Translate

Tuesday 11 September 2012

'மக்களின் தீர்ப்புக்கு மதிப்பளிக்க தவறினால் அதிகாரப்பகிர்வு, ஜனநாயகத்தில் தமிழர்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம்' - இரா.சம்பந்தன்


'கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்கள் பலம் வாய்ந்த ஆணையை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தந்துள்ளனர். தமிழ் மக்கள் வழங்கிய ஜனாநாயகத் தீர்ப்புக்கு போதுமான மதிப்பு கொடுக்கப்பட வேண்டும். தவறினால் அதிகாரப்பகிர்வு மற்றும் ஜனநாயக நடைமுறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்படலாம்' என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.



Posted Image'முஸ்லிம் காங்கிரசின் முடிவில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது தங்கியிருக்கின்றது. ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாரிய விட்டுக்கொடுப்புக்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்' எனவும் அவர் கூறினார்.

இன்று செவ்வாய்க்கிழமை மாலை தனது இல்லத்தில் கிழக்கு மாகாண சபைக்கு கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 11 தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்களுடனான சந்திப்பில் சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார்.

கிழக்கு தேர்தல் முடிவின் பின்னர் ராஜதந்திரிகள் சிலருடனும் ஐதேக தலைவர் ரணில் விக்கிரமச்ங்காவுடனும் உரையாடியிருக்கின்றேன். தமிழ் மக்கள் தந்துள்ள ஜனநாயக தீர்ப்பை மதிக்க வேண்டும். ஜனநாயகத் தீர்ப்பை உதாசீனம் செய்யாது ஜனநாயக முடிவை மதித்து செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்களிடம் தாம் தெரிவித்ததாகவும் சம்பந்தன் கூறினார்.

கிழக்கு மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட 12 தமிழ் உறுப்பினர்களில் 11 பேர் தமிழ் தேசியக்கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். தவறுகள் இடம்பெறாது இருந்திருந்தால் 12 ஆவது இடங்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே கிடைத்திருக்கும் என்றும் தான் ராஜதந்திரிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்காவிற்கும தெரிவித்ததாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கிய கூட்டம் இன்று கொழும்பில் நடைபெறுகின்றது. கூட்டத்தில் இன்று முடிவு எடுக்கப்படமாட்டாது என்று தெரிகின்றது. முஸ்லிம் காங்கிரசின் முடிவில் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பது தங்கியிருக்கின்றது. ஆட்சி அமைக்கும் பட்சத்தில் பாரிய விட்டுக்கொடுப்புக்களை முஸ்லிம் காங்கிரஸுக்கு விட்டுக்கொடுப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

முதல் காலப்பகுதியில் முதல் அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம். எம் மக்களில் அநேகர் முதல் அமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க வேண்டும் என்றும் மாகாண ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற உறுதியுடன் இருக்கின்றார்கள். கிழக்கு மாகாண ஆட்சியை அமைப்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதற்கு ஆளும் தரப்பிற்கு இடமளிக்கக்கூடாது என்றும் சம்பந்தன் வலியுறுத்தினார்.

கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொ.செல்வராசா, பா.அரியநேத்திரன் மற்றும் சீ.யோகேஸ்வரன், யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமனற் உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் பங்குபற்றினர்.
http://www.yarl.com/forum3/index.php?showtopic=107929

No comments:

Post a Comment