Translate

Thursday, 13 September 2012

கராடிச், மிலாடிச், ஓமர், கடாபி… வரிசையில் அடுத்தது யார்? – இலண்டனிலிருந்து பரா பிரபா
இலங்கைத்தீவில் இடம்பெற்ற போரில் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தமைக்கான பலமான சான்றாதாரங்கள் இருந்தும் குற்றவாளிகள் இதுவரை தண்டிக்கப்படவில்லை. அல்லது அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை இது ஏன்? என்ற கேள்வி போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மத்தியிலும், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மத்தியிலும் பலமாக இருந்து வருகின்றது. எனவே அது பற்றி இந்தப் பத்தியில் ஆராயலாம். மேற்சொன்ன குற்றங்களை பொஸ்னியா, றுவாண்டா, கொங்கோ, உகண்டா, சூடான், கென்யா போன்ற நாடுகளில் புரிந்தவர்களான அந்நாட்டின் தலைவர்களும், படைத் தளபதிகளும், இன அழிப்பிற்குத் துணை நின்றவர்களும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டும், கைது செய்யப்பட்டும், கைதாணை பிறப்பிக்கப்பட்டுமுள்ளனர். இந் நிலையில் இலங்கைத்தீவில் இடம்பெற்ற அவ்வாறான குற்றங்கள் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது ஏன் அவ்வாறானதொரு நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை? அல்லது எடுக்க முனைப்புக் காட்டப்படவில்லை?

அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்
1998ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் நாள், அதாவது 14 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டதே அனைத்துலக குற்றவியல் நீதிமன்றமாகும் (International Criminal Court – ICC). இரண்டாம் உலகப் போரின்போது மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், அமைதிக்குஎதிரான குற்றங்கள், மற்றும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்பதை நூரன்பேர்க், ரோக்யோ வழக்குகளில் கண்டறியப்பட்ட காலத்தில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஒன்றிற்கான அவசியம் உணரப்பட்டது. உலகின் பனிப்போர் முடிவடைந்த 1990களின் பிற்பகுதியைத் தொடர்ந்து இடம்பெற்ற யூகோஸ்லாவியா, றுவாண்டா ஆகியவற்றின் போர்க்குற்ற விசாரணைகள் ஒரு நிரந்தர பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றிற்கான அவசியத்தை மேலும் வலுப்படுத்தியதன் விளைவே இந்த அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் உருவாக்கமாகும்.
ஆனால் இந்த நீதிமன்று நிறுவப்பட்ட நோக்கம் முறையாக நிறைவேற்றப்படுகின்றதா என்ற கேள்வி மீண்டும்
எழுகின்றது. 120 நாடுகளின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் 2010 ஜூன் மாதம்வரை 114 நாடுகள் அதன் அரசியல் அமைப்பை ஏற்று அங்கத்துவம் பெற்றுள்ளன. இவை தவிர அமெரிக்கா, ருஸ்யா உட்பட 34 நாடுகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், அதன் அரசியல் சாசனத்தை ஏற்றுக்கொள்ள மறுப்புத் தெரிவித்து வருகின்றன. இந்தியா, பாகிஸ்தான், சீனா, சிறீலங்கா, போன்ற ஆசிய நாடுகள் பலவும், சூடான் உட்பட ஆபிரிக்க நாடுகள் என மொத்தம் 43 நாடுகள் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் அங்கத்துவ நாடுகளாக இணைய இதுவரை மறுப்புத் தெரிவித்து வருகின்றன.
இதேவேளை, இதுவரை நாடுகளாக ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக் கொள்ளப்படாத, அதாவது சுதந்திர நாடுகளாகப் பிரகடனம் செய்யப்படாத பலஸ்தீனத்தின் தேசிய சபையும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில்
அங்கத்துவம் பெற்றுள்ளதை நாம் இங்கு அவதானிக்கலாம். உலகின் நாடுகளை ஒருங்கிணைக் கும் பொதுமன்றமாக இருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கம் அல்லாத ஒரு சுயாதீன நிறுவனமே இந்த அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் என்பதை நாம் இங்கு கவனத்திற் கொள்ள வேண்டும். எனவே ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் அனைத்து நாடுகளிற்கும் பொதுவான விதிமுறைகளும், நடைமுறைகளும் இருப்பது போன்று
இங்கு இல்லை.
ஆனால் குற்றவியல் நீதிமன்ற சாசனத்தை ஏற்றுக்கொண்ட அல்லது கையெழுத்திட்ட நாடுகள், அல்லது அதன் தலைவர்கள் மீது மட்டுமே வழக்குத் தொடர முடியும் என்ற வாதமும் அடிபட்டுப் போவதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். குறிப்பாக சூடானை எடுத்து நோக்கலாம். இந்த நாடு அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் அங்கத்துவம் பெறவோ, கையெழுத்திடவோ மறுத்து வருகின்றது. ஆனால் அதன் அரச அதிபர் ஓமர் ஹசன் அஹ்மட் அல் பசீர் (OmarHassan Ahmad Al Bashir) மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றினால் பிடியாணை
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சூடான்
சூடானில் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கும், பூர்வீகக் கறுப்பின மக்களிற்கும் இடையில் 50 வருடங்களாக இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் ஒன்றரை மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 09-07-2011 அன்று ‘தெற்கு சூடான்’ சுதந்திரப் பிரகடனம் செய்யப்படும் வரை பழங்குடி மக்கள் டார்ஃபூரில் இடம்பெயர்ந்து அவலப்பட்டதும், கறுப்பின மக்கள் மீது இடம் பெற்ற படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் பற்றி நாம் நாளாந்தம் செய்திகளில் அறிந்திருக்கின்றோம். இவை பற்றி கவனம் செலுத்திய ஐக்கிய நாடுகள் சபை, குறிப்பாக அதன் அப்போதைய செயலாளர் நாயகம் கோபி அனான் (Kofi Annan) டார்பூருக்கான அனைத்துலக விசாரணை ஆணைக்குழுவை (The International Commission of Inquiry on Darfur) 2004ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நியமித்திருந்தார்.
இந்த ஆணைக்குழு சரியாக மூன்று மாதங்களில் 2005ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது அறிக்கையை கோபிஅனானிடம் சமர்ப்பித்திருந்தது. கோபி அனான் அறிக்கையைப்பெற்று இரண்டு மாதங்களில் (31-03-2005) ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் டார்பூர் பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், அனைத்துலக சட்ட விதிகள் மீறப்பட்டு போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள், இன அழிப்பு இடம்பெற்றதால், அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் எனப் பரிந்துரை செய்தது. இந்த விசாரணையை தாம் நடத்த வேண்டுமா என அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் நடத்திய முன்னாய்விற்கு பல அரசாங்கங்கள், ஆபிரிக்க ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபை, அதன் இதர அமைப்புக்கள், உள்நாட்டு – வெளி நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்கள், ஊடகங்கள், மற்றும் பல நிபுணர்கள் சாதகமாகப் பதில் வழங்கியதால், இந்த விசாரணை இடம்பெற்று, சூடானின் முன்னாள் உள்துறை அமைச்சர் அஹ்மட் முஹமட் ஹருன் (Ahmad Muhammad Harun), அலி முஹம்மட் (Ali Muhammad Ali Abd-Al-Rahman) ஆகியோர் மீது 2007ஆம் ஆண்டும், அரச தலைவர் ஓமர் ஹசன் அஹ்மட் அல் பசீர் (Omar Hassan Ahmad Al Bashir) மீது 2009 மார்ச், பின்னர் 2010 ஜூலையில் இரண்டாவது தடவையாகவும் கைதாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
படுகொலை, மக்களை இடம்பெயரவைத்தமை, வதை, பாலியல் வல்லுறவு போன்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் (Crimes against humanity), பொதுமக்களிற்கு எதிரான தாக்குதலை வழி நடத்தியமை, போன்ற போர்க்குற்றங்கள் (War crimes), படுகொலை, காயங்களை ஏற்படுத்தியமை, உள ரீதியான தாக்கத்திற்கு உட்படுத்தியது, சமூக, கலாசார கட்டுமானங்களை அழித்தமை போன்ற இன அழிப்பு (Genocide) ஆகிய 10 குற்றங்கள் ஓமர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
சிறீலங்கா?
சூடானை இங்கு உதாரணமாக எடுத்துக் கொண்டதற்குக் காரணம் அதுவும் சிறீலங்கா போன்று அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றில் இணைந்து கையெழுத்திடாத நாடு என்பதாலாகும். சூடானில் இடம்பெற்றதற்கும், வன்னி உட்பட தமிழர் நிலப்பரப்புக்களில் இடம்பெற்ற பேரவலத்திற்கும் உயிரிழந்த மக்கள் எண்ணிக்கையைத் தவிர வேறெந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் அண்மையில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட லிபியாவுடன் ஒப்பிடும்போது எமது நிலத்தில் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாகும். லிபியாவில் சில ஆயிரக்கணக்கான மக்களே கொல்லப்பட்டுள்ள பின்புலத்தில் அந்த நாட்டின் அரசாங்கம் மீதான விசாரணை, மற்றும் கைதாணை பிறப்பிக்கப்பட்ட வேகம் என்பன, அனைத்துலகப் பொறிமுறை பற்றிய சந்தேகத்தையும், சோர்வையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றன என்பது உண்மையே.
காரணம் 2011ஆம் ஆண்டு பெப்ரவரி 26ஆம் நாளே லிபியா மீது விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றியது. லிபியா மீதான நேட்டோ படைகளின் தாக்குதல்கள் ஆரம்பித்து 100வது நாளான 2011 மே ஜூன் 27ஆம் நாள் (27-06-2011) லிபிய அரச அதிபர் கேணல் மும்மர் கடாபி, அவரது மகன் சயிப் அல் – இஸ்லாம், அரச புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் அப்துல்லா அல் – சனூசி ஆகியோர் மீது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் கைதாணையைப் பிறப்பித்தது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபை பரிந்துரை
செய்த இரண்டு விசாரணைகளும் (சூடான், லிபியா) மிக வேகமாக நடந்தேறியுள்ள நிலையில், இலங்கைத்தீவில் இடம்பெற்ற இன அழிப்புக்கான சான்றுகளை ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையில் உள்ளடக்கிய போதிலும், தமிழ் மக்கள் மீது இடம்பெற்றது இன அழிப்பு என்று சொல்வதற்கும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஐ.நா தயக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.
ஐ.நா செயலாளர் பான் கி – மூன் இலங்கை பற்றிய அறிக்கையை கிடப்பில் போட்டுவிட்டு அதன் மேல் அமர்ந்திருக்கின்றார் என அனைத்துலக மன்னிப்புச் சபை பகிரங்கமாகக் குற்றம் சாட்டிய போதிலும், தமிழ் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட சிறீலங்கா அரசாங்கத்தின் ‘கற்றுக்கொண்ட பாடங்களும், நல்லிணக்க ஆணைக்குழுவின்’ அறிக்கையை அமுல் செய்யுங்கள் என ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மீண்டும் தமிழ்
மக்களை ஏமாற்றும் இந்திய – மேற்குலக கூட்டுத் தயாரிப்புப் படமாகும்.
15 நாடுகளைக் கொண்ட ஐ.நா பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு, வீற்றோ அதிகாரம் கொண்ட ஐந்து நாடுகளில் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் தவிர சீனா, ருஸ்யா போன்றன சிறீலங்காவிற்கு ஆதரவாக இருக்கின்றன. சூடான், லிபியா போன்ற நாடுகளின் விடயத் தில் இந்த இரண்டு நாடுகளின் ஆதரவைப் பெற்று தீர்மானம் நிறைவேற்றிய மேற்குலகம், ஈழத்தமிழ் மக்கள் விடயத்தில் மட்டும் ஏன் செய்ய முடியாது இருக்கின்றது? டார்ஃபூரிலும், பென்காசியிலும், பொஸ்னியா விலும் அக்கறைகொள்ளும் உலகம் முள்ளிவாய்க்காலை மறந்ததும், மறக்கவும், மறைக்கவும் முற்படுவதும் ஏனோ? உலகையும், உலகின் மனங்களையும் வெல்லும் வல்லமை பாதிக்கப் பட்ட தமிழ் மக்களிடம் இருந்தும் அவர்கள் மௌனிகளாக இருப்பதன் காரணம் என்ன? தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி பெறாது விடுவது, இழந்த மக்களை இழிவுபடுத்துவதாக அமைந்து விடாதா? தமிழ்
மக்களை வழி நடத்துவதாகக் கூறுபவர்கள் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? சிந்திப்போம்! சிந்தித்தால் மட்டும் போதுமா?
நன்றி : இது நம் தேசம்

No comments:

Post a Comment