Translate

Thursday 16 August 2012

சர்வதேச நீதிமன்றில் அரசை நிறுத்த கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் வாக்களிப்போம்: அடைக்கலநாதன்

அரசாங்கம் ஐக்கிய நாடுகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத் தேர்தலை நடத்துகின்றது. தமிழ் மக்கள் மீது கிழக்கு மாகாணம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை செய்த அட்டூழியங்கள் படுகொலைகளுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் அரசு தண்டிக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். 


அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர் சண்முகம் திருஞானமூர்த்தியின் அக்கரைப்பற்று இல்லத்தில் கூட்டமைப்பு ஆதரவாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

அவர் தொடர்ந்தும் பேசுகையில், 

இத்தேர்தலை அரசாங்கம் ஒரு வருடத்துக்கு முன்பே நடத்துகிறது. சர்வதேசத்தின் அழுத்தத்திலே திண்டாடிக் கொண்டிருப்பதை உடைத்தெறிவதற்காக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் வாழுகின்ற கிழக்கு மாகாணத்தில் இந்தத்தேர்தலை நடத்தி கூடிய கருத்தை வெளியுலகிற்கு வெகுசுலபமாக சொல்லிவிடலாம் என்ற அர்த்தத்தில் இந்தத்தேர்தலை நடத்துகிறது. 

கிழக்கு மாகாணசபையை கலைக்க வேண்டாம் என்று முதலமைச்சர் கையெழுத்திட்டார். பின்னர் ஜனாதிபதி கேட்டதற்கு இணங்க மாகாண சபையைக் கலைக்கலாம் என்று அதே முதலமைச்சர் கையெழுத்துப் போட்டார். அதன் பிரகாரம் இந்த தேர்தல் நடக்கின்றது. பூர்வீக தமிழர்களின் சிந்தனையை உடைத்தெறிவதற்கான சதித் திட்டத்தோடுதான் அரசாங்கம் இத்தேர்தலை நடத்துகிறது. 

போராட்டம் இருக்கும்வரை இலங்கையில் தீர்வு வராது. இப்போராட்டத்திலே இனப்பிரச்சினைக்கான வழியிருக்காது என்று சொன்னார்கள். அதேநேரத்திலே விடுதலைப் புலிகளை அழித்துவிட்டோம் என்று சொல்லுகின்ற நிலையில் மூன்று வருடங்கள் கழிந்தும் அவர்கள் சாதித்ததுதான் என்ன? இந்த மூன்று வருடங்களுக்குள்ளே எங்களுடைய மக்களை படுகொலை செய்யவும் மக்களின் நிலங்களை அபகரிக்கவும் சிங்கள மக்களை குடியேற்றுகின்ற திட்டமும் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழுகின்ற இனம் என்பதை அழிக்கின்ற சதிமுயற்சிகளையும் செய்து கொண்டிருப்பதுதான் இம்மூன்று வருடங்களின் சாதனையாகும். 

வன்னி மாவட்டத்திலே செத்த வீட்டிற்கு, கலியாண வீட்டிற்கு, கோயில் திருவிழாவிற்கு, கச்சேரியில் கூட்டம் என்றால் கூட இராணுவத்துக்கு சொல்ல வேண்டும். அவ்வாறே அவர்களிடம் கேட்காமல் அபிவிருத்தியோ வேறு எந்த திட்டமோ செய்யக்கூடாது. இந்நிலையில் பொதுமக்களின் பல ஏக்கர் நிலங்கள் பறிபோயிருக்கின்றன. அதேவேளை எங்களுடைய பிரதேசத்தில் பௌத்த மதத்தை வழிபடுகின்றவர்கள் இல்லை. ஆனால், இன்று மூலைக்கு மூலை புத்தர் சிலை வைக்கின்ற நாகரீகம் முளைத்து வருகின்றது. 

அதேவேளை, கடற்தொழிலாக இருக்கலாம், வேறு என்ன தொழிலாகவும் இருக்கலாம். அதற்குகூட தென்னிலங்கையில் இருந்து வந்து தொழிலைச் செய்கின்ற வாய்ப்பு இருக்கின்றது. ஆனால், எங்களுடைய மீனவர்கள் பாஸ்முறை என்ற அழுத்தத்தோடு இருக்கின்றார்கள். 

இன்று வடக்கு, கிழக்கில் எத்தனை முகாம்கள் இருக்கின்றது. சம்பூரில் 6 மாதம் உலர் உணவு நிறுத்தப்பட்டு அந்த மக்கள் பிச்சை எடுக்கின்ற நிலையில் இருக்கின்றனர். அவர்களுக்கு காணி கொடுக்கப்படவில்லை. அம்பாறை, மட்டக்களப்பில் எத்தனை இராணுவ முகாம்கள் இருக்கின்றது. இதற்கு ஏதாவது வழி செய்ததாக இல்லை. ஆனால், அரசு ஏன் இந்த தேர்தலை அறிவித்திருக்கின்றது என்றால் ஐக்கிய நாடுகளின் அழுத்தமே காரணமாகும். 

இந்த அரசு இதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக கிழக்கு 
மாகாண தேர்தலை வைத்திருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் பெரும்பாலான ஆசனங்களை பெற்று அவர்கள் கிழக்கு மாகாணம் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரை எதிராக செய்த அட்டூழியங்கள், படுகொலைகள், அநியாயங்களையும் எங்களுடைய மக்கள் சரி என்று ஏற்றுக்கொள்கின்றனர் என்று சொல்லுகின்ற நிலையை இந்த தேர்தல் சொல்ல வேண்டும் என்பதற்காக இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வெற்றிலைச்சின்னத்தில் போட்டியிடுகின்ற சுயநல தமிழர்களுக்கு எங்கள் வாக்குகளை செலுத்துவோமாக இருந்தால் இந்த அரசாங்கத்தை உலக நாடுகளின் நீதித்துறையில் இருந்து காப்பாற்றுகின்ற துரோகத்துக்கு துணை போனவர்களாகுவோம். 

ஆகவே, அரசாங்கத்தை கண்டிக்கின்ற நீதிமன்றத்தில் நிறுத்துகின்ற அந்த அழுத்தத்தை இந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரிப்பதன் மூலமாக கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது எனவும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment