தமிழ் தேசிய கூட்டமைப்பை உடைப்பதற்கு அரசாங்கம் சதி முயற்சி: தமிழ் தேசிய கூட்டமைப்பு
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியாத அரசாங்கம், வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளின் வீடுகளுக்குச் சென்ற இலங்கை அரசின் உயர்மட்ட பாதுகாப்பு புலனாய்வு பிரிவினர், அரசாங்க கட்சிக்கு ஆதரவு வழங்கினால் பல கோடி ரூபா பணமும் கொழும்பில் வீடும் தருவதுடன் மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பொறுப்பாகவும் தங்களை நியமனம் செய்வதாக கூறி அச்சுறுத்தல் செய்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலமைப்பீடத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அச்சுறுத்தலுக்குள்ளான மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் சம்பந்தமாக ஆராய்வதற்காக வெற்றிபெற்ற பதினொரு உறுப்பினர்களையும் இன்று மாலை திருகோணமலைக்கு அழைத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தலமைப்பீடம், அந்த உறுப்பினர்கள் அனைவரையும் திருகோணமலையில் உள்ள ஒரு பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து தேவையான பாதுகாப்பினையும் வழங்கியிருப்பதாக த.தே.கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இன்று மாலை சுமார் 7.00 மணியளவில் திருமலையில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே குறித்த இந்த முடிவெடுக்கப்பட்டள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பாக மேலும் தெரிவத்ததாவது,
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றி பெற்ற குறித்த உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் தொடர்பாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்கின்ற சதி நடவடிக்கை தொடர்பாகவும் இலங்கையில் உள்ள சகல வெளிநாட்டு தூதரகங்களிடமும் எழுத்து மூலமாக முறையிட்டுள்ளதாகவும் இலங்கையில் ஜனநாயகம் எவ்வாறு இருக்கின்றதென்பதை சர்வதேசம் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த இந்தக் கூட்டத்தில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், செயலாளர் நாயகம் மாவை சேனாதிராசா, யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பா.அரியநேத்திரன் சீ.யோகேஸ்வரன் அத்துடன் வெற்றி பெற்ற 11 மாகாண சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
கிழக்கில் ஆட்சியைக் கைப்பற்ற அரசாங்கம் பகீரதப்பிரயத்தனம்: த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கும் வலைவீச்சு
கிழக்கில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான ஆசனங்களை விலைக்கு வாங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாண சபைக்காக தெரிவான மூன்று பேருடன் அரசாங்கம் கதைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் உள்நாட்டு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்,
தமது மூன்று உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ளுமாறு அச்சுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணையாத பட்சத்தில், முஸ்லிம் காங்கிரஸில் இருந்து 4 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து இரண்டு பேரையும் பிரித்து ஈர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கான பேச்சுவார்த்தைகளை பிரதி அமைச்சர் கருணாவும், மற்றுமொரு அமைச்சரும் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற, கருணாவுக்கு ஆதரவான உறுப்பினர் ஒருவர், இந்த திட்டத்துக்கு இசைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்அடிப்படையிலேயே தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களையும் தம்முடன் இணைந்துக் கொள்ளுமாறு அமைச்சர் டலஸ் அழகப்பெரும இன்றை தினம் அழைப்பு விடுத்திருந்தார்.
நாளைய தினம் தமது அழைப்பின் பேரிலேயே கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தம்முடன் இணைந்துக் கொண்டுள்ளதாக அரசாங்கம் அறிவிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment