தமிழர் உரிமைகளை பறிப்பதில் அரசாங்கம் இன்றும் குறியாக இருக்கின்றது: சாவகச்சேரியில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்
இந்நிகழ்வில், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் திருமதி ஜங்கரன், காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் ஆனைமுகன், வடமாராட்சி தென்மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் வியாகேசு, நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் வசந்தகுமார் உள்ளிட்ட சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர்கள், செயலாளர் ஏனைய பிரதேச சபைகளின் உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன், தென்மராட்சி பிரதேச த.தே.கூட்டமைப்பின் அமைப்பாளரும் சாவகச்சேரி றிபேக் கல்லூரியின் அதிபருமான அருந்தவபாலன், சாவகச்சேரி இந்துக்கல்லூரி அதிபர் கைலாயபிள்ளை ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு தலைமையுரையாற்றிய சி.துரைராசா கருத்துரைக்கையில்,
எமது சபை நிறைந்த சவால்களுக்கு மத்தியில் இயக்கப்படுகின்றது. அதிகார தரப்புகளின் திட்டமிட்ட இடையூறுகள் இழுத்தடிப்புகள் எமது நிர்வாகங்களுக்குள் குழப்பங்களை ஏற்படுத்த விளைகிறது.
இருப்பினும் எமது சபையினரின் ஒற்றுமை, பணியாளர் தொகுதியின் ஆற்றல் காரணமாக சவால்களை கடந்து செல்லக்கூடியதாக இருக்கின்றது. இந்த விழா கூட சவால் நிறைந்த விழாவாகவே அமைகின்றது.
எம்மால் நிர்வகிக்கப்படுகின்ற இச்சபையின் இந்த புதிய கட்டிடத்தை அழுத்தங்களை பிரயோகித்து எமது சபையினரின் விருப்பங்களுக்கு மாறாக ஈ.பி.டி.பியின் அமைச்சர் திறப்பு விழா நடத்தி சென்றிருக்கிறார்.
எனவே எமது சபையின் அழைப்புக்களின் கூடிய விழாவாகவே இந்த விழா அமைகின்றது என்றார். தவிசாளர்கள் சார்பில் உரையாற்றிய வலி. மேற்கு பிரதேச சபையின் தலைவர் திருமதி ஜங்கரன், வடக்கில் எமது பிரதேச சபைகளை இயங்கவிடாமல் செய்வதற்கு பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன.
அண்மையில் சுன்னாகத்தில் எமது ஆளுகைக்கு உட்பட்ட பிரதேசசபை கட்டிடம் திறப்பதற்கு இருந்தபோது, அதற்கு ஓயில் ஊற்றி அசிங்கப்படுத்தி, அசிங்கமான அவர்களுடைய நாகரிகத்தை காட்டினார்கள்.
எங்களை பழிவாங்குவதாக நினைத்து மக்களை பழிவாங்குகிறார்கள். ஜனநாயக வழியில் தோற்றுப் போனவர்களாய் வன்முறைகளை கொண்ட எம் பணிகளுக்கு இடையூறு விளைவிக்க முற்படுகிறார்கள்.
எம்மோடு நேர்மையான பணியாளர்கள் இயங்குவதற்கு ஆளும் தரப்பாரின் அச்சுறுத்தல் நடவடிக்கைகளால் பயப்படுகிறார்கள். எனினும் அதையும் மீறி மக்கள் பணி ஆற்றுவதே கடமையாகும் என்றார்.
இங்கு முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றும்போது,
சாவகச்சேரி பிரதேச சபை ஒரு முன்னுதாரணமான ஒரு செயலை செய்திருக்கிறது. ஆளுகின்ற சபையின் விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல் தான்தோன்றித்தனமாக செயல்படும் அரசோடு சேர்ந்து இயங்கும் கூட்டங்களுக்கு இது ஒரு நல்ல பாடம்.
ஜனநாயக வழியில் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் த.தே.கூட்டமைப்பை சேர்ந்தவர்கள். பெரும்பாலான பிரதேச சபைகள், நகர சபைகள் வடக்கு கிழக்கில் எங்கள் கட்சியின் வசமே உள்ளது.
ஆனால் அந்த சபைகளை நடத்துவற்கு கூட இடமளிக்காமல் பல்வேறு அச்சுறுத்தல்களை இடையூறுகளை இந்த நாட்டை ஆளும் தரப்பாரும் அவர்களோடு ஒட்டியிருப்பவர்களும் விளைவிக்கின்றார்கள் என்றால் இந்த நாட்டில் எங்கே ஜனநாயகம் இருக்கின்றது.
சாதரணமான மாவட்ட மட்டங்களில் இருக்கக்கூடிய இந்த சபைகளையே தமிழர்கள் நிர்வகிப்பதை விரும்பாதவர்கள் எப்படி எமது உரிமைகளை தரப்போகின்றார்கள். பத்தொன்பது பேச்சுவார்தைகள் எமது கட்சியோடு நடந்தபோதும் எந்த தீர்வுகளும் எட்டப்படவில்லை.
மாறாக சிங்கள அரசாங்கம், தமிழர் நிலங்களை ஆக்கிரமிப்பதையும் சிங்கள் குடியேற்றங்களை ஊக்கவிப்பதிலும் மிகவும் குறியாக இருக்கின்றது.
எந்த அதிகாரங்களையும் எங்களிடம் தரஅரசு தயாராக இல்லை. மாகாண சபைகள் கூட ஆளுனரின் அதிகார வெறிப்பிடிக்குள் சுருண்டு கிடக்கின்றது. எந்த அதிகாரங்களும் முதலமைச்சருக்கு இல்லை.
இதுதான் யதார்த்தம் ஆயினும் எமது விரும்பத்தகாதவர்கள் வந்து விடக்கூடாது என்பதற்காக போட்டியிடுகின்றது. எல்லாவற்றையும் தமிழர்களிடமிருந்து பறித்துவிட்டு தமிழர்கள் தங்களுக்கு அடிமைகளாக வாழவேண்டுமென்பதே அவர்களின் குறிக்கோள்.
என்ன நடந்தாலும் இந்த மண்ணில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு ஆட்சியாளர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். காணாமல் போனவர்கள் பற்றி இவர்களிடமிருந்து இன்னும் ஏந்த பதிலும் இல்லை.இவற்றை சர்வதேசமும் உற்றுக் கவனித்துக்கொண்டு இருக்கின்றது.
ஜ.நா பெருமன்றம் இந்த ஆட்சியாளர்கள் தொடர்பான மேலும் தீர்மானங்களை எடுக்க தயாராகி வருகின்றது. இந்த நிலையில்தான் சவால்களை எதிர்கொண்டு சர்வேதேசத்தின் பார்வைகளில் எங்கள் பலத்தையும் நிரூபிக்க சித்தங்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த நிகழ்வில் பிரதேசசபைக்கு மனமுவந்து காணியை அன்பளிப்பு செய்த அம்மையாருக்கு மாலை அணிவித்து கௌரவம் அளிக்கப்பட்டதுடம் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment