
சேலம் நெத்திமேடு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜயராஜா, இலங்கை அதிபர் ராஜபக்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த 17-ம் தேதி தீக்குளித்தார்.
பலத்த தீக்காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி 18-ம் தேதி இறந்தார்.
ராஜபக்சவுக்கு கறுப்புக் கொடி காட்டுவதற்காக, மத்திய பிரதேச மாநிலம் சென்றிருந்த வைகோ ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பினார்.
அவர் விஜயராஜாவின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக, சேலம் நெத்திமேடுக்கு நேற்று திங்கட்கிழமை மாலை வந்தார்.
திராவிட விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி உள்ளிட்டோருடன் விஜயராஜாவின் வீட்டுக்குச் சென்ற வைகோ, சுமார் ஒரு மணி நேரம் அவரது பெற்றோர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர், நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
சமூக நீதிக்காக பாடுபட்ட பெரியாரின் பிறந்த நாளில், ஈழத் தமிழர்களின் நீதிக்காக தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜாவுக்கு அவரது பிறந்த நாளன்றே இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.
விஜயராஜா உயிரிழந்த தகவல் கிடைத்ததும் சாஞ்சியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மதிமுக தொண்டர்கள் சார்பில் அஞ்சலிக் கூட்டம் நடத்தப்பட்டது.
நான் பிறரைப் போன்று பதவிக்காக வாழவில்லை. தமிழீழ விடுதலையை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக போராடுவேனே தவிர பதவிக்காக எப்போதும் உயிர் வாழ மாட்டேன் என்றார் வைகோ.
முன்னதாக, விஜயராஜா எழுச்சி இயக்கத்தின் பெயர்ப் பலகையை வைகோ திறந்து வைத்தார்.
பின்னர் விஜயராஜாவின் பெற்றோர், சகோதர, சகோதரிகளுக்காக மதிமுக சார்பில் ரூ.2.25 லட்சம் நிதியுதவியை வைகோ வழங்கினார்.
மதிமுக துணைப் பொதுச் செயலர் மல்லை சத்யா, சேலம் மாவட்டச் செயலர் தாமரைக் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
http://thaaitamil.com/?p=33216
No comments:
Post a Comment