Translate

Monday 3 September 2012

எண்பது வீதம்; வாக்குவந்தாலே தமிழ் முதல்வர் : சுரேஸ்


கிழக்கு தமிழ் மக்கள் 80சதவீதத்துக்கு மேல் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் தமிழர் ஒருவர் முதலமைச்சராகலாம். இதன் மூலம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வேறுபாடின்றி ஒரே தாய் பிள்ளைகளாக இருக்கின்றார்கள் என்பதை உலகுக்கும் அரசுக்கும் வெளிப்படுத்தலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

கிழக்கில் நாம் ஆட்சியமைத்தால் வடக்கு, கிழக்கு இணைப்புக்கான மக்கள் அங்கீகாரமாகவும் இது அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலய வளாகத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை பிரசாரக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறியதாவது,
நாம் ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சின்னம் ஒழுங்குபடுத்தப்பட்ட மத்திய குழு, செயற்குழு, மாவட்டக் குழு, கிராமியக் குழு என்பன அமைக்கப்பட்டு செயற்பட வேண்டிய நிலை உள்ளது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் ஒரே கட்சியாக இருக்கும். அதுவே மிகவும் பலம் வாய்ந்த அமைப்பாக இருக்கும்.
எவ்வாறாயினும் தமிழ் மக்களுடைய குறைந்த பட்ச அரசியல் அபிலாஷைகளை வெல்லக் கூடிய அமைப்பாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமேயாகும். அரசாங்கத்தின் கோத்தபாய, மஹிந்த, பஷில், சம்பிக்க ரணவக்க, விமல்வீரவன்ச ஆகியோர் எமது பிரச்சனை பற்றி தனித்தனியாக அறிக்கை விடுகின்றபோதும் அவை ஒட்டு மொத்தமாக ஒரு குடும்ப அறிக்கை போலவே இருக்கின்றது. அதன் மூலம் அவர்கள் தமிழர்களுக்கு எதுவும் கொடுக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.
இன்று எங்களுடைய பிரச்சினை சர்வமயப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை செல்வா காலத்தில் கூட இப்படியான ஒரு நிலை காணப்படவில்லை. அப்போது அயல் நாட்டுக்குக் கூட எமது பிரச்சினை பற்றி தெரியாத நிலையே காணப்பட்டது.
இன்று ஐ.நா சபையிலிருந்து அனைத்து உலக நாடுகளுக்கும் தமிழர் பிரச்சினை தெரியவந்துள்ளது. அவர்கள் ரி.என்.ஏ. யுடன் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமிழர் பிரச்சினைக்கு திட்டவட்டமான தீர்வு காணப்பட வேண்டுமென அழுத்தத்துக்கு மேல் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது எமக்கு சாதகமான சூழ்நிலையாகும்.
இந்த சூழலை நாம் நன்கு பயன்படுத்த வேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தமிழரின் ஒரே அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் என்று உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். கிழக்குத் தமிழ் மக்கள் அரசோடு இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.
தமிழர் பிரச்சினை தொடர்பாக அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 2011 தை மாதத்தில் இருந்து 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று ஓர் அங்குலம் கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே ஜனவரி மாதத்தோடு எமது பேச்சுவார்த்தை முறிவடைந்தது.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வேண்டுமெனவே நாம் கோரினோம். அது பற்றி அரசுக்கு விளக்குகையில் வெளிவிவகாரம், பாதுகாப்பு,நிதி ஆகிய அதிகாரங்களை மத்திய அரசு வைத்துக் கொண்டு ஏனைய அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்க வேண்டுமென நாம் விபரித்தோம்.
அதற்கு மேலும் மாகாணசபைக்கான முழுமையான தீர்வுத்திட்டத்தை அரசிடம் முன்வைத்தோம். ஐந்து மாதங்களாகியும் எமக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை. அரசின் கருத்து எமக்குத் தெரிவிக்கப்படாததால் பேச்சுவார்த்தைக்கான திகதி குறிப்பிடுவது அவசியமில்லை எனக் கருதினோம். எனினும் இழுபறிகளுக்குப் பின்னர் மீண்டும் கூடிய போது பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு எமக்கு அழைப்பு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டது.
அரசாங்கமும் கூட்டமைப்பும் இரு தரப்பாகவிருந்து நடத்திய பேச்சுவார்த்தைகளில் கிடைக்காத தீர்வு பல்வேறு கட்சிகள் பங்கு கொள்ளும் பேச்சுவார்த்தைகள் மூலம் கிடைக்குமென எதிர்பார்ப்பது எவ்வகையில் சாத்தியம்?. உலக நாடுகளை திசை திருப்பி காலத்தைக் கடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகவிருக்கின்றது. முன்பும் தெரிவுக் குழு அமைக்கப்பட்டு 3 வருடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த அறிக்கை பாராளுமன்ற நூலகத்தில் தேடுவார் அற்றுக் கிடக்கின்றது. இந்த ஜனாதிபதி இரண்டு குழுக்களை அமைத்தார். அந்த அறிக்கைகளும் அவராலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.
சந்திரிகா காலத்திலும் 3 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றிற்கும் அதேநிலை ஏற்பட்டுள்ளது. எனினும் உலக நாடுகள் தெரிவுக்குழுவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்துகின்றது. இந்த நிலையிலேயே நாம் இந்தத் தேர்தலை சந்திக்கின்றோம்.
எனினும் நாம் பேச்சுவார்த்தையில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது அரசு எவ்வாறு நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு செயற்படுகின்றதோ அதே போல் அதற்கு மாற்றீடான நிகழ்ச்சி நிரலை நாமும் முன்னெடுக்க வேண்டும்.
மாகாண சபையைக் கைப்பற்றிய பின் 13ஆவது திருத்த சட்டத்திற்கமைய மாகாணசபைக்கான அதிகாரங்களை நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொள்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் எமது மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் மாகாணசபை மூலம் முடிந்தவற்றைச் செய்ய வேண்டும்.
மாகாண சபை மூலம் மக்களை இணைத்துக் கொண்டு எமது பேராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டு எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். மாகாணசபைக்குள்ளும் வெளியேயும் நாம் போராட வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும்.
சுத்தமான தமிழ் மாவட்டமாகவிருந்த முல்லைத்தீவு மாவட்டத்துடன் சிங்களக் குடியேற்றக் கிராமமான வெலிஓயா இணைக்கப்பட்டதால் ஒரே நாளில் 9000 க்கு மேற்பட்ட சிங்கள் மக்கள் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாறியிருக்கின்றது.
அரச நிகழ்ச்சி நிரலின் இலங்கையில் தனித் தமிழ் மாவட்டமென எதுவும் இருக்க கூடாதென்பது முன்னுரிமைப்படுத்தப்பட்ட செயற்பாடாக இருக்கின்றது. வடக்கு, கிழக்கை அத்தகைய நிலைக்கு கொண்டுவருவது அரசின் நிலைப்பாடாகும். அதன் மூலம் தமிழர் பிரச்சினையை இல்லாதொழிப்பதே அரசின் திட்டமாகும்.
அதன் வெளிப்பாடாகவே இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் எம்முன் வைக்கப்பட்டுள்ளது. அதனால் நாம் இதை எதிர்கொண்டே ஆகவேண்டும்.
தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதென்பது முடியாத காரியமல்ல. எமது மக்கள் 80சதவீதத்துக்கு மேல் வாக்களிக்குமிடத்து அது சாத்தியமானதொன்றே. இதற்கு ஒவ்வொவரும் வாக்களிப்பதுடன் மற்றவர்களையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும். அதன் மூலம் நாம் 17 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். பெரும்பான்மை கொண்ட கட்சியாக தமிழ்தேசியக் கூட்டமைப்பே தெரிவாகும். அதன் மூலம் அரசியல் சூழலுக்கமைய நாம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றலாம்.
அதன் மூலம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்று பட்டு வேறுபாடின்றி ஒரே தாய் பிள்ளைகளாக இருக்கின்றார்கள் என்பதை உலகுக்கும் அரசுக்கும் வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமையும். அதுவே வடக்கு, கிழக்கு இணைப்புக்கான மக்களின் அங்கீகாரமுமாக அமையும். எனவே எமது இளைஞர் சமுதாயம் மக்களை வாக்களிக்கச் செய்வதில் முனைப்புடன் செயற்பட வேண்டும். எந்த வாக்கும் நிராகரிக்கப்படாதிருப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட வேண்டும். 80சதவீதத்துக்கும் மேற்பட்டோர் காலையிலேயே வாக்களிப்பதற்க்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் கிழக்கு மாகாண சபையானது எமது கைக்கு வருமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.

No comments:

Post a Comment