Translate

Tuesday, 11 September 2012

மிரண்டு ஓடி வரும் ராஜபக்ஷே! மீண்டும் ஐ.நா-வில் இலங்கை விவகாரம்...


இந்தியாவை நோக்கி இலங்கை அதிபர் ராஜ பக்ஷே ஓடிவருவது, ஐ.நா-வில் மீண்டும் வரப்போகும் விவகாரத்தால்தான் என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது! 
கடந்த மார்ச் மாதம் நடந்த ஐ.நா-வின் 20-வது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் ஜெனீவாவில் வெற்றி அடைந்தது. இதை அடுத்து இந்தத் தீர்மானத்தின்படி, இலங்கை அரசு மனித உரிமைகள் தொடர்பாக என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது, ஐ.நா-வின் 22-வது ஜெனீவா கூட்டத் தொடரின்போது ஆராயப்படும். அதற்கு முன், 21-வது கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 10 முதல் செப்டம்பர் 28 வரை நடக்கவுள்ளது.


இதே நாட்களில், அதாவது செப்​டம்பர் 10 முதல் செப்டம்பர் 25 வரை மட்டக்களப்பில் 'நீர்க்காகம் 3, 2012’ என்ற இலங்கை ராணுவத்தின் போர்ப்பயிற்சி, வெளி நாட்டுப் படை​களுடன் நடக்கவுள்ளது. அதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலத்தீவு போன்ற நாடுகளின் ராணுவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இது மறைமுகமாக ஐ.நா-வுக்கு இலங்கை கொடுக்கும் நெருக்கடி என்கிறார்கள். செப்டம்பர் 22-ம் தேதி ஜெனீவாவில் இலங்கை பற்றிய மனித உரிமை விவகாரங்கள் விவாதிக்கப்பட இருக்கும் நிலையில், செப்டம்பர் 21-ம் தேதி ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருவதற்கான மறைமுகக் காரணமே இதுதானோ என்று சந்தேகிக்க வைக்கிறது.

ஏனென்றால் இந்தக் கூட்டத் தொடரில், மனித உரிமை சபையில் அங்கம் வகிக்கும் சில நாடுகளின் உள்நாட்டு மனித உரிமைப் பிரச்னைகள், மேம்பாடு மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப் படும். இந்தமுறை ஆய்வுக்கான நாடுகளில் இலங்கையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆய்வு தொடர்பாக ஏற்கெனவே 400 பக்க அறிக்கையை இலங்கை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை குறித்து ஆய்வு செய்து தேவையான முடிவு எடுக்கும் பொறுப்பை, இந்தியா (ஆசியா), ஸ்பெயின் (ஐரோப்பியா), பெனின் (ஆப்பிரிக்கா) ஆகிய மூன்று நாடுகளிடம் ஒப்படைத்துள்ளது ஐ.நா. சபை. இந்த மூன்று நாடுகளுமே கடந்த முறை ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், தமிழர்களுக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகள்.

இதுதொடர்பாக, நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடகத்துறை அமைச்சர் சிவ குருநாதன் சுதர்சனிடம் பேசியபோது, ''இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாக மனிதஉரிமை மீறல் குற்றங்கள் நடக்கின்றன என்ற நிலைப் பாட்டை இந்தியா எடுக்க வேண்டும். இதை, ஐ.நா சபையில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். தெற்காசியப் பிராந்திய விவகாரங்களில் இந்தியாகொண்டுள்ள முக்கியப் பாத்திரம் என்பதற்கு அப்பால், இலங்கைத் தீவுக்கு மிகநெருக்கமாக உள்ள நாடு என்ற அடிப்படையிலும், அங்கு காலம், காலமாக சிங்கள அரசுகளால் தமிழர்கள் சந்தித்துவரும் அவலங்கள் குறித்து அக்கறைகொள்ள வேண்டியதும் இந்தியாவின் கடமை'' என்றார்.

முடிவு எடுக்கும் நாடுகளாக ஸ்பெயின், பெனின் போன்றவை இருந்தாலும் இந்தியாவின் நிலையைக் கொண்டே இலங்கை மீதான இந்த நாடுகளின் தீர்ப்பு அமையும் என்கிறார்கள் மனித உரிமை நோக்கர்கள். 

இத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுக்கு வந்து அதன் ஆட்சியாளர்களைச் சந்திப்பது நல்லது என்று ராஜபக்ஷே முடிவுசெய்தார். அதற்காகவே சில விழாக்கள் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டன. மாமன்னர் அசோகரின் மகள் சங்கமித்திரை புத்த மதத்தைப் பரப்புவதற்காக இந்தியாவில் இருந்து இலங்கை சென்றதை நினைவுகூரும் ஓவியத்தை டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பி.ஜே.பி. தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் திறந்து வைத்துப் பேசிய போது, 'செப்டம்பர் 21-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சி நகருக்கு ராஜபக்ஷே வருகிறார்’ என்ற தகவலைத் தெரிவித்தார். புத்தர் ஞானம் பெற்றதன் 2600-வது ஆண்டு விழாவை முன்னிட்டு புத்தமதம் தொடர்பான கல்வி மையத்தின் அடிக்கல் நாட்டு விழாவுக்காக ராஜபக்ஷே வருவதாகக் கூறினார். இது, தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

'சாஞ்சிக்கு வரும் ராஜபக்ஷேவை அங்கேயே வந்து மறிப்போம்’ என்று, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அறிவித்தார். செப்டம்பர் 17-ம் தேதி அண்ணா நினைவிடத்தில் இருந்து இவர்கள் பேருந்தில் கிளம்புகிறார்கள். ராஜபக்ஷேவின் வருகையை எதிர்த்து கருணாநிதியும் அறிக்கை வெளியிட்டார். 

நாடாளுமன்றத்தில் சுஷ்மா ஸ்வராஜை எதிர்த்து, தொல். திருமாவளவன் பேனர் பிடித்தபடி நின்றார். 

இந்தக் காட்சிகள் பி.ஜே.பி.க்கு சிக்கலை ஏற்படுத்தியது. 'மத்தியப் பிரதேச அரசாங்கம்தான் ராஜபக்ஷேவை அழைத்து வருகிறது’ என்று சமாதானம் சொன்னார் சுஷ்மா. ஆனாலும், கொந்தளிப்பு அடங்கவில்லை. வைகோவிடம் பேச சுஷ்மா முயற்சிக்க, வைகோ அவரிடம் பேச விரும்பவில்லை.

இதுகுறித்துப் பேசிய தமிழக பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ''ராஜபக்ஷேவை இந்தியாவின் எந்த ஒரு பகுதிக்கும் அழைக்கக் கூடாது என்பதுதான் தமிழக பி.ஜே.பி-யின் கருத்து. நான் சுஷ்மா ஸ்வராஜிடம் இதுகுறித்துப் பேசியபோது, 'ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருகை தருவது மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில்தான். எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒருவர், எப்படி ஒரு நாட்டின் அதிபரை அழைத்து வர முடியும்’ என்று கேள்வி எழுப்புகிறார். அதனால் இது காங்கிரஸ் கட்சியின் அழைப்புதான். இதை எதிர்த்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதுவதையும் கண்டனம் தெரிவிப்பதையும் விட்டுவிட்டு, தி.மு.க. தன் ஆதரவைத் திரும்பப் பெறலாமே?'' என்றார்.

இந்தியாவை சமாதானப்படுத்துவதற்காக ராஜபக்ஷே வருவதே, இந்தியாவில் பிரச்னை ஆகி விட்டது!

மூலம்: ஜூனியர் விகடன் - புரட்டாதி 12, 2012
பிரசுரித்த நாள்: Sep 11, 2012 18:27:19 GMT
 

No comments:

Post a Comment