அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் அவர்களுக்கு முப்பதுக்கும் மேற்பட்ட அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அளித்திருக்கும் இந்த கோரிக்கை மனுவில் மூன்று முக்கிய அம்சங்கள் இருக்கின்றன. இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு உரியவர்களை பொறுப்பாக்குவதிலும், போர் முடிந்து மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் அங்கே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதிலும் இலங்கை அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்கவில்லை; மாறாக காலம் கடத்துவதற்கான காரணங்களை மட்டுமே அது தேடிக்கொண்டிருக்கிறது; எனவே, அமெரிக்கா தொடர்ந்து இலங்கை மீது அழுத்தம் செலுத்தவேண்டும்.
இந்த காரணங்களை அவர்கள் விரிவான உதாரணங்களுடன் ஹில்லாரி கிளிண்டனுக்கு தெரிவித்திருக்கிறார்கள். இலங்கை அரசே நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள், தங்களுக்கு முழுமையாக நிறைவை தராவிட்டாலும், அந்த பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்குக் கூட இலங்கை அரசு தயாராக இல்லை என்று இவர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். அதற்கு மாறாக, இந்த குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிப்பதற்காக மேலதிக குழுக்களை நியமிக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையானது இலங்கை அரசின் காலம் கடத்தும் செயல் என்று இவர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள்.
அமெரிக்க அரசின் முன் முயற்சியில் ஐநா மன்றத்தின் மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசின் மீது அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் கடந்த மார்ச்மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவதிலும், நல்லிணக்கத்தை உண்டாக்குவதிலும் ஒரு முக்கிய முன்னெடுப்பு என்று இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதேசமயம், அந்த தீர்மானத்துக்குப்பிறகும் இலங்கை அரசின் அணுகுமுறையிலும் செயற்பாடுகளிலும் சாதகமான மாற்றங்கள் எவையும் காணப்படவில்லை என்றும் இவர்கள் கவலை தெரிவித்திருக்கின்றனர்.
இந்த பின்னணியில் இலங்கை அரசுமீது அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் தராவிட்டால் இந்த பிரச்சினையில் பெரிய முன்னேற்றம் ஏற்படாது என்றும், இலங்கை தொடர்பான ஐநா மன்றத்தின் மனித உரிமைகள் அவையின் தீர்மானத்தின் தொடர்ச்சியாக இலங்கை அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதா என்பதை ஐநா மன்றம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆராயவிருப்பதாகவும், அதற்குள் அமெரிக்கா இலங்கை அரசு மீது உரிய அழுத்தம் கொடுத்து, இலங்கையில் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதிலும், போர்குற்றங்களுக்கு உரியவர்களை பொறுப்பேற்கச்செய்வதிலும் உரிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்றும் இவர்கள் கோரியிருக்கிறார்கள்.
No comments:
Post a Comment