புதுடெல்லி : இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும் என்று ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜூ தெரிவித்துள்ளார். இலங்கை ராணுவ அதிகாரி மேஜர் திசநாயகா மகோத்தலலாகே, கடற்படை கேப்டன் ஹெவாவாசம் கண்டாடஜே ஆகிய 2 பேருக்கு ஊட்டி வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் கடந்த மே 19ம் தேதி முதல் 11 மாத பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலங்கை போரின்போது, ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையில், இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிரானது என்றும் அந்த அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்தி இலங்கைக்கு திருப்ப அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடந்த 25ம் தேதி கடிதம் எழுதினார்.
இது குறித்து டெல்லியில் ராணுவ இணை அமைச்சர் பல்லம் ராஜூவிடம் நிருபர்கள் கேட்டனர். அவர் பதிலளிக்கையில், ‘‘இலங்கை நமக்கு நட்பான அண்டை நாடு. இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு இந்தியா தொடர்ந்து பயிற்சி அளிக்கும். சில நேரங்களில் இது குறித்து மாநில அரசுகள் ஆட்சேபம் தெரிவித்தால் அதை அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளும்’’ என்றார்.
No comments:
Post a Comment