ஈழத் தமிழினம் கோரியது சிங்களத் தேசத்தின் பிரதேசங்களை அல்ல. பல்லாயிரம் ஆண்டுகள் தாம் வாழ்ந்த நிலப்பரப்பைத் தாமே ஆளும்அதிகாரத்தை மட்டுமே கேட்டுப் போராடிய போது, சிங்கள ஏகாதிபத்திய அரசுகள் வன்முறையத் திணித்து தமிழர்களை அடக்கி ஒடுக்க முற்பட்டன. தனது அரசியல் வாழ்க்கையில் தான் மட்டுமே ஈழத் தமிழர்களின் வரலாற்றை அதிகமாக அறிந்து வைத்துள்ளதாகக் கூறும் கலைஞர்,ஈழத் தமிழினம் அடக்கி ஒடுக்கப்படும்போது வெறுமனே வெகுசனப் போராட்டங்களைச் செய்வதன் மூலமாகத் தனது அரசியல் இருப்பை நிலைநிறுத்த எத்தனித்து வந்துள்ளார்.புறநானுற்றுக் கருத்துக்களை மேடைதோறும் பேசிவரும் கலைஞர் தமிழ்ப் பழமொழிகளை அறிந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை.
கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள ஏகாதிபத்திய அரசுகளினால் ஈழத் தமிழினம் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேலான அகிம்சை வழிப் போராட்டங்களும், பின்னர் ஆயுதப் போராட்டமும் ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் பலியெடுத்தது.
ஈழத் தமிழினம் அகிம்சை வழிப் போராட்டங்களைச் செய்த போது சிங்கள ஏகாதிபத்திய அரசுகள் வன்முறையைக் கட்டவிழ்த்திவிட்டுத் தமிழினத்தை அடக்கின. இளம் இரத்தங்கள் தமது வயதான தலைமைகளினால் அறவழிப் போராட்டங்கள் மூலமாக வெற்றிகொள்ள முடியாத போராட்டத்தை ஆயுதவழி மூலமாக அடையலாம் என்று எண்ணி ஆயுதங்களை ஏந்தி, கழுத்தில் நஞ்சுக் குப்பிகளை அணிந்து களம் கண்டபோது தமிழினப் போராளிகளைக் கொச்சைப்படுத்தினர் தமிழகத்தில் சில அரசியல் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்.
சிங்களவன் குட்டுகிறான் என்று தெரிந்தும் தமிழினம் என்பது குட்டுவாங்கியே அழியும் இனம் என்கிற தோரணையில் கலைஞரின் இராஜதந்திரக் காய்நகர்த்தல்கள் அமைந்துள்ளன. மானம் ரோசமுள்ள எந்தவொரு மனிதனும் தன்னை நேசிக்கும் இன்னொரு உயிருக்குப் பங்கம் விளைந்தால் களம் காணும் இனம் என்று வாய் கிழியப் பேசும் கலைஞர் உண்மையிலேயே ஈழத் தமிழினம் அழிவதைக் கண்டும் சோரம் போனதன் மூலமாக அவருடைய இராஜதந்திரம் தமிழினத்தின் பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் உதவாது என்பதையே எடுத்துக் காட்டுகிறது.
கலைஞரின் இராஜதந்திரம் என்பது உப்புச் சப்பில்லாத தந்திரம் என்பது எவ்வித ஜயத்துக்கும் இடமில்லாமல் உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது.ஒருவர் புத்திசாலித்தனமாகச் சிந்தித்து அடுத்து நிகழப் போகும் சம்பவங்களை இராஜதந்திர ரீதியில் கையாண்டு வெற்றிகளை அடைவதே உண்மையான இராஜதந்திரம்.ஈழத்தின் வரலாற்றைக் கூறும் கலைஞர் தனது இராஜதந்திரத்தை வைத்து இளைஞர்கள் ஆயுதங்களை ஏந்தும் முன்னர் தமிழீழத் தனியரசை நிறுவ உதவியிருந்தால் அது அவருக்குக் கிடைத்த இராஜதந்திர வெற்றியென்று கூறலாம்.
குட்டிமணி,ஜெகன் போன்ற ஈழத்தின் மாவீரர்களைச் சிங்களவனுக்குக் காட்டிக்கொடுத்துக் கொலை செய்வித்ததையா கலைஞர் இராஜதந்திரம் என்று கூறுகிறார் என்கிற கேள்வி பல தமிழ் மக்களிடம் இன்றும் பரவலாக இருக்கிறது. காங்கிரஸ் அரசின் செல்வாக்கை வைத்து பல்லாயிரம் தமிழ் மக்களை இறுதிப் போர்க் காலத்தில் காவந்து பண்ணுவதற்குப் பதில், காங்கிரஸ் அரசே நேரடியாகச் சிங்கள அரசுக்கு ஆயுதங்களை வழங்கி அன்று தமிழர்களைக் கொலை செய்ய உதவ ஒத்தாசையாக இருந்த கலைஞரா இன்று தானொரு இராஜதந்திரி என்று கூறுகிறார் என்கிற வினா அனைவர் மனங்களிலும் எழுகிறது.
வாய்ச் சொல்லில் வீரரடி!
தொண்ணூறு வயதிலும் கலைஞரின் வீரப் பேச்சுக்குத் தொய்வே வரவில்லை என்பதே உண்மை. மறதி பிழறாமல் இன்றும் தெட்டத்தெளிவாகப் பேசும் வல்லமையைப் பெற்றதே கலைஞருக்குக் கிடைத்த வெற்றி.கலைஞருக்கு எதிர்மாறான கொள்கையையே விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வைத்துள்ளார்;.பேச்சைக் குறைத்து செய்கையில் அதிக கவனம் வேண்டுமென்பதே பிரபாகரனின் கொள்கை. வாய் இருந்தால் வங்காளம் போய்வரலாம் என்பது தமிழ் மொழியில் பரவலாக இருக்கும் ஒரு உதாரணம். கலைஞருக்குக் கிடைத்த பேச்சு வலிமை என்பது நிச்சயம் இவரை உச்சக் கட்டத்துக்கே கொண்டுபோய் வைத்துள்ளது என்றால் மிகையாகாது.
தனது சுய வளர்ச்சிக்கு ஒரு இனத்தையே அடகு வைப்பது என்பது பாவப்பட்ட செயல். ஏதோ ஈழத் தமிழர்களின் எதிர்காலத்துக்காகவே தான் போராடுவதாகக் கூறும் கலைஞர், மறுகணமே எதிர்மறைவான கருத்தை வெளியிட்டுவருவது ஏமாற்றத்தை அளிக்கும் செயலாக இருக்கிறது. தமிழீழமே ஈழத் தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு ஒரே தீர்வென்று கூறுவதும், பின்னர் அதனைக் கைவிட்டுவிட்டு வேறொன்றைக் கூறுவதும் கலைஞருக்குக் கைவந்த கலை. இந்திய நடுவண் அரசில் முக்கிய கூட்டணிக் கட்சியாக இருந்துகொண்டு, நடுவண் அரசுக்கு எதிராக ஏதோ வெகுசனப் போராட்டங்கள் மூலமாக தான் மத்திய அரசை நிர்ப்பந்திப்பதாகப் போராட்டங்கள் செய்வது போன்ற வெகுளித் தனமான செயல்களைச் செய்யும் கலைஞர் தமிழர்களை மென்மேலும் முட்டாள்களாக்கவே முனைகிறார் போலும்.
ஏற்கனவே சிங்களவன் குட்டிக்குட்டித் தமிழர்களை முட்டாள்களாக்க முற்பட்டதன் விளைவாகப் புறப்பட்ட காளைகளே ஈழத் தமிழ்ப் போராளிகள்.கலைஞர் போன்ற தமிழக அரசியல்வாதிகள் தமிழினத்தைக் குட்டி வைப்பதன் மூலமாக அவர்களை மென்மேலும் முட்டாள்களாக்கலாம் என்று கருதிச் செயற்பட்டால் நிச்சயம் அதற்கான விலையை அவர் வாழும் காலத்திலேயோ அல்லது அவருடைய சந்ததியினரோ கொடுக்க வேண்டிவரும். தமிழினம் ஒன்றும் சோர்ந்த இனம் இல்லை என்பதனைக் காட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை.
தாங்கள் வைத்துள்ள பேச்சு வலிமையைக் கொண்டு அனைவரையும் ஏமாற்றி தமது சுய காரியங்களைச் செய்து முடிக்கலாம் என்று எவரேனும் கருதுவார்களேயானால் நிச்சயம் அவர்கள் தோல்வியிலேயே தமது பயணத்தை முடிக்க வேண்டிவரும்.சிங்களத்துக்கு எதிராக ஒரு புறம் பேசிவிட்டு, பின்னர் ஆளும் அ.தி.மு.க. அரசு ஏதேனும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான செயற்பாடுகளைச் செய்துவிட்டால் பழைய புராணங்களை ஓதி ஈழத் தமிழர்களுக்கு எதிரான ஏதேனும் செயற்பாடுகளைச் செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ள கலைஞர் தெளிவில்லாத ஒரு இராஜதந்திரவாதி என்பதனை நிருபித்துவருகிறார் என்பதே மறுக்க முடியாத உண்மை.
தமிழர்களின் எதிர்காலமே தனது கரிசனையாம்
அனைத்துத் துன்பங்களையும் ஈழத் தமிழினம் மீது கொடுத்த பின்னர் தற்போது ஓய்ந்து இருக்கிறது சிங்களம்.சிங்களவர்கள் கோபம் அடையும் வண்ணம் ஏதாவது செயற்பாடுகளைச் செய்தால் அது மீதமுள்ள ஈழத் தமிழர்களையும் அழித்துவிடும் என்று புதுவிதமான கருத்தைத் தெரிவித்துள்ளார் கலைஞர்.ஏதோ இதுவரை காலமும் ஈழத் தமிழர்களைச் சிங்களம் கொஞ்சிக் குலாவி வந்தது போலவும் இனிவரும் காலங்களில் மட்டும் சிங்களம் தமிழினத்துக்கு எதிராக செயற்பாடுகளைச் செய்யநேரிடும் என்பது போலவும் கலைஞரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.
அப்பாவித் தமிழ்ச் சிறார்களை பதுங்கு குழிகளுக்குள் செல்லும் முன்னர் குண்டு மழை பொழிந்து கொன்றதும்,பெண்களைப் பல்வேறுவிதமான சித்திரைவதைகளைச் செய்து கொன்றதும், முதியோர்கள் ஓரமாக ஒதுங்கியிருந்த வேளையில் பீரங்கிக் குண்டுத் தாக்குதல்கள் மூலமாக அழித்ததையெல்லாம் அறிந்த கலைஞர் தற்போது மறந்துவிட்டார் போலும்.
சிறிலங்காவிலிருந்து சென்ற கால்பந்து வீரர்களை அ.தி.மு.க. அரசு அண்மையில் திருப்பி அனுப்பியது. அவர்களை விளையாட அனுமதித்த அதிகாரி ஒருவரையும் தாற்காலிகப் பணி நீக்கம் செய்தது. அதன் தொடர்ச்சியாக வேளாங்கண்ணி,பூண்டி மாதா கோயில்களுக்குச் சென்ற சிங்கள சுற்றுலாப் பயணிகள் மீது பரவலாகத் தாக்குதல்கள் நடைபெற்றன. இவைகள் அனைத்தும் அ.தி.மு.க. அரசின் அடாவடித்தனம் என்று புதுவித விளக்கத்தைக் கொடுத்துள்ளார் கலைஞர். ஈழத் தமிழர்கள் மீது மிகுந்த அக்கறையோடு இருப்பதைப்போலக் காட்ட வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. அரசு கால்பந்து வீரர்களை நாட்டைவிட்டு வெளியேற்றிய காரணமாகத்தான் சிறிலங்காவிலிருந்து சென்ற பயணிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றன என்றும் கூறியுள்ளார் கலைஞர்.
கலைஞர் மேலும் கூறுகையில், “இலங்கைத் தமிழர்களுக்கும் இங்குள்ள தமிழர்களுக்கும் உள்ள உறவு என்பது தொப்புழ்க் கொடி உறவு.அப்படியிருக்கையில், இலங்கைச் சுற்றுலாப் பயணிகளைத் தாக்குவது என்பது இரண்டு நாடுகளுக்கும் உள்ள உறவைக் கெடுக்கக் கூடிய ஒன்றாகும். இலங்கையில் இன்னும் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்றனர். இப்போது உள்ள சூழலில் அவர்கள் வாழ்வதற்கேகூடச் சிரமப்படுகின்றனர். அவர்களை மேலும் கொடிய துன்பங்களுக்கு ஆட்படுத்தும் நிலையை நாம் ஏற்படுத்தக் கூடாது. இந்தியா வரும் இலங்கைப் பயணிகளுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரும் கூறியுள்ளனர்.”
“இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு எதிரான தீர்மானம் ஐ.நா. மன்றத்தின் ஜெனீவா மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 14-ம் தேதி ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை தலைமையில் தொழில்நுட்பக் குழு ஒன்று, இலங்கை சென்று போரில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கிறது.மறு குடியமர்த்த மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும், இடம்பெயர்ந்து வாழும் மக்களின் பிரச்னைகளையும் ஆய்வு செய்து இலங்கை அரசுக்கு ஆலோசனைகள் வழங்குகின்றனர். இந்த நேரத்தில் தேவையில்லாமல் ஒரு பிரச்னையை நாமே உருவாக்குவது என்பது அங்குள்ள தமிழர்களுக்கு மேலும் இன்னலை ஏற்படுத்தும்.மறுவாழ்வுப் பணியில் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகவும் அமையும்.”
“யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்ற உயர்ந்த மரபு வழியில் நாம் வந்தவர்கள். எந்தத் தேசிய இனத்துக்கும் எதிரானவர்கள் இல்லை.எனவே இலங்கையில் இருந்து சுற்றுலா, ஆன்மிகம், கலாசார பரிமாற்றம் மற்றும் தொழில் காரணங்களுக்காக இந்தியாவுக்கு, தமிழகத்துக்கு வருகிறவர்கள் மீது தாக்குதல் தொடுப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. தமிழ் மக்கள் எந்த வகையிலான எதிர்மறை உணர்ச்சிகளுக்கும் இடம் கொடுக்காமல் அமைதி காக்க வேண்டும். இது இலங்கையில் வாழும் தமிழர்களின் பாதுகாப்புக்காகவும்,நலனுக்காகவும் விடுக்கும் வேண்டுகோளாகும்” என்று கலைஞர் கூறியுள்ளார்.
தொப்புழ்க் கொடி உறவைப் பற்றிப் பேசும் கலைஞர் ஈழத் தமிழினம் இந்தியாவின் கரைகளைச் சென்றடைந்த போது அவர்களுக்கு அளித்த வரவேற்புக்கள் என்னவென்பது உலகறிந்த உண்மை. ஈழத் தமிழ் அகதிகள் என்றால் புலிப் பயங்கரவாதிகள் என்கிற பாணியில் நடத்திய இந்திய மற்றும் தமிழக அரசுகள் இன்று சிங்களப் பயணிகளுக்கும் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கும் ஏதோ சில அசம்பாவிதம் நடந்துவிட்ட உடனையே சிங்கள அரசுக்குப் பயந்து பேசுவது போன்ற நிலையே கலைஞரின் பேச்சில் தெரிகிறது. ஈழத்தில் தமிழினத்தை அழித்த ஒரு இனத்தின் மீது தமிழகத்தில் இடம்பெறும் சம்பவங்கள் நிச்சயம் சிறிலங்கா அரசுக்கு ஒரு எச்சரிக்கையாகவே அமையும். தமிழன் என்றால் நாதியற்றவன் என்றே சிங்களம் இதுநாள் வரை கருதி வந்துள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் இடம்பெறும் சிங்களத்துக்கு எதிரான சம்பவங்கள் நிச்சயம் ஈழத் தமிழர்களின் விடுதலையைத் துரிதப்படுத்துமே தவிர கலைஞர் கூறும் தீங்கு இடம்பெற சாத்தியமில்லை. ஈழத் தமிழினம் இதுவரை காலமும் சந்தித்த துயரமான சம்பவங்களுக்கு நிகர் இனிவருவதாகக் கூறும் துயரம் ஒன்றும் புதியனவாக இருக்கப் போவதில்லை. குட்டக்குட்ட குனியிறவனும் மடையன் குட்டுறவனும் மடையன் என்கிற கருத்து சிங்களத்துக்கு எவ்வகையில் பொருந்துமோ அந்தவகையில் கலைஞருக்கும் சாலப் பொருந்தும்.
No comments:
Post a Comment