போலி வைரக்கல்லை விழுங்கி தானே திருடன் போன்று நடித்து ஒரிஜினல் திருடனைத் தப்புவித்த வாலிபரை இலங்கை காவல்துறையினர் கைது செய்தனர். நூதன முறையில் நடந்த இந்தத் திருட்டு, மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை தலைநகரான கொழும்புவில் கடந்த வாரம் வைர நகை கண்காட்சி ஒன்று நடந்தது. அதில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஒரு வைரக்கல் திருட்டு போனது. உடனடியாக கண்காட்சி நடைபெற்ற அரங்கம் இழுத்து மூடப்பட்டது.
உள்ளே இருந்தவர்கள் அனைவரையும் சோதனையிடுவதற்கு முன்னர், தானியங்கி காமிராவில் எடுக்கப்பட்ட வீடியோ பரிசோதிக்கப்பட்டது. இந்த வீடியோவில் 32 வயது மதிக்கத்தக்க சீன வாலிபர் ஒருவர் வைரக் கல்லை எடுத்து வாயில் போட்டு விழுங்கியது பதிவாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரைத் தவிர ஏனைய அனைவரும் சோதிக்கப்படாமல் விடுவிக்கப்பட்டனர்.
சீன வாலிபரைக் கைது செய்த காவல்துறையினர், அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அவரது வயிற்றில் இருந்த வைரக் கல்லை எடுத்தனர். ஆனால், சோதனையின்போது அந்த வைரக்கல் போலி என்பது தெரிந்து காவல்துறையினர் அதிர்ச்சியாகினர்.
வைரைக்கல்லைத் திருடிய உண்மையான திருடனைக் காப்பாற்ற போலி வைரக்கல்லை இந்த வாலிபர் விழுங்கியது விசாரணையில் தெரிய வந்தது. கூட்டாக இணைந்து திட்டமிட்டு இந்தத் திருட்டை அவர்கள் நடத்தியதும் தெரியவந்துள்ளது. எனினும் வைரக்கல்லைக் கொண்டு சென்ற உண்மையான திருடனைக் குறித்த தகவல்கள் இதுவரை கிடைக்கவில்லை. பிடிபட்ட வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது
No comments:
Post a Comment