எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்தார்.

நாட்டின் கல்வி மற்றும் சமுர்த்தி உதவிகள் என்பவற்றை சீரழிக்கும் புதிய கொள்கைகளை அரசு கையாண்டு வருகின்றது.  தேசிய வருமானத்தில் 6 வீதத்தை இலவசக் கல்விக்காக ஒதுக்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கையாகும். எனவே  பொது மக்கள் ஒன்றிணைந்து போராடுவதனால்  மாத்திரமே சவால்களை வெற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எம்பிலிப்பிட்டிய நகரத்தில் நேற்று புதன்கிழமை நடைப்பெற்ற ஐக்கிய  தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார்.  இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
எதிர்வரும்  மாகாணசபை தேர்தல் முக்கியமானதொன்றாகும்.  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் அரசின் குறிப்பிட்ட சிலரினதும் தேவைக்காகவே இத்தேர்தல்  நடாத்தப்படுகின்றது. எவ்வாறாயினும்  அரசாங்கத்திற்கு  எதிரான மக்கள் குரல் மேலோங்கி வருகின்றது.  பாலியல் வல்லுறவுகள், சிறுவர் துஷ்பிரயோகம், கொலை, கொள்ளை, புதையல் தோண்டல், தேசிய சேமிப்பு வங்கியின்  நிதிக்கொள்ளை உட்பட  பல்வேறுக் குற்றச் செயல்கள் மேலோங்கி நாட்டில் அநீதியே  ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் எதிர்ப்பு மேலோங்கிவிட்டுள்ளது.  இந்த நிலையில்  அடுத்த ஆண்டில்  தேர்தலை  நடத்தினால் படுதோல்வியினையே அரசினால் எதிர்கொள்ள நேரிடும். இதனாலேயே முன்கூட்டியே தேர்தல் நடாத்தப்படுகின்றது. விரைவாக  தேர்தலை நடத்தி மீண்டும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களை தொடர பொது மக்கள் அனுமதியளிக்கக் கூடாது.
அரசாங்கம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள பௌத்த புனித பொருட்களை விகாரைகளுக்கு கொண்டு வந்தது.  இது முன்பும் இடம்பெற்றது.  பாவத்தை குறைத்து  நன்மைகளை அதிகரித்துக் கொள்ளவே மேற்படி  புனிதப் பொருட்களை வரவழைத்து வழிப்படுகின்றனர். எனவே  இனியும் அரசாங்கத்தின் பாவ வாழ்விற்கு  பொது மக்கள் அனுமதியளிக்கக் கூடாது.
பௌத்தர்கள் என்ற வகையில் மனதை கட்டுப்படுத்துவது  முக்கியமானதாகும். இதனை  முட்டாள்களுக்கு செய்ய  இயலாது. மனதை  கட்டுப்படுத்த  அடிப்படை  தகைமை  கல்வியாகும்.  இதனையும் அரசு தற்போது அழித்து  வருகின்றது.  அரசியல் தலையீடுகள் மேலோங்கி தேசிய இலவசக் கல்வியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விட்டுள்ளது.
உயர்தரப் பரீட்சை,  5ஆம் ஆண்டு புலமைப் பரீட்சை போன்றவை கூட இன்று நம்பகத் தன்மையற்ற வகையிலேயே இடம்பெறுகின்றன. இஸட் புள்ளி குளறுபடியினால் சுமார் 6000 மாணவர்கள் வரை பாதிக்கப்படும் நிலையே ஏற்பட்டுள்ளது. கல்விற்கான  நிதி தொடர்ந்தும் குறைக்கப்பட்டே வருகின்றன. எனவே எதிர்வரும் மாகாணச் சபை  தேர்தல் நாட்டின் பாதுகாப்புக்கானதாக அமைய வேண்டும் எனக் கூறினார்.

No comments:

Post a Comment