ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சியை நிறுவுவதற்குத் தீர்மானித்துள்ள அரசு, இதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக்கொடுப்பது பற்றித் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல், எதிர்வரும் அமைச்சரவை மாற்றத்தின் போது முக்கியமான பொறுப்புகளை முஸ்லிம் காங்கிரஸிடம் வழங்குவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கு மாகாணசபையில் விட்டுக்கொடுப்புடன் கூட்டாட்சியாக மு.காவுடன் இணைந்து செயற்படத் தயாரென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்த ஒரு சூழலில் அரசின் இந்த யோசனை வெளியாகியுள்ளது.
அரசின் இந்தத் தீர்மானம் நேற்றிரவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, கிழக்கு ஆட்சியை எவ்வாறு அமைப்பது, மாகாண அமைச்சுகளில் எவரை நியமிப்பது என்பன உட்பட்ட பல விடயங்களை மு.காவுடன் பேச உயர்மட்ட அமைச்சர் குழுவொன்று தயாராகி உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சர் பதவி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குள்ளேதான் வழங்கப்படவேண்டும் என்ற கொள்கை கட்சியில் இருந்தபோதும் கிழக்கு மாகாணசபை விடயத்தில் அதில் மாற்றங்களைச் செய்ய அரசுத் தலைமை உத்தேசித்திருப்பதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது விடயத்தில் மு.கா. தலைமைத்துவம் கட்சி உறுப்பினர்களுடன் பேச்சு நடத்தி முடிவுகளை எடுக்கும்வரை காத்திருப்பதாகவும் அந்த அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment