நல்லிணக்கத்தை ஏற்படுத்தத் தவறின் பொதுநலவாயத்தின் நம்பகத்தன்மைக்கு சவால் ஏற்படும்; இலங்கைக்கு அந்த அமைப்பு எச்சரிக்கை
நல்லிணக்கம் தொடர்பாக, சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறினால் பொதுநலவாயத்தின் நம்பகத்தன்மை சவாலுக்குள்ளாகும் என பொதுநலவாய அமைப்பு தெரிவித்துள்ளது.
“தனது உள்நாட்டு பிரச்சினையை சமாதானமாகவும், கூட்டாகவும் தீர்ப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் மனவுறுதி மற்றும் ஆற்றலில் சர்வதேச சமூகம் நம்பிக்கையை இழந்தால் அது துரதிஷ்டவசமானதாகும். பொதுநலவாயமானது அரசுகளுக்கிடையிலான பாரிய சக்தியொன்றாக தன்னை வரையறுத்துக்கொள்ளத் தவறியதாக குற்றம் சுமத்துபவர்களுக்கு தானே ஆயுதம் வழங்கிய நிலைக்கு பொதுநலவாயம் தள்ளப்படும் நிலையை இது ஏற்படுத்தும்” என பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் நிறைவேற்றுக்குழுவின் தலைவர் சேர் அலன் ஹசெல்ஹர்ட் எம்.பி. கூறினார்.
கொழும்பில் நேற்று நிகழ்த்திய லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த உரையின்போதே ஹசெல்ஹர்ட் எம்.பி. இவ்வாறு கூறினார்.
நல்லிணக்க செயன்முறைக்கான தொழில்நுட்ப உதவிகளை பொதுநலவாயம் வழங்கும் எனக் கூறிய அவர், தனது பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கான இலங்கை அரசாங்கத்தின் ஆற்றலில் பொதுநலவாயம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எனினும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் தான் அர்ப்பணிப்புடன் இருப்பதை சர்வதேச சமூகம் நம்பச் செய்வதற்கு அரசாங்கம் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் கூறினார்.
நாட்டின் அனைத்து சமூகத்தினருக்கும் சமத்துவத்தை ஏற்படுத்துவதற்கான செயன்முறைக்கு காலவரையறை ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரினார். வெளிப்படைத்தன்மை, சமாதானம், சமத்துவம் என்பன ஜனநாயக ஸ்திரத்தன்மை மூலம் வலுப்படுத்தப்பட வேண்டும். எமது மாநாட்டின் கட்டமைப்புக்குள், இதற்கான உத்தரவாதத்தை பொதுநலவாய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்ப்பார்கள்’ என அவர் கூறினார்.
இலங்கையின் இறையாண்மையை அத்துமீறுவதற்கு பொதுநலவாயம் முற்படவில்லை எனவும் ஆனால் வெற்றிகரமான உள்நாட்டுத் தீர்வு பூர்த்தியாக்கப்படுவதை காண விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
http://www.saritham.com/?p=66162
இலங்கையில் ஜனநாயகத்திற்கு பற்றாக்குறை இல்லை: பொதுநலவாய செயலாளர் நாயகம்
September 13th, 2012 அன்று வெளியிடப்பட்டது -
இலங்கையில் ஜனநாயகத்திற்கான பற்றாக்குறையை தான் காணவில்லை என பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா கூறியுள்ளார். “இலங்கையில் ஜனநாயகத்திற்கான பற்றாக்குறை இருப்பதாக நான் கருதவில்லை. ஆனால், ஜனநாயகம் என்பது ஒரு தொடர்ச்சியான செயன்முறை என்பதை கருத்திற்கொள்கையில், முன்னேற்றத்திற்குள்ளாக வேண்டிய விடயங்கள் நிச்சயமாக உள்ளன” என அவர் கூறினார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்கு கனடா தயக்கம் காட்டுவது குறித்து கேட்டபோது, பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்வார்கள் என தான் நம்புவதாக கூறினார்.
ஜனநாயகம், சட்டத்தின்ஆட்சி, மனித உரிமைகள் ஆகியவற்றுக்காக ஆணையாளர் ஒருவரை நியமித்தல் குறித்த கேள்வி தற்போது இல்லை எனவும் இவ்வாறான அதிகாரி ஒருவரை நியமிக்காமல் இச்செயற்பாடுகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து பொதுநலவாயம் பின்னர் கலந்துரையாடும் எனவும் கமலேஷ் சர்மா கூறினார்.
பொதுச்சேவை. இளைஞர் தொழில்முயற்சியாண்மை, மற்றும் உள்ளூராட்சி அரசாங்கம் ஆகிய துறைகளில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பல திட்டங்களை ஆரம்பிப்பதற்கு பொதுநலவாயம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பொதுநலவாய நாடாளுமன்ற சங்கத்தின் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காகவும் எதிர்வரும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டிற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காகவும் பொதுநலவாய செயலாளர் கமலேஷ் சர்மா இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐ.நாவின் நடத்தையை பொதுநலவாயம் பின்பற்றக்கூடாதாம்; அறிவுரை கூறுகிறார் பீரிஸ்
September 13th, 2012 அன்று வெளியிடப்பட்டது -
அங்கத்துவ நாடுகளின் சுயாதீன விவகாரங்களில் திணிப்புகளை மேற்கொள்வதில் ஐ.நாவின் நடத்தையை பொதுநலவாயம் பின்பற்றக்கூடாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று கூறினார்.
“பொதுநலவாயமானது ஐ.நாவிலிருந்து வேறுபட்டது. எனவே ஐ.நா.வின் கொள்கைகள், நடத்தைகளை பொதுநலவாயம் பின்பற்றினால் அது பாரிய தவறாகிவிடும்” என நேற்று நிகழ்த்திய லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த நினைவுப்பேருரையின்போது அவர் கூறினார்.
பொதுநலவாயத்தின் தன்மைக்கு புறம்பான செயற்பாடுகளை அதன்மீது சுமத்த முயற்சிப்பதானது இந்த அமைப்பின் அடிப்படை கொள்கைகளை ஆபத்தில் தள்ளக்கூடும் என அவர் தெரிவித்தார்.
பொதுநலவாயமானது அரசுகளுக்கிடையிலான, தன்னார்வ அடிப்படையில் இணையக்கூடிய ஓர் அமைப்பாகும். எனவே அது ஏனைய நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பாக தீர்ப்பளிக்கும் தோரணையை ஏற்படுத்துவது சரியானதோ சாத்தியமானதோ அல்ல என அவர் கூறினார். ‘ என்ன செய்ய வேண்டும் என ஏனைய நாடுகளை பணிக்கும் நிலைப்பாட்டை பின்பற்ற முடியாது’ என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment