தேர்தலின் பின்னர் அரசும் மு.காவும் இணைவதே திட்டம் |
கிழக்கைப் பொறுத்தவரை அரசுக்கு சார்பான, அரசின் கொள்கைகளை ஏற்ற ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஏற்ற அரசின் அமைச்சரவையில் அரச நாடாளுமன்றக் குழுவில் இருக்கும் கட்சிகள் கிழக்குத் தேர்தலில் வெவ்வேறாகவே போட்டியிட்டன. உண்மையில் அவர்கள் அரசுக்காகவே அரசின் சார்பாகவே போட்டியிட்டனர்.
கேள்வி: மூன்று மாகாணசபைத் தேர்தல்களினதும் முடிவைப் பற்றிய அரசின் அபிப்பிராயம் என்ன?
பதில்: அரசொன்றை அமைத்து தேர்தலுக்குச் செல்லும்போது அது பலவிதமாக இருக்கிறது. அரசொன்று அமைந்து முதல் வருடம் தேனிலவு வருடமாகத்தான் இருக்கும். இரண்டாம், மூன்றாம் வருடங்களில் பிரபலமான தீர்மானங்களை எடுக்கமுடியாமல் இருக்கும். இது அப்படியான காலம்.
எமது அரசின் இரண்டாவது ஆட்சிக்காலம் இது. இயற்கையின் சீற்றத்தில் எமது நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டிருந்தன. குறிப்பாக, வடமத்திய மாகாணம் பாதிக்கப்பட்டிருந்தது. ஈரான் மீதான அமெரிக்கத் தடைகளால் ஏற்பட்ட சர்வதேச பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் நிதி தொடர்பான சில முக்கிய தீர்மானங்களை அரசு எடுத்திருந்தது.
இந்த நிலைமையில் எமக்குப் பாதகமான ஒரு சூழலில்தான் நாம் தேர்தலுக்குச் சென்றோம். இப்போதே தேர்தல் வேண்டாம். பிறகு செல்லலாம் என்ற ஒரு கருத்தும் எமது கட்சியில் இருந்தது. இருந்தும் மக்களின் மனநிலையை அறிய ஜனாதிபதி விரும்பினார். நாம் செல்லும் பாதை சரியானதா, இல்லையா என்பதை மக்களிடம் கேட்க விரும்பினார். இதனால்தான் தேர்தலுக்குச் சென்றோம்.
நாங்கள் கூடுதல் வீதத்தில் வெற்றி பெற்றுள்ளோம். இப்போதைய நிலைமையில் நாங்கள் பெற்ற வெற்றி அனைத்து வெற்றியையும் விட பெரிதானது. இதற்கு மக்களுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளோம். இது எமக்குப் பெரும் சக்தி. குறிப்பாக, கிழக்கு மக்கள் எமக்கு வழங்கிய ஆதரவும், வழிகாட்டலும் மகத்தானவை. தமிழ்க் கூட்டமைப்பு தேர்தலில் நடந்ததைப் பார்த்த நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எந்தப் பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கவேண்டும் என்பதை நன்கு உணர்ந்து வைத்துள்ளோம். மக்களின் அபிப்பிராயத்தை அறிந்துள்ளோம். விருப்பு வாக்குகள் மூலமாகவும் மக்கள் தெளிவான செய்தியொன்றை அனுப்பியுள்ளனர். அந்தச் செய்தியையும் நாம் உணர்ந்து கொண்டுள்ளோம்.
கேள்வி: கிழக்கு மாகாண தேர்தல் குறித்தான உங்களின் பார்வை எப்படி?
பதில்: கிழக்கைப் பொறுத்தவரை அரசுக்கு சார்பான, அரசின் கொள்கைகளை ஏற்ற ஜனாதிபதியின் தலைமைத்துவத்தை ஏற்ற அரசின் அமைச்சரவையில் அரச நாடாளுமன்றக் குழுவில் இருக்கும் கட்சிகள் கிழக்குத் தேர்தலில் வெவ்வேறாகவே போட்டியிட்டன. உண்மையில் அவர்கள் அரசுக்காகவே அரசின் சார்பாகவே போட்டியிட்டனர்.
அரசுக்கு எதிராக மூன்று தரப்புக்களே போட்டியிட்டன. நாடாளுமன்றில் எதிர்க்கட்சியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்க் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியவையே எதிராகப் போட்டியிட்டன. மறுபுறத்தில் எமது கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தேசிய சுதந்திர முன்னணி இருந்தன. எமது கூட்டமைப்பு கிழக்கில் 2 இலட்சத்து 44 வாக்குகளை எடுத்தது. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 917 வாக்குகளை எடுத்தது. தேசிய சுதந்திர முன்னணி 9 ஆயிரத்து 522 வாக்குகளை எடுத்தது. எனவே, மொத்தமாக நாங்கள் 3 இலட்சத்து 42 ஆயிரத்து 483 வாக்குகளை எடுத்தோம். மறுபுறம் தமிழ்க் கூட்டமைப்பு ஒரு இலட்சத்து 93 ஆயிரத்து 827 வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சி 74 ஆயிரத்து 901 வாக்குகளும் ஜே.வி.பி. 3 ஆயிரத்து 154 வாக்குகளையும் எடுத்துள்ளன. அவை மொத்தமாக 2 லட்சத்து 71 ஆயிரத்து 882 வாக்குகளையே பெற்றுள்ளன. இதில் பாருங்கள் ஜனாதிபதியின் தலைமையை ஏற்ற குழுக்களுக்கு 70 ஆயிரத்திற்கும் மேல் மேலதிக வாக்குகள் கிடைத்துள்ளன. எனவே, இதன்படி நூற்றுக்கு 53 சதவீதமான மக்கள் அரசை ஆதரித்துள்ளனர். மக்களின் ஆணை இது.
கேள்வி: நீங்கள் கூறுவதைப் பார்த்தால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டாலும் அரசுடன்தான் இருந்தது. அரசுக்கே ஆதரவைத் தரும் என்று எதிர்பார்த்திருந்தீர்கள். அப்படித்தானே?
பதில்: தேர்தலுக்கு முன்னர் எமது பேச்சுகள் இணக்கப்பாடு இல்லாமல் முடிந்தபோது இருதரப்பினரும் ஓர் இணக்கப்பாட்டுடன்தான் செயற்படுவது என முடிவெடுத்தோம். கேகாலையிலும், இரத்தினபுரியிலும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டது போன்றுதான் இதுவும்.
கேள்வி: தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க அரசு வகுத்த வியூகம் இதுவெனக் கொள்ளலாமா?
பதில்: ஒருவகையில் நீங்கள் அப்படியும் எடுத்துக்கொள்ளலாம். சாதாரணமாக அரசியல் கட்சிகள் தமது வியூகங்களை வெளியில் சொல்வதில்லை. இருந்தும் தேர்தல்முறை தெரிந்தவர்களுக்கு இது நன்கு புரியும். ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் இந்தத் தேர்தல் முறை ஒவ்வொரு தேர்தலுக்கும் வித்தியாசமாகிறது.
இதற்கமையவும் தீர்மானங்களை எடுக்கவேண்டியுள்ளது. இது விரும்பி எடுத்த வியூகமில்லை. இருந்தாலும் இது வியூகமாக மாறியுள்ளது. அமெரிக்காவில் பிரபல தொழிலதிபர் ஒருவர் இருந்தார். அவரின் வெற்றியின் இரகசியம் கேட்கப்பட்டது. அர்ப்பணிப்பு தமது வெற்றிக்கு நூற்றுக்கு 99 வீதம் உதவுவதாகவும், நூற்றுக்கு ஒரு வீதம் அதிர்ஷ்டம் உதவுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சில நேரங்களில் அந்த நூற்றுக்கு ஒரு வீத அதிர்ஷ்டம் நூற்றுக்கு 99 வீதத்தை விட உதவுமென்றும் அவர் குறிப்பிட்டார். (சிரிக்கிறார்) அதுபோல இதில் ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தன்மையும் இருக்கவேண்டும். கிழக்கில் ஒரு சவால் இருந்ததுதான். ஆரம்பம் முதல் அதனை நாங்கள் தெரிந்து கொண்டுதான் இருந்தோம்.
கேள்வி: கிழக்கு மாகாணசபையில் உங்களது கட்சியில் நிறைய தமிழ் உறுப்பினர்கள் முன்னர் இருந்தனர். இப்போது அந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தமிழ்க் கூட்டமைப்பின் வருகையுடன் குறைந்துவிட்டது. அது உங்களுக்குப் பின்னடைவுதானே?
பதில்: உண்மையில் இப்போது நான் இனவாதம் பேச விரும்பவில்லை. இருந்தாலும் நாம் யதார்த்தத்தை உணர வேண்டும். மூன்று இனக் குழுக்கள் கிழக்கில் உள்ளன. சனத்தொகை புள்ளிவிவரப்படி கூடுதலான வீதத்தில் தமிழர்களும், அதற்கு அண்மித்தவாறு முஸ்லிம் மக்களும் உள்ளனர். இருந்தாலும் தமிழ்க் கூட்டமைப்பு முறையாக நடக்கவில்லை.
பிரபாகரனால் தமிழ் மக்களின் இரண்டு சந்ததிகள் அழிந்தன. உடைமைகள் இல்லாமற் போயின. கல்வி, வாழ்க்கை எல்லாமே இல்லாமலாகின. அது போன்று ஒன்றைத்தான் தமிழ்க் கூட்டமைப்பு இப்போது கிழக்கு மக்களுக்குச் செய்துள்ளது. பிள்ளையான் முதலமைச்சராக இருந்து எல்லா மக்களுக்கும் சேவை செய்தாலும் அவர் தமிழ் மக்களின் ஓர் அடையாளமாக இருந்தார். இதனை இல்லாமலாக்கிவிட்டனர். இதுபெரிய அநியாயம். இன்று இந்த மாகாணத்தில் ஏற்படப்போகும் ஆட்சியில் தமிழர்கள் பங்குவகிக்க முடியாத ஒரு நிலையை கூட்டமைப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான முழுப்பொறுப்பையும் கூட்டமைப்புத்தான் ஏற்கவேண்டும். புலிகள் செய்ததைப் போன்றுதான் இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு செயற்பட்டது. வெற்றிபெற்ற தனது கட்சி உறுப்பினர்கள் பதினொரு பேரையும் பாதுகாக்குமாறு சம்பந்தன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றார். ஜனாதிபதி அல்லர், சம்பந்தன்தான் அவர்களைக் கவனிக்க வேண்டும். அதற்கு முதல் தமிழ் மக்களை சம்பந்தன் கவனித்துக் கொள்ளவேண்டும்.
கேள்வி: வெற்றி பெற்ற தமிழ்க் கூட்டமைப்பு உறுப்பினர்களை உங்கள் தரப்பு விலைக்கு வாங்க முற்படுகிறது. படைத்தரப்பினர் கூட இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத்தான் சம்பந்தன் கூறுகிறார்.?
பதில்: வெற்றி பெற்ற தமிழ்க் கூட்டமைப்பின் சில வேட்பாளர்களுக்கு ஏற்கனவே இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் தொடர்பு இருந்திருக்கக்கூடும். படையினருக்கு இப்படி ஆள்களை எடுக்கமுடியுமாயின் வடக்கில் இருக்கும் எத்தனையே உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் படையினர் எடுத்திருப்பார்களே?
அரசியல்வாதி என்ற ரீதியில் நான் போய்ப் பேசினேன் என்று கூறினால்கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், படையினர் போய்ப் பேசுகின்றனர் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு பலருடன் தொடர்பு இருக்கலாம். பணத்துகாகச் செயற்படும் பலர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்பு வைத்திருக்கக் கூடும். இராணுவத்துக்கு தமிழ் அரசியல்வாதிகளை உள்வாங்குவதோ அல்லது அது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கோ எந்தத் தேவையும் கிடையாது. சம்பந்தன் ஐயா இதனை யோசித்து நடக்க வேண்டும்.
கேள்வி: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை ஆட்சியமைக்க தமிழ்க் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மூன்று சக்திகளும் ஒன்றிணைய முயன்றமை அரசுக்கு அச்சத்தை ஏற்படுத்தியிருந்ததா?
பதில்: இல்லை. இல்லவே இல்லை. இந்த இணைவு நடப்பது குறித்து நாம் மகிழ்ச்சியுடன் இருந்தோம். இது இலகுவாக எமக்கு இருந்திருக்கும். தமிழ் இனவாதம் பேசியதால்தானே தமிழ்மக்களின் வாக்குகள் சம்பந்தனுக்குக் கிடைத்தன. எனவே, அவர்கள் முஸ்லிம் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியைக் கொடுக்க முற்படும்போது என்ன செய்யவேண்டும் என்பதைத் தமிழ் மக்கள்தான் தீர்மனிக்கவேண்டும். மறுபுறம் மற்ற கட்சிகளும் தீர்மானங்களை எடுத்திருக்கவேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இருந்து போட்டியிட்ட ஒரு தரப்பு. எனவே, இங்கு ஆட்சியமைப்பதில் பிரச்சினை எதுவும் இருக்கவில்லை. நாங்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் பயப்படவில்லை. தமிழ்க் கூட்டமைப்பினர் தன்னைச் சந்திக்க விரும்புவதாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்னிடம் கூறியபோது, நீங்கள் தாராளமாக சந்தியுங்கள், எனக்குப் பிரச்சினையில்லை என்றுதான் நான் கூறினேன். ஜனாதிபதியும் இதைத்தான் கூறினார். முடிந்தால் ஆட்சியமைத்துக் கொள்ளுங்கள் என்று தான் நாம் கூறினோம். ஆட்சியமைத்திருந்தால் இவர்களின் செயற்பாடுகளைப் பற்றி நாங்கள் இன்னும் கூறியிருக்கலாம்.
கேள்வி: சில நிபந்தனைகளை முன்வைத்துத்தானே முஸ்லிம் காங்கிரஸ் உங்களை ஆதரிக்கின்றது?
பதில்: இல்லை. எந்த நிபந்தனைகளும் இல்லை. ஆனால், எந்தக் கட்சிக்கும் தனக்கென கோரிக்கைகள், தேவைகள் உள்ளன. அவை இல்லாமற் போகாது. எங்களது கூட்டமைப்பில் வேறு பல கட்சிகளும் உள்ளன. அவையும் பல கோரிக்கைகளை முன்வைக்கின்றன. அவ்வாறான சில கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியுமேற்பட்டது. இது கூட்டமைப்பு ஒன்றில் வழமை.
கேள்வி: இல்லை. முஸ்லிம் மக்களுக்கான கரையோர அலகு, முஸ்லிம் அரச அதிபர் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு எழுத்துமூலம் வழங்கியிருப்பதாகவும், அதனால்தான் அரசுக்கு கிழக்கு ஆட்சியை ஏற்படுத்த உதவியதாகவும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் வெளியில் கூறிவருகின்றனர். அது சரிதானா?
பதில்: நான் அப்படி நினைக்கவில்லை. அப்படி ஒன்றும் இல்லை. அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். செய்யமுடிந்தவற்றை நாம் செய்வோம். முடியாதவற்றை நாம் செய்யப் போவதில்லை. அடிப்படையில், ஜனாதிபதியின் தலைமைத்துவத்தையும், மஹிந்த சிந்தனையையும் ஏற்றுத்தான் அவர்கள் எம்முடன் இருக்கின்றனர். அதேபோல் அவர்கள் தமக்குத் தேவையானவற்றைக் கூறுவர். அமைச்சர் தொண்டமானுக்கும் அமைச்சர் டக்ளஸுக்கும் இப்படியான கோரிக்கைள் உள்ளன. தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய, மக்கள் ஐக்கிய முன்னணி போன்றவற்றுக்கும் கோரிக்கைகள் உள்ளன. எனவே, இது முஸ்லிம் காங்கிரஸுக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை. எல்லோரின் கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட வேண்டும்.
கேள்வி: கிழக்கு மாகாணசபை ஆட்சியில் தமிழ் அமைச்சர் ஒருவரும் நியமனம் பெறவுள்ளாரா?
பதில்: தமிழ் முதலமைச்சரே இல்லை. தமிழ் அமைச்சரைப் பற்றி என்ன கதைக்க இருக்கிறது? இதனை தமிழ்க் கூட்டமைப்புதான் இல்லாமற் செய்தது. அதைத்தான் என்னால் கூறமுடியும்.
கேள்வி: கிழக்கில் உங்களுக்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸ், மத்திய அமைச்சரவை மாற்றப்படும் போது புதிய அமைச்சுப் பொறுப்புக்களைப் பெறுமா?
பதில்:மத்திய அமைச்சரவை உடனடியாக மறுசீரமைக்கப்படுமா என்பது பற்றி தெரியவரவில்லை. ஜனாதிபதியே இதனைத் தீர்மானிப்பார்.
கேள்வி: கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசு ஒன்றை அமைப்பது குறித்து பேசப்பட்டது. தமிழ்க் கூட்டமைப்புடன் இணைந்து தேசிய ஆட்சியொன்றை ஏற்படுத்தியிருந்தால் சிறந்ததாக இருந்திருக்குமல்லவா?
பதில்: தேசிய அரசுக்கான அவசியம் எங்களுக்கு இல்லையே. நாட்டில்தான், மத்திய அரசில்தான் தேசிய அரசு ஏற்படுத்தப்படவேண்டும். மாகாணசபைகளில் எதற்கு தேசிய அரசு?
கேள்வி: உங்களது அரசின் அமைச்சர்கள் தானே தேசிய அரசுக்குத் தயாரென கூறினார்கள்?
பதில்: தேசிய அரசுக்கு தயாராக வேண்டிய அவசியம் இல்லை. இப்போது நிறுவப்பட்டிருக்கிற ஆட்சி தேசிய ஆட்சி போன்றுதான். இப்போது முஸ்லிம் காங்கிரஸ் எங்களுடன் சேர்ந்ததை கூட்டமைப்பும், ஐ.தே.கவும் எதிர்க்கின்றன. அவர்களுக்குத் தேசிய அரசு ஏற்பட்டிருந்தால் பதவிகள் கிடைத்திருக்கும். அமைதியாக இருந்திருப்பார்கள். இப்போது பதவிகள் கிடைக்கவில்லை; விமர்சிக்கிறார்கள். முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்குள் உள்ள ஒரு கட்சி. அவர்கள் மாகாண ஆட்சியில் பங்கெடுப்பதில் என்ன தவறு? தமிழ் மக்களிடம் வீராப்பு பேசி வாக்குகளைப் பெற்ற கூட்டமைப்பு, முதலமைச்சர் பதவியையும் விட்டுக்கொடுத்து "தமிழ் பேசும் மக்களுக்காக'' என்று புதிய கதையை விட்டது. இதன் அர்த்தம் என்ன? இன்னும் கொஞ்சக் காலம் போனால் "ஆங்கிலம் பேசும் மக்களுக்காக'' என்றும் கூட்டமைப்பு கூறும். ஐ.தே.கவில் பலர் ஆங்கிலம்தானே பேசுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து ஆட்சியமைக்க ஆங்கிலம் பேசுவோர்கள் ஒன்றிணைய வேண்டும் என்றும் கூட்டமைப்பு கூறலாம்.
கேள்வி: முஸ்லிம் காங்கிரஸுக்கு மாகாண முதலமைச்சர் பதவியில் இரண்டரை வருட பதவிக்காலம் வழங்கப்படுமா?
பதில்: இப்போதுள்ள விடயத்தைப் பற்றி நாம் பேசுவோமே... அவர்கள் அப்படிச் சொல்லக் கூடும். நான் அதைப்பற்றி பேச விரும்பவில்லை.
கேள்வி: கிழக்கு மாகாணத்தின் பல அபிவிருத்திப் பணிகளை நீங்கள் முன்னெடுத்து வருகிறீர்கள். இந்தத் தேர்தலில் கிழக்கில் தமிழர்கள் கூட்டமைப்பை ஆதரித்திருப்பதால் உங்கள் பணிகளில் ஏதேனும் சோர்வு ஏற்படுமா?
பதில்: இல்லை. தேர்தல் முடிவுகள் எமக்கு எரிச்சலை ஏற்படுத்தவில்லை. கூட்டமைப்பைத் தமிழர்கள் ஆதரித்தார்கள் என்பதற்காக எமது பணி தமிழ் மக்களுக்கு சென்றுவிடாமல் இருக்கப்போவதுமில்லை. இது எமது நாடு. நாம் மாகாணங்களையோ, மக்களையோ பார்ப்பதில்லை. எமது மாகாணத்தில் வந்து வேலை செய்ய உங்களுக்கு அதிகாரமில்லையென சம்பந்தன் எனக்குக் கூறுகிறார். இது என்ன அர்த்தம்? எமது தொகுதி என்று எவருக்கும் இல்லை. இலங்கை எல்லோருக்கும் சொந்தமானது. அப்படிப் பார்த்தால் நான் கம்பஹாவில் மட்டும்தான் வேலை செய்யவேண்டும். இதுதான் பிரிவினை. நாட்டைப் பிரிக்கும் கொள்கைதான் இது.
மக்களைப் பிரிக்க நினைக்கிறார்கள். பிற மாகாணத்திலிருந்து வந்து வேலை செய்கிறார்களே என்று சந்தோஷப்பட வேண்டும். கொழும்பு நீதிமன்றங்களில் இன்று வழக்காடுபவர்கள் யார்? சுமந்திரன் எல்லாம் கொழும்பு நீதிமன்றங்களில் தானே வழக்குப் பேசுகின்றார். நீங்கள் எங்கள் பிரதேசத்திற்கு சொந்தமில்லாதவர் என்று அவரை எவராவது கூறினார்களா? இல்லையே! இந்தப் பேச்சுக்களின் அர்த்தம் என்ன? இந்த பிரிவினை வாதம் வெற்றியடைய விடமாட்டோம். தாயகக் கோட்பாட்டுக்கு நாம் எதிரானவர்கள். எல்லோரும், எல்லா இடங்களிலும் வாழும் உரிமை அரசமைப்பில் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் ரணிலை அழைத்து மேதினம் நடத்தியது கூட்டமைப்புத்தான். அரசியலுக்காக அவர்கள் எதையும் செய்வார்கள்.
தேர்தலின் இறுதிக் காலத்தில் கூட்டமைப்பு மோசமான வகையில் பிரசாரங்களைச் செய்தது. சீ.டீக்கள் மூலம் பிரசாரம் நடத்தியது. சாராயப் போத்தல்களையும் தாரளமாக வழங்கியது. மதுவரித் திணைக்கள தகவல்களின்படி கூட்டமைப்பு சுமார் ஐம்பதாயிரம் சாரயப் போத்தல்களை விநியோகித்துள்ளது. அரசு நிவாரணப் பொருள்களை வழங்கவில்லை. அபிவிருத்திச் செயற்பாடுகளை முன்னெடுத்தது. சாராயம் விநியோகித்தவர் யார்? எங்களுக்கு கூண்டோடு கைப்பற்றும் வாய்ப்பும் இருந்தது.
கேள்வி: கூட்டமைப்பு சாராயம் விநியோகித்திருக்குமானால் நீங்கள் தேர்தல் ஆணையாளரிடம் முறையிட்டி ருக்கலாமே?
பதில்: இதனை நாம் முறையிட்டுள்ளோம். இதனை சர்வதேசத்திற்கு பிரபலப்படுத்த வேண்டிய அவசியம் எங்களுக் கில்லை. சில இடங்களில் தேர்தல் கண்காணிப்பு இயக்கமான பவ்ரலின் இலச்சினைகளை வாகனங்களில் ஒட்டிக் கொண்டே கூட்டமைப்பு உறுப்பினர்கள் சென்றனர்.
கேள்வி: வடக்குத் தேர்தல் எப்போது?
பதில்: அதை நேரத்திற்கு வைப்போம்.
கேள்வி: செம்ரெம்பரில்?
பதில்: எப்போதாவது வைப்பதற்கு கூட்டமைப்பும் ஒத்துழைக்க வேண்டும். மீள்குடியேற்றத்தை தடுத்து, புரளிகளைக் கிளப்புவதுதான் கூட்டமைப்பின் வேலை. உணர்ச்சிபூர்வமாகக் கதைத்து, இரத்தத்தைச் சூடேற்றி பேசும் தமிழ்க் கூட்டமைப்பு மக்களுக்குத் தேவையானவற்றை செய்யாது.
கேள்வி: வேறு சில மாகாண சபைகள் ஏதும் கலைக்கப்படுமா?
பதில்: எனக்குத் தெரிந்தவரை இப்போதைக்கு இல்லை.
கேள்வி: வடமத்திய மாகாணசபை நிலைமை எப்படி? யார் முதலமைச்சர்?
பதில்: அந்தப் பிரச்சினைகளையும் பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் சிறந்த முடிவெடுப்போம்.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Tuesday, 25 September 2012
தேர்தலின் பின்னர் அரசும் மு.காவும் இணைவதே திட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment