Translate

Thursday, 13 September 2012

கிழக்கு மக்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளதன் மூலம், அரசாங்கத்துக்கு தெளிவானதொரு செய்தியைக் கூறியுள்ளனர்

Posted Imageகிழக்கு மாகாணசபைத் தேர்தல்: உண்மையான வெற்றி வெற்றி?கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எப்படியாவது தோற்கடித்து விடலாம் என்று அரசாங்கம் கணக்குப் போட்டிருந்தது. சுலபமான வெற்றியை அது எதிர்பார்த்தது.

ஆனால் கிழக்கு மக்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளதன் மூலம், அரசாங்கத்துக்கு தெளிவானதொரு செய்தியைக் கூறியுள்ளனர். இந்தத் தீர்ப்பின் உண்மையை, தாற்பரியத்தை அரசாங்கம் உணர்ந்து நடந்து கொண்டால் சரி. 

  (கே.சஞ்சயன்)

கிழக்கு மாகாண சபைக்கான தேர்தல் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது போலவே, முடிவுகளை தந்துள்ளது. கிழக்கின் இனப்பரம்பல் காரணமாக யாருக்கும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையை ஏற்படுத்தும் என்ற கணிப்பு தப்பாகிப் போகவில்லை.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 6217  வாக்குகள் அதிகமாகப் பெற்றதன் மூலம், கிழக்கு மாகாணசபையில் 3 மேலதிக ஆசனங்களைப் பெற்றுள்ளது.



இதன்காரணமாக, 11 ஆசனங்களுடன் இரண்டாம் நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தள்ளப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், இந்தத் தேர்தலில் 11 ஆசனங்களை எதிர்பார்த்தது. அதாவது திருகோணமலையில் 4 ஆசனங்கள், மட்டக்களப்பில் 5 ஆசனங்கள், அம்பாறையில் 2 ஆசனங்களை தாம் எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூடடமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறியிருந்தார்.

அத்துடன் இரண்டு போனஸ் ஆசனங்களையும் அவர் எதிர்பார்த்திருந்தார். போனஸ் ஆசனங்களைப் பெற வேண்டுமானால், மாகாண அளவில் கூடுதல் வாக்குகளைப் பெற வேண்டியிருந்தது.

அது முடியாமல் போனது. எனினும் அவர்களின் 11 ஆசனங்கள் என்ற குறி தப்பவில்லை. திருகோணமலையில் எதிர்பார்த்ததை விட ஒன்று குறைவாக -  3 ஆசனங்கள் கிடைத்த போதும் மட்டக்களப்பில் கிடைத்த 6 ஆசனங்கள் அதனை சமப்படுத்திக் கொண்டது.



அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தனித்து ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கும் என்று நம்பவும் இல்லை, எதிர்பார்க்கவும் இல்லை.

தமிழ்பேசும் மக்கள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கலாம் என்றே கூறியது. அதாவது முஸ்லிம் காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைப்பதிலேயே அதிக நம்பிக்கை கொண்டிருந்தது.

அதேவேளை தமிழ்மக்கள் அதிகளவில் வாக்களித்தால் தனிப் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்புள்ளதையும் சுட்டிக்காட்டியது. இந்தத் தேர்தலில், தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பிரதிபலிப்பு தெளிவாகவே உணர்த்தப்பட்டுள்ளது.

தமிழர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே பெரும்பான்மையாக ஆதரித்துள்ளனர். முஸ்லிம்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பெரும்பாலும் ஆதரித்துள்ளனர்.

அதுபோலவே சிங்களவர்களில் பெரும்பாலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும் ஐதேகவையும் ஆதரித்துள்ளனர். தமிழ் ம,க்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தேசிய காங்கிரஸ் போன்ற சிறுபான்மை கட்சிகளின் வாக்குகள் தான் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியைக் காப்பாற்றியுள்ளன.

இந்தத் தேர்தலில் அதிக ஆசனங்களை வென்றுள்ள போதிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால், அதைப் பெரிய வெற்றியாகக் கொண்டாட முடியாத நிலையே உள்ளது.

காரணம், அதன் வாக்கு வங்கி கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பெரும் சரிவைக் கண்டுள்ளது. 2010ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கிழக்கில் சுமார் 44 சதவீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால், இம்முறை வெறும் 30.59 வீத வாக்குகளையே பெற முடிந்துள்ளது.

வாக்குகள் என்ற கணக்கில் பார்த்தால், சுமார் 65 ஆயிரம் வாக்குகளை ஆளும்கட்சி இழந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு சுமார் 20 ஆயிரம் வாக்குகளைப் பெற்ற சிவனேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, இம்முறை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டது.

நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிட்ட தேசிய சுதந்திர முன்னணி இம்முறை தனித்து போட்டியிட்டு 9522 வாக்குகளைப் பெற்றது.

இவை எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் கூட,கடந்த 2010ம் ஆண்டு பொதுத்தேர்தலை விட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இம்முறை 64,411 வாக்குகள் குறைந்து போயுள்ளன.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், இந்தத் தேர்தலில் ஆசனங்களைக் குறைவாகப் பெற்றுள்ள போதிலும், அதிகளவு வாக்குகளைப் பெற்றுள்ளது.

அவர்களுக்கு இது ஒரு சாதகமான நிலை என்றே கூறலாம். கிழக்கின் சனத்தொகையில் சுமார் 40 வீதமே  தமிழ் மக்கள். இவர்களில் வாக்களித்தவர்களில் கிட்டத்தட்ட 30.59 வீதத்தினரின் ஆதரவை அது பெற்றுள்ளது.

Posted Image


கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கில் 21.89 வீத வாக்குகளே கிடைத்தன. 2004ம் ஆண்டுக்குப் பின்னர் மட்டக்களப்பை தன் கைக்குள் போட்டுக் கொண்டு விட்டதாக கருதியிருந்த அரசாங்கத்துக்கு, இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் அடியே வீழ்ந்தது எனலாம்.

ஏனென்றால், அங்கு இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுடன் இணைந்து போட்டியிட்ட போதும் வெறும் 2 ஆயிரம் வாக்குகளையே அதிகம் பெற முடிந்துள்ளது.

அதேவேளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இங்கு 38 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை மேலதிகமாகப் பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த முறை கிட்டத்தட்ட 43 வீத வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்த ஆளும்கட்சியால், இம்முறை, வெறும் 28.38 வீத வாக்குகளையே பெற முடிந்துள்ளது. அம்பாறையிலும் அதே கதி தான்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 52 வீத வாக்குகளைப் பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால், 33.66 வீத வாக்குகளையே இம்முறை பெற முடிந்துள்ளது.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி 10.47 வீதத்தில் இருந்து 16.28 வீதமாக உயர்ந்துள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வெற்றி பெற்ற பியசேனவை அரசாங்கம் தன்கைக்குள் போட்டுக் கொண்டது.

ஆனால், அம்பாறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை அவரால் உடைக்க முடியவில்லை. எனவே, கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் நிம்மதியாக இருக்க முடியாது.

வடக்கு தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் உள்ளது போன்று சாதகமான நிலை உள்ளதாக கருத முடியாது.



அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரையில், கடந்த தேர்தலில் ஐதேகவுடன் கூட்டணி அமைத்ததை விட அதிகமான வாக்குகளை இம்முறை பெற்றுள்ளது.

அதேவேளை ஐதேகவுக்கும் கூட அதிக வாக்குகள் தான் கிடைத்துள்ளன. இந்தத் தேர்தலின் மூலம் கிழக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானோரால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது அம்பாறையில் 18.33 வீதம் தமிழர்களாக இருந்த போதும், வாக்களித்தவர்களில் 16.28 வீதத்தினர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்துள்ளனர்.

திருகோணமலையில் 28.75 வீதத்தினரே தமிழர்கள். ஆனால் வாக்களித்தவர்களில் 29 வீதமானவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளனர்.

மட்டக்களப்பில் 74 வீதம் தமிழர்கள்.  இங்கு வாக்களித்தவர்களில் 51 வீதமானோர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இது இன்னொரு ஆணையாக- அங்கீகாரமாக வழங்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் சார்பில் பேசுவதற்கான பலத்தை, கிழக்கு மக்கள் அவர்களுக்குக் கொடுத்துள்ளனர்.

ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புக் கிடைக்காது போனாலும் கூட, அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தோல்வியாக கருதப்படாது. அவ்வாறு கருதுவதும் முட்டாள்தனம். ஏனென்றால் கிழக்கின் இனப்பரம்பல், அவ்வாறானது.

கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எப்படியாவது தோற்கடித்து விடலாம் என்று அரசாங்கம் கணக்குப் போட்டிருந்தது. சுலபமான வெற்றியை அது எதிர்பார்த்தது.

ஆனால் கிழக்கு மக்கள் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்துள்ளதன் மூலம், அரசாங்கத்துக்கு தெளிவானதொரு செய்தியைக் கூறியுள்ளனர்.

இந்தத் தீர்ப்பின் உண்மையை, தாற்பரியத்தை அரசாங்கம் உணர்ந்து நடந்து கொண்டால் சரி.


http://www.tamilmirr...3-15-34-52.html 

No comments:

Post a Comment