Translate

Tuesday, 25 September 2012

அஷ்ரப் உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு முடிவை எடுத்திரார்….

அரசுக்கெதிராக 22 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 11 பேர் கூட்டமைப்பு சார்பிலும் 7 பேர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் 4 பேர் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பிலும் தெரிவாகினர். ஐக்கிய தேசியக் கட்சி எங்களை ஆதரிக்க சம்மதித்தது.
 
 
 முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் நான் இது பற்றி பேசியபோது, இதனை மிகவும் கவனமாக சிந்தித்து நல்லதொரு முடிவை எடுப்பதாக கூறி இருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் அவர்கள் எடுத்த முடிவு தமிழ் பேசும் மக்களை, தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பாதிக்கக்கூடிய முடிவாக அமைந்து விட்டது

 
 
கேள்வி: கிழக்கு மாகாணத் தேர்தலில் கூட்டமைப்பின் வெற்றி குறித்து உங்களின் கருத்து என்ன?
 
 
 
 பதில்: தேர்தலில் கூட்டமைப்பு கணிசமான அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது என்பதில் எவ்விதமான சந்தேகமும் இருக்க முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகளையும் பார்க்கக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் அறுபதாயிரத்துக்கும்  அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆளும்  கட்சியைப் பொறுத்தவரை சென்ற மாகாணசபைத் தேர்தலுக்கும் இந்த மாகாணசபைத் தேர்தலுக்கும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளின் வீழ்ச்சியை அடைந்துள்ளது.
 
 
 
அதேவிதமாக நாடாளுமன்ற தேர்தலிலும் பார்க்க இந்த மாகாணசபைத் தேர்தலில் 40  ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளின் வீழ்ச்சியை அரசு கண்டுள்ளது. பன்னிரண்டு தமிழ் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பதினொரு பேர் எமது கட்சி உறுப்பினர்கள். இது மிகவும் உறுதியான வெற்றி என்பதில் எவ்விதமான சந்தேகமும் இருக்க முடியாது. தமிழ் வாக்காளரை பொறுத்தவரை தமது தெரிவை தமிழ் வாக்காளர்கள் மிகவும் தெளிவாகக் கூறியிருக்கின்றனர். இதனை இந்த நாட்டில் உள்ளவர்களும் சர்வதேச சமூகத்தினரும் நிச்சயமாக ஏற்றுக் கொள்வார்கள்.
 
 
 
இருந்தபோதிலும்கூட விஷேசமாக திருகோணமலையிலும், மட்டக்களப்பிலும் இன்னுமொரு உறுப்பினராவது தெரிவு செய்யப்பட்டிருந்தால் ஆட்சியை நாங்கள் கைப்பற்றி இருப்போம் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்க முடியாது. துரதிஷ்டவசமாக அது நடைபெறவில்லை. கட்சியும் எமது தலைமை வேட்பாளர்கள் உட்பட ஏனைய வேட்பாளர்களும் கடுமையாக உழைத்தார்கள்.
 
 
 
 மாகாணத்தில் பல பகுதிகளில் மக்கள் இன்னமும் சீர்குலைந்த நிலையில், மக்கள் இன்னமும் மீள்குடியேற்றப்படாத நிலையில் அவர்கள் அமைதியான வாழ்வுக்கு திரும்பவில்லை. கணி\மான மக்கள் வெளியேறி வேறு மாவட்டங்களில் அல்லது நாட்டுக்கு வெளியே வாழ்ந்து வருகின்றனர். அது எம்மைப் பொறுத்தவரை பாதிப்பு.
 
 
 
  அரசின் கெடுபிடிகள் மோசமாக இருந்தன. பயமுறுத்தல்கள் வாக்காளர்களுக்கும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் இருந்தன. இலஞ்சமாக கொடுத்து சில மக்களை தங்களுக்கு வாக்களிக்க செய்வதில் இறுதி இரண்டு நாள்களில் அரசு மிகத் தீவிரமாகச் செயற்பட்டது. அரச வளங்களை பயன்படுத்தினர். அரச அதிகாரிகள் பயன்படுத்தப்பட்டனர்.
 
 
 
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் வடபுறத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியில் இருந்து விலகி விட்டதாக என்னுடைய கையொப்பத்துடன் எனது படத்தையும் போட்டு ஒரு துண்டுப்பிரசுரத்தை விநியோகித்திருந்தனர். எல்லா அதிகாரிகளும் சுதந்திரமாகச் செயற்பட்டார்கள் என்று கூற மாட்டோம்.
 
 
 
வாக்களிக்கும் மற்றும் வாக்குகள் எண்ணும் இரண்டு விடயங்களிலும் தவறான கருமங்கள் இடம்பெற வழியுண்டு. பதினேழாவது திருத்தச்சட்டம் இரத்துச் செய்யப்பட்டு பதினெட்டாவது திருத்தச் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இந்தத் தேர்தல். சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, பொதுச்சேவை ஆணைக் குழு, பொலிஸ் ஆணைக்குழு அரச சாசனப்படி நியமிக்கப்படவேண்டிய தேவை. 17 ஆவது அரச சாசனம் அகற்றப்பட்ட போது இவையெல்லாம் இல்லாமல் போயின.
 
 
 
பதினெட்டாவது அரச சாசனத்தின் கீழ் அவ்விதமான சபைகளை அமைப்பதற்கு இடமில்லை. இதை நிறைவேற்றுவதற்கு அரசுக்கு ஒரு நோக்கம் இருந்திருக்க வேண்டும்.
 
 
 
அதாவது, தாங்கள் விரும்பிய பிரகாரம் ஒரு தேர்தலை நடத்துவதற்கு ஒத்தாசையாக ஒரு நிலைமை இருக்க வேண்டும் என்பதுதான் அந்த நோக்கமாக இருந்திருக்க முடியும். அதை ஓரளவுக்காவது இந்த தேர்தலில் நிறைவேற்றியிருப்பார்கள் என்று    சந்தேகம் கொள்வது நியாயமானதென நான் கருதுகிறேன்.
 
 
 
ஆதலால், இவ்விதமான பல நெருக்கடிகளை எதிர்நோக்க வேண்டிய ஒரு சூழலிலும் கூட எமது வெற்றி நல்லதொரு வெற்றி என்று தான் கருத வேண்டும். எமது வாக்காளர்களுக்கு எமது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம். அவர்கள் உறுதியாக இருக்க வேண்டுமென்று அன்பாகவும் தாழ்மையாகவும் கேட்டுக் கொள்கிறோம்.
 
 
 
ஆனால், அதேசமயத்தில் விசேடமாக திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் நாம் இன்னும் ஓர் ஆசனத்தைப் பெறவில்லை என்பதில் எமக்கு பெரிய மனவருத்தம்.    இன்னுமொரு விடயத்தை நாம் கூற வேண்டும். கிழக்கு மாகாணத்தில்  மூன்று மாவட்டங்களிலும் குறிப்பாக அம்பாறையிலும் திருகோணமலையிலும் அரச சாசனத்தின் அடிப்படையில் நிர்வாகம் தமிழிலும் இருக்க வேண்டிய தேவை உள்ள போதிலும் நிர்வாகம்  மிகவும் கூடுதலாக சிங்கள மொழியில் இடம்பெறுகின்றது.
 
 
 
இதன் காரணமாக அங்கு கடமையாற்றும் பொதுச் சேவையில் உள்ளவர்கள் மிகவும் கூடுதலாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பானவர்கள் கூட கூடுதலாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தான்  தபால் மூலமாக வாக்களித்துள்ளனர்.
 
 
 
இந்த இரு மாவட்டங்களிலும் ஆளும்கட்சிக்கும் தமிழ்க் கூட்டமைப்புக்கும் உள்ள வாக்குகளின் வித்தியாசத்தை உங்களுக்கு தர விரும்புகிறேன். அம்பாறையிலும்  திருகோணமலையிலும் அரசு பெற்ற தபால் மூலமான வாக்குகளின் முழுமையான எண்ணிக்கை 9921 ஆகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்ற மொத்த எண்ணிக்கை 1964 ஆகும்.
 
 
 
7957 வாக்குகள் வித்தியாசம் உள்ளது. இது தபால் மூலம் அளிக்கப்பட்ட வாக்குகளின் வித்தியாசம். இந்த இரு மாவட்டங்களிலும் அரச சாசனத்துக்கு முரணாக கூடுதலாக  சிங்கள மொழியில் பொதுச் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்கள் காரணமாகவும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் காரணமாகவும் அவர்கள் அளித்த வாக்குகளினால் ஏற்பட்ட வித்தியாசம் இது.
 
 
 
 இது ஆளும்கட்சி பெற்ற மொத்த பெரும்பான்மை வாக்குகளின் வித்தியாசத்தை விட ஒரு கூடுதலான தொகை. மொத்த வாக்குகளில் அவர்கள் எங்களை விட 6217 வாக்குகளே கூடுதலாக பெற்றுள்ளனர். தமிழ் கூட்டமைப்பு கடந்த பொதுத் தேர்தலை விட இந்த மாகாண தேர்தலில் கூடுதலாக 77429 வாக்குகளை மூன்று மாவட்டங்களிலும் பெற்றுள்ளது.
 
 
 
  ஆதலால் எமது மக்கள் மிகவும் உறுதியாக இருந்துள்ளனர். அதனை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் பெரும் எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ளனர். வெற்றி பெற வேண்டுமென்ற ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். இதனை நாங்கள் எங்களுடைய தீவிர கவனத்தில் எடுத்து செயல்படவேண்டியது எங்களுடைய கடமை என்று நான் கருதுகிறேன். எமது மக்கள் அளித்துள்ள முடிவு அவர்களின் பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வை காண்பதற்கு பெரும் பலமாக அமையுமென்று நான் கருதுகிறேன். வாக்களிப்பதில் அசட்டையாக இருந்த மக்கள் இந்த நிலைமையை புரிந்து கொள்ள வேண்டுமென கூறுவது எனது கடமையென நான் கருதுகிறேன். ஒரு நீதியான, நியாயமான சுதந்திரமான தேர்தல் நடைபெற்றிருந்தால் நிச்சயமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தைக் கைப்பற்றி இருக்கும் என்பதில் எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமில்லை.
 
 
 
 
 
கேள்வி: தேர்தலுக்கு பிறகு ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தீர்கள். ஆனால், அந்த அழைப்பை புறந்தள்ளி முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு ஆதரவளித்துள்ளது. அதைப் பற்றி ஏதேனும் கவலை உங்களது கட்சிக்கு உண்டா?
 
 
 
பதில்: தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை பற்றி நாங்கள் நீண்ட காலமாகப் பேசி வருகிறோம். விசேஷமாக யுத்த காலத்தில் மிகவும் வேதனைக்குரிய சம்பவங்கள் இடம்பெற்றன.
 
 
 
முஸ்லிம் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டனர். அதை நாங்கள் தெளிவாக உணர்ந்து இருந்தோம். முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களும் யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்பும் யுத்தம் முடிந்த பின்பும் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளனர்.
 
 
 
எங்கள் மக்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை நல்ல சிநேகபூர்வத்தை கட்டியெழுப்ப  வேண்டியதன் அவசியத்தை  நாங்கள் உணர்ந்து  இருந்தோம். அந்தத் தேவையை நாங்கள் பகிரங்கமாக அறிவித்து வந்தோம். அதை நடைமுறையில் அடைவதற்கும் நாங்கள் முயற்சிகளை செய்தோம். தேர்தல் பிரசாரத்தின்போது தமிழ் பேசும் மக்களின் போராட்டத்துக்கூடாக இந்த மாகாணசபை உருவானது. அதிகாரப்பகிர்வு, தமிழ்  பேசும் மக்களின் அபிலாசையின் அடிப்படையிலும் தேவையின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்ட ஒரு முறை.
 
 
 
 அது முழுமையாக நிறைவடைய இன்னமும் பல முன்னேற்றங்களை காணவேண்டிய ஒரு தேவை இருந்தாலும் கூட தற்போது உள்ள அந்த அதிகாரப்பகிர்வை  தமிழ் பேசும் மக்கள், ஒற்றுமையாக தங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டியது ஒரு தேவை என்பதை நாங்கள் வலியுறுத்தி வந்தோம். விசேஷமாக இந்த அரசைப் பொறுத்தவரை அதிகாரப் பகிர்வைப் பொறுத்தவரை அவர்கள் விசுவாசமாக அல்லது நேர்மையாக நடந்துகொள்ளவில்லை. அதையும் நாங்கள் தேர்தலின் போது வலியுறுத்தி வந்தோம்.
 
 
 
இந்த தேர்தலில் அரசுடன் சேர்ந்து போட்டியிட முஸ்லிம் காங்கிரசும் விரும்பவில்லை.  அவர்கள் தனித்து போட்டியிட்டனர். அரசுடன் சேர்ந்து அவர்கள் போட்டியிடுவதை முஸ்லிம் மக்கள் விரும்பவில்லை என்பதால் தான் அவர்கள் அரசுடன் சேர்ந்து போட்டியிடவில்லை.
 
 
 
தங்களுடைய மக்களின் வாக்குகளை பெறுவதாக இருந்தால் தனித்து போட்டியிட்டால் தான் பெற முடியும் என்பதை அவர்கள் நன்றாக உணர்ந்திருந்தனர். அரசுடன் சேர்ந்து ஒத்துழைத்த ஏனைய முஸ்லிம் கட்சிகளை அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
 
 
 
 அரசை விமர்சித்தனர். அதன் அடிப்படையில் முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றனர். இந்த கருமங்களை பற்றி நாம்மேடைகளில் பகிரங்கமாக தைரியமாக பேசினோம். ஆட்சியை நாங்கள் கைப்பற்ற வேண்டும் என்று நாங்கள் கூறியிருந்தோம். தமிழ் மக்களின் பிரதிநிதிகளும் முஸ்லிம் மக்களால் தனிப்பட்ட முறையில் தெரிவு செய்யப்படும் முஸ்லிம் பிரதிநிதிகளும் ஆட்சியை நடத்த வேண்டுமென நாங்கள் கூறி இருந்தோம்.
 
 
 
 முஸ்லிம் காங்கிரசால் நியமிக்கப்படுகின்ற ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை கொடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை கூறி இருந்தோம். தேர்தலுக்கு பிறகு நாங்கள் சந்தித்த பொது எங்கள் கருத்தை நாங்கள் முன்வைத்தோம். அரசுக்கெதிராக 22 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். 11  பேர் கூட்டமைப்பு சார்பிலும் 7 பேர் முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் 4 பேர் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பிலும் தெரிவாகினர். ஐக்கிய தேசியக் கட்சி எங்களை ஆதரிக்க சம்மதித்தது.
 
 
 
முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் நான் இது பற்றி பேசியபோது, இதனை மிகவும் கவனமாக சிந்தித்து நல்லதொரு முடிவை எடுப்பதாக கூறி இருந்தார். ஆனால் இறுதி நேரத்தில் அவர்கள் எடுத்த முடிவு தமிழ் பேசும் மக்களை, தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பாதிக்கக்கூடிய முடிவாக அமைந்து விட்டது என்பது தான் என் கருத்து. நீண்ட கால போராட்டத்துக்கு பிறகு பலவிதமான  துன்பங்கள் அழிவுகளுக்கு பிறகு அவர்கள் அடைந்த பெறுபேறை முழுமையாக பயன்படுத்தி அதை முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த முடிவு உகந்த முடிவல்ல.
 
 
 
விசேஷமாக தற்போதைய அரசுடன் கூட்டுச்சேர்வது அந்த நோக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் முடிவென்றே நான் கருதுகிறேன். மக்களுடைய நலன்கருதி முஸ்லிம் மக்களின் நலன்கருதி எடுக்கப்பட்ட முடிவாக அதனை நாம் கருதி விட முடியாது. நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இது சுயநலத்துக்காக எடுக்கப்பட்ட முடிவாகவே நாம் கருதுகிறோம். நாங்கள் அறிந்த வகையில் முஸ்லிம் புத்திஜீவிகள் முஸ்லிம் மக்கள்  இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த நிலைமைகள் விரைவில் வெளிவரும். தற்போதும் வெளிவரத் தொடங்கியுள்ளன. அதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
 
 
 
கேள்வி: தமிழ்க் கூட்டமைப்பினால் நிறைவேற்றப்பட முடியாத, அரசினால் நிறைவேற்றப்படக் கூடிய சில விடயங்களை முன்வைத்து அவர்கள் சிலவேளை அரசுடன் இணைந்திருக்கலாம் அல்லவா?
 
 
 
பதில்: இன்றைக்கு எமக்கு தேவையானது தற்போதுள்ள அதிகாரப்பகிர்வை முழுமையாக நிறைவேற்றுவது. அர்த்தபுஷ்டியான அதிகாரப்பகிர்வை நோக்கி செல்வது. அதாவது கூடிய சுயாட்சியை பெறுவது. இந்த அரசு இவற்றை எங்களுக்கு தூக்கி தரப்போவதில்லை. இந்த அரசு பதவியில், கடந்த ஏறத்தாழ ஏழு வருடங்கள் இருந்து வந்துள்ளது. அவர்களின் செயல்பாடு எங்களுக்கு நன்றாக விளங்கும். நாங்கள் உறுதியாக ஒற்றுமையின் அடிப்படையில் தான் இவற்றைப் பெறலாமே தவிர அவர்களின் தயவின் மூலமாக நாம் பெற முடியாது. இதைப் பெறுவதற்கு அரசுக்கு நாம் அழுத்தம் கொடுப்பதாக இருந்தால் தமிழ் பேசும் மக்கள் ஒருமித்து ஒன்றாக நின்று இந்த கோரிக்கையை முன்வைத்தால் தான் அதனை நிறைவேற்ற ஒரு வாய்ப்பு இருக்கும். சென்ற மாகாண சபையில் நடைபெற்ற விடயம் எமக்கு தெரியும். ஒரு தமிழ் மகன் முதலமைச்சராக இருந்தார்.
 
 
 
பலர் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாக அமைச்சர்களாக இருந்தனர். ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் மத்திய அரசு தான் விரும்பியதைச் செய்தது. மாகாணசபையின் அதிகாரங்களை முழுமையாக உதாசீனம் செய்தது.விசேடமாக அங்கே பதவியில் உள்ள ஆளுநர் மாகாணசபை ஆட்சியை துப்புரவாக உதாசீனம் செய்து தான் விரும்பியபடி ஆட்சி நடத்தினார்.
 
 
 
 மாகாணசபை அமைச்சர்கள் ஒன்றுகூடி ஆளுநரை மாற்ற வேண்டுமென கேட்டிருந்தனர். அவர் மாற்றப்படவில்லை. அவரது காலம் முடிவடைந்த பிறகு அவர் மீண்டும் நாலு வருடங்களுக்கு ஜனாதிபதியால் பதவி நீடிக்கப்பட்டுள்ளார். இந்த நிலைமையில் அரசிடம் இருந்து நாம் எதனையும் பெறவேண்டுமாக இருந்தால் நியாயத்தின் அடிப்படையில் ஒற்றுமையின் அடிப்படையில் ஒருமித்துக் குரல் எழுப்பி பெறலாமே தவிர அரசுடன் இணைந்து பெற முடியாது. இது முஸ்லிம் காங்கிரஸுக்கு நன்றாக தெரியும். இது தெரியாத விடயம் அல்ல. ஏனெனில், அவர்களும் சென்ற மாகாணசபையில் இருந்தார்கள்.
 
 
 
சலுகைகளையும் உதவிகளையும் நலன்களையும் தலைவர்கள்  நீங்கள் பெறலாம். ஆனால், மக்கள் பெற முடியாது. தமிழ் பேசும் மக்கள் இந்த நாட்டில் சம பிரஜைகளாக வாழ்வதாக இருந்தால் அதிகாரம் ஓர் அளவுக்கு தானும் மக்களுக்குப் போய் சேரவேண்டும். அந்த மக்களும் ஜனநாயக ரீதியில் தாம் வாழும் பகுதிகளில் அதிகாரங்களைப் பயன்படுத்துவதற்கு இடம் இருக்க வேண்டும். அவர்களுக்கு சட்ட ரீதியாக உரிமை இருக்க வேண்டும். அதைத் தான் நாம் கோருகிறோம். பதவிகளையோ வசதிகளையோ தலைவர்களுக்கு நாம் கோரவில்லை. ஆனபடியால் இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள தீர்மானம் அவர்களுடைய மக்களுக்கு  பாதகமான ஒரு முடிவு தான். இதை நான் மிகவும் உறுதியாக துணிவாகக் கூறுவேன்.
 
அவர்களுடைசொந்த மக்களுக்கு ஒரு பாதகமான முடிவை அவர்கள் எடுத்துள்ளனர்.
 
 
 
கேள்வி: அவர்கள் சலுகைகளுக்கு விலை போய்விட்டார்கள் என்றா கூறுகிறீர்கள்?
 
 
 
பதில்: நிச்சயமாக.நிச்சயமாக இந்த முடிவு மக்களின் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவல்ல. அவர்கள் தேர்தல் காலங்களில் செய்யப்பட்ட பிரசாரங்களுக்கு மாறாக எடுக்கப்பட்ட முடிவு. அதனை எவரும் மறுக்க முடியாது. அரசுடன் சேர்ந்து போவதாக இருந்தால் அவர்கள் வெளியில் வந்து போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை.
 
 
 
 அரசுடன் சேர்ந்து போட்டியிட்டிருக்கலாம். அரசுடன் சேர்ந்து போட்டியிட்டால் முஸ்லிம் மக்கள் தங்களை ஆதரிக்க மாட்டார்களென்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தங்களுக்கும் வேறு முஸ்லிம் கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் மக்களுக்கு காட்ட வேண்டி இருந்தது.
 
 
 
அந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிட்டிருந்தால் அந்த அடிப்படை தொடர்ந்திருக்க வேண்டும். தற்போதுள்ள நிலைமையை நாம் அவதானித்து பார்த்தால் தேர்தலில் வெற்றிபெற ,தேர்தலில் சில உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக தாங்கள் அரசை எதிர்த்து நிற்கின்றோம் என்று வெளியில் வந்து தேர்தலில் போட்டியிட்டு அந்த அடிப்படையில் மக்களுடைய ஆணையை பெற்ற பிறகு அந்த ஆணைக்கு மாறாக கபடத் தனமாக அவர்கள் செயல்படுகின்றனர். அது தான் உண்மை.இதை அவர்கள் மறுக்க முடியாது.
 
 
 
 
 
கேள்வி: உங்கள் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களுடன் முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அஷ்ரப் நெருக்கமாகப் பழகிய ஒருவர். அந்த தலைவரைப்போல் இப்போதுள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவரால் ஏன் தமிழ் தரப்புடன் நெருக்கமாக செயற்பட முடியவில்லை?
 
 
 
 
 
பதில்: எனது கருத்தின்படி மர்ஹூம் எம்.எச் .எம் .அஷ்ரப் இன்று உயிரோடு இருந்திருந்தால் அவர் முஸ்லிம் காங்கிர_க்கு தலைமை தாங்கி இருந்தால் இந்த முடிவை ஒருபோதும் எடுத்திருக்க மாட்டார். (சற்று உணர்ச்சி பூர்வமாகப் பேசுகிறார்) நான் இதை உறுதியாகச் சொல்கிறேன். ஏனென்றால், தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒற்றுமையாக கிழக்கில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த சரித்திரத்தில் இணைந்தவர் அவர்.அந்த வரலாற்றில் அவர் இணைந்தவர். அந்த உணர்வுகளை புரிந்தவர்.
 
 
 
நாங்கள் சிங்கள மக்களுக்கு மாறானவர்கள் அல்லர். எமது பிரதேசங்களில் வாழும் சிங்கள மக்களுக்கு நியாயம் நீதி வழங்கப்பட வேண்டும். அவர்களும் சமபிரஜைகளாக எமது பிரதேசத்தில் வாழ வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அதேசமயம் தமிழ் மக்களின் உரிமைகளும் முஸ்லிம் மக்களின் உரிமைகளும் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அஷ்ரப்பின் கொள்கையும் அதே கொள்கையாகத்தான் இருந்தது.
 
 
 
இந்தச் சூழலில் அவர் முஸ்லிம் காங்கிரசின் தலைவராக இருந்திருந்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காது  என்பதை நான் மிகவும் உறுதியாகக் கூறுகிறேன்.
 
 
 
கேள்வி: ஜனாதிபதியுடன் நீங்கள் பேச்சு நடத்தினீர்கள். முஸ்லிம் காங்கிரசும், கூட்டமைப்பும் ஆட்சி அமைத்திருந்தால் எதிர்க்கட்சியில் தாம் அமர்ந்திருப்பாரென ஜனாதிபதி உங்களிடம் தெரிவித்தார் அல்லவா. இதன்படி பார்த்தால் நீங்கள் இருதரப்பும் இணைந்து ஆட்சி அமைத்துவிடுவீர்கள் என்று ஜனாதிபதியும் நம்பிக்கை வைத்திருந்திருக்கிறாரே?
 
 
 
பதில்: நான் ஜனாதிபதியின் செயலாளரது அழைப்பின் பேரில் ஜனாதிபதியை சந்திக்க சென்றபோது ஜனாதிபதி சொன்ன முதல் விடயம் என்னவெனில், நீங்கள் மிகவும் நெருங்கிய இடத்தில் தேர்தலில் வந்துள்ளீர்கள். உங்களுக்கு எனது பாராட்டுக்கள் என்று சொன்னார். நன்றி. தேர்தல் நீதியாக நடத்திருந்தால் நாங்கள் முதல் இடத்துக்கு வந்திருப்போம் என்று அப்போது நான் சொன்னேன்.தமிழ் மக்கள் எமக்கு ஆணை தந்திருப்பதை நான் அவருக்கு சுட்டிக்காட்டினேன். எமது மக்கள் பதினொரு பேரை தெரிவு செய்துள்ளனர்.
 
 
 
பன்னிரண்டாவது தமிழர் தெரிவான விதம் குறித்து பல்வேறு கருத்துக்களும் சந்தேகங்களும் வெளிப்பட்டுள்ளன என்பதைச் சொன்னேன். கணிசமான அளவு முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவு கொடுத்திருப்பதை சொன்னேன், நாங்கள் இரு தரப்பும் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்பதால் நாங்கள் முதல் அமைச்சர் பதவியை கூட அவர்களுக்கு கொடுக்கத் தயாராகி இருப்பதை நான் சொன்னேன். அவ்விதமான ஒரு ஆட்சிக்கு ஐக்கிய தேசியக் கட்சியும் தயாராக இருப்பதாக நான் சொன்னேன்.
 
 
 
 அப்போது ஜனாதிபதி எனக்கு சொன்னார் “நான் எதிர்க்கட்சியில்  இருக்கத் தயாராக இருந்தேன். நான் ஹக்கீமுக்குச் சொன்னேன் சம்பந்தன் அவர்கள் உங்களுக்கு  தெளிவான ஒரு நிலைப்பாட்டை சொல்லி இருக்கிறார்களே என்று”.
 
 
 
இவ்வளவு தான் ஜனாதிபதி என்னிடம் சொன்னார். முஸ்லிம் காங்கிரஸ் திராணியுடன் எடுக்கவேண்டிய முடிவை எடுத்திருந்தால் ஜனாதிபதியால் ஒன்றும் செய்திருக்க முடியாது. இது ஜனநாயக முடிவு. இது ஜனநாயத்தின் விளைவு. மக்கள் ஒரு முடிவை எடுத்துள்ளார்கள்.
 
 
 
 அரசுக்கு மாறாக பிரசாரம் செய்த 22  உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்துள்ளனர். தெரிவின் மூலமாக வரக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 35. இந்த ஜனநாயக முடிவை ஒரு கபடமான சூழ்ச்சியின் மூலமாக மாற்றியமைப்பது தவறு.
 
 
 ஜனநாயகத்துக்கு விரோதமான செயல். இன்றைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். உதாசீனம் செய்துள்ளார். அதை மதிக்கவில்லை. இது தான் நிலைமை. 
 
 
கேள்வி: இதனால் கிழக்கு மாகணத்தில் தமிழ் மக்களுக்கு எதிர்காலங்களில் மோசமான விளைவுகள் ஏற்படுமா? 
 
பதில்: எங்களைப் பொறுத்தவரை இந்த முடிவு ஒரு பின்னடைவு. ஆனால், இதைத் தாண்டுவதற்கு எங்களால் இயன்ற முயற்சிகளை நாம் எடுப்போம். இதை தாண்டுவோம்.     
 
நேர்காணல்:  ஆர்.சிவராஜா    

No comments:

Post a Comment