Translate

Tuesday 25 September 2012

நியாயமான தீர்வை தமிழ் மக்களுக்குப் பெற்றத்தர வேண்டும்: கிழக்கு முதல்வரிடம் இரா. துரைரெட்ணம் கோரிக்கை


கிழக்கு மாகாணத்தில் கடந்த கால ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை தாங்கள் எமக்குச் செய்யாமல், எமது பிரச்சினைக்கு நியாயமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எமது மாகாணத்தில் சிறுபான்மை இன முதலமைச்சராக தாங்கள் தெரிவு செய்யப்பட்டதையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைவதோடு, நானும் ஒரு சிறுபான்மை இனத்தவன் என்ற வகையில் தங்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவிக்கின்றேன்.
கிழக்கு மாகாண சபை என்பது தமிழ் பேசும் மக்களின் 60 ஆண்டுகால போராட்டத்தின் அறுவடை. இதற்காக நாம் எண்ணற்ற விதைப்புக்களை இம் மண்ணில் விதைத்துள்ளோம். இந்த விதைப்புக்களின் ஈரங்கள் இன்னும் காயவில்லை. இந்த விதைப்புக்களின் ஒலங்கள், அவலங்கள் இன்னும் அடங்கவில்லை.
எங்கள் உடன்பிறப்புக்களின் கல்லறைகளின் மீது நின்ற ஆதிக்க விரோதமும், அதிகார மதமதையும் ஏகாதிபத்திய சிந்தனையும் கைகோர்த்து, தங்கள் நலனை வலியுறுத்தி, இலங்கை சோசலிச ஜனநாயக குடியரசின் 13வது திருத்தச்சட்டம் மூலமாக வழங்கப்பட்ட இந்த அதிகாரமற்ற சபை ஒன்றிற்கே நாம் கொடுத்த விலைகள் ஏராளம்.
ஆயினும், எமது உரிமைகள் தொடர்பாக, நாம் சாதிக்க வேண்டியவை அதிகம். போராடிப் பெறவேண்டியவைகள் ஏராளம். இந்த நெருக்குவாரங்கள், அதன் தாக்கங்கள், பொருளாதார ரீதியிலும், இராஜதந்திர ரீதியிலும் பேரினவாத ஆட்சியாளர்களை நிலைகுலையச் செய்தன.
அந்த இயலாமையிலும், விருப்பின்றி வெறுப்போடு எமக்கு வழங்கப்பட்டதே 13வது திருத்தச் சட்டம். இதனை இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கான முதற்கட்ட தீர்வாகவே நாம் பார்க்கின்றோம்.
இந்நிலையில் 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுதான் நாம் இன்னும் பகிரப்படாத அதிகாரங்களை பகிர்ந்தளிக்குமாறும், தமிழ் பேசும் இனங்களின் வாழ்வியல் உரிமைகளை வழங்குமாறும் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றோம்.
இந்த பேராட்டத்திற்கு உள்நாட்டிலும், தமிழ் நாட்டிலும், சர்வதேசத்திலும் வாழும் எமது உடன்பிறப்புக்கள் தொடர்ந்தும் குரல் கொடுத்த வண்ணம் உள்ளனர். இந்தவேளையில் தான் நடந்து முடிந்த தேர்தலின் தமிழ் பேசும் இனங்களின் ஆட்சியமைப்பு முக்கியமுடையதாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆட்சி அதிகாரம் என்பதும் உரிமையென்பதும் சலுகைகள் மூலம் நிலைநிறுத்தப்படலாம் என்ற பேரினவாத சிந்தனை வட்டத்தில், தாங்கள் ஆளும் தரப்பின்வழியில் நின்று அதிகாரத்தை பெற்றுக் கொடுக்கப் போவதாக பதிவியேற்றுக் கொண்டவுடனேயே ஊடகங்களுக்கு செய்தியில் தெரிவித்திருந்தீர்கள்.
இதனை தமிழ்பேசும் இனத்தின் சார்பில் வரவேற்கின்றேன். இவ்வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மகாவலி திட்டத்தின் கீழ் வரும் காணி, வாகரை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒமடியாமடு மேல்பகுதியிலும், கிரான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட காணி, வடமுனைக்கு மேல் பகுதியிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வளமுள்ள காணிகள் இவ்எல்லைப் புறத்தில் சிங்களவருக்கு மட்டும் பகிர்ந்தளிக்க கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
அதேபோல் இம்மாவட்டத்தில் வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி, செங்கலடி பிரதேச பிரிவுகளிலுள்ள வனபாலன திணக்களத்திற்கு சொந்தமான எல்லைப்புற அரச காணிகளில் சிங்கள ஊர்காவற் படையினருக்கும், சிங்கள விவசாயிகளுக்கும் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. மேலும், நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகள் சிங்கள சமூகத்தவருக்கு மாத்திரம் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன.
அத்துமீறி குடியேற்றப்பட்ட காணிகள் தொடர்பாக பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் சட்ட நடவடிக்கைகளை எடுத்த போதும், அவை கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவை தொடர்பான முழுமையான ஆதாரங்களுடன் கடந்த ஆட்சிகால முதலமைச்சருக்கு தெரியப்படுத்தியிருந்தேன்.
எனினும், அவர் அவ்விடயத்தில் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தின் பின் காலத்திற்கு காலம் பேரினவாத அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த குடியேற்ற திட்டங்கள் மூலம் தொடர்ந்தும் இம்மாவட்டத்தின் தமிழ் பேசும் இனம் பாதிக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் இத்தகைய கடந்த கால ஆட்சியாளர்களின் துரோகத்தனத்தை தாங்கள் எமக்குச் செய்ய மாட்டீர்களென நம்புகின்றோம்.
எனவே,
1. மட்டக்களப்பின் எல்லையிலுள்ள மகாவலி திட்டத்திற்குரிய காணிகள் விகிதாசார ரீதியில் இம் மாவட்டத்தில் வாழும் மூவின மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும்.
2. மட்டக்களப்பின் எல்லையிலுள்ள வனபரிபாலன திணைக்களத்திற்குச் சொந்தமான அரச காணிகள், சிங்கள ஊர்காவற் படையினருக்கு வழங்கப்பட்டதுபோல் இம்மாவட்டத்தில் வாழும் தமிழ்பேசும் மக்களுக்கும் வழங்கபபடல் வேண்டும்.
3. அத்துமீறி இம்மாவட்டத்தின் எல்லைப் புறங்களில் குடியேறியோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும். தாங்கள் ஆளும் தரப்பினரால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சர் என்ற வகையில் இதனை தங்கள் நல்லாட்சியின் முதற்பணியாக கருத்திற் கொண்டு நியாயபூர்வமானதும் தீர்க்கப்படாததுமான இப்பிரச்சினையை செவ்வனே தீர்த்து வைப்பீர்களென எதிர்பார்க்கின்றேன்.

No comments:

Post a Comment