இந்தியா TNA ஊடாக தீர்வை கொண்டுவந்தால் நாங்கள் கொதித்து எழுவோம்: சிங்களவர் !
இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தங்கொடுத்து தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்குமானால், அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர். சிங்கள மக்களின் அனுமதியின்றி நாட்டில் எதையும் கூட்டமைப்பால் பெறமுடியாது என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இந்திய விஜயம் தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அந்த இயக்கத்தின் செயலாளர் கலாநிதி வசந்த பண்டார மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கையாளும் வழிமுறைகள் நாட்டுக்குப் பொருத்தமற்றவையாக இருக்கின்றன. அது சர்வதேச தீர்வையே எதிர்பார்க்கின்றது.
தமிழ் மக்களுக்கு எதையாவது பெற்றுக்கொடுப்பதற்குக் கூட்டமைப்பினருக்கு அக்கறையிருந்தால், அவர்கள் தெரிவுக்குழுவுக்குச் செல்லவேண்டும். அதை விடுத்து இனவாதம் பேசுவதால் நடக்கப்போவது ஒன்றுமில்லை. குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விஜயம் செய்து தீர்வு தொடர்பில் பேசுவது அரசை வெறுப்படையச் செய்யும். இதுவே யதார்த்தபூர்வமான உண்மையுமாகும். இந்தியாவினூடாக இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து தீர்வொன்றைப் பெற்றுக் கொள்வதே கூட்டமைப்பின் நோக்கமாகும். அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அதற்கு எதிராக சிங்கள மக்கள் கிளர்ந்தெழுவர்.
இந்தியாவுக்கு கூட்டமைப்பு செல்வதால் தீர்வு முயற்சிகள் உள்நாட்டில் பாதிக்கப்படுவதுடன், மேலும் காலதாமதம் ஏற்படும். இதைக் கூட்டமைப்பு உணரவேண்டும். அதேவேளை, சிங்கள மக்களின் விருப்பத்திற்கு மாறானதொரு தீர்வைக் கூட்டமைப்பால் பெறமுடியாது என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம் என வசந்த பண்டார தெரிவித்துள்ளார். |
No comments:
Post a Comment