Translate

Monday, 3 September 2012

வாக்குறுதிகளை நம்புவதை விடுத்து தீர்வு எட்டப்படுவதனை உறுதிசெய்க; ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு மன்னிப்புச் சபை அறிக்கை.

சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணைகளை நடத்தி குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்கள் தொடரவே செய்கின்றன. அத்துடன் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்தும் விடயத்திலும் இலங்கை அரசின் செயற்றிட்டம் திருப்திகரமானதாக இல்லை.
இலங்கை அரசு சர்வதேசத்துக்கு வழங்கிவரும் வாக்குறுதிகளை நம்புவதை விடவும் நீதியான தீர்வை வழங்கும் நடவடிக் கைக்கே சர்வதேசம் வலியுறுத்த வேண்டும் இவ்வாறு கோரியுள்ளது  சர்வதேச மன்னிப்புச் சபை.

இலங்கையின் தற்போதைய நடைமுறை விடயங்கள் தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமைகள் சபைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளது. இந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை தொடர்பில் தெரிவித்துள்ளது.

இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு.

இலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அத்தோடு இத்தகைய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையும் காணப்படுகிறது.

இதனால் தொடர்ந்தும் இதுபோன்ற குற்றங்கள் நீடித்துச் செல்கின்றன. போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்கள் தொடரவே செய்கின்றன. பலவந்தமான ஆள்கடத்தல்கள் கைதுசெய்யப்பட்டுதடுத்து வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்படுதல் போன்ற பாரதூரமான குற்றங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகின்றன.

சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணைகளை நடத்தி குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது. இத்தகைய தண்டனைகள் மூலமே தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்படாமல் தடுக்க முடியும். ஆனால் அரசு இந்த விடயத்தில் மெத்தனப் போக்குடனேயே செயற்படுகின்றது. 

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான இலங்கை அரசின் தேசிய செயற்திட்டம் திருப்திகரமாக அமையவில்லை.இலங்கை சர்வதேசத்துக்கு வழங்கிவரும் உறுதி மொழிகளையும் வாக்குறுதிகளையும் ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் நீதியான தீர்வுத்திட்டம் எட்டப்படுவதை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் இலங்கையை வலிறுத்த வேண்டும்.

தன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்  என்றுள்ளது.

No comments:

Post a Comment