Translate

Saturday, 29 September 2012

டெசோ தீர்மானங்களை ஐ.நா.விடம் சமர்ப்பிக்க அமெரிக்கா செல்லும் ஸ்டாலின்


இலங்கை விவகாரம் தொடர்பில் டெசோ மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபையிடம் ஒப்படைப்பதற்காக மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவொன்று  நியூயோர்க் செல்லவுள்ளது. 



தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையிலான டெசோ மாநாடு கடந்த ஓகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெற்றது. இதன்போது, இலங்கைத் தமிழர்கள் நலனை காக்கும் வகையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை ஐ.நா.சபையிடம் கொடுக்க தி.மு.க முயற்சி செய்தது. ஆனால் இந்திய மத்திய அரசின் எதிர்ப்பு காரணமாறு அந்த முயற்சி தாமதமாகியிருந்தது.


தற்போது தி.மு.க சார்பில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நா சபையில் கொடுக்க இந்திய மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் டெசோ அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் எதிர்வரும் 3ஆம் திகதி தி.மு.க தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீர பாண்டியன், முன்னாள் மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன், சட்டத்தரணி ராதாகிருஷ்ணன், ஹசன் முகமது ஜின்னா ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்ஸில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆய்வு செய்யவுள்ளது. இந்த ஆய்வுப் பொறுப்பை ஏற்கவுள்ள இந்தியா, மனித நேயத்துடன் நடக்க வேண்டும் என்று மேற்படி டெசோ கூட்டத்தின் போது வலியுறுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், டெசோ மாநாட்டு தீர்மானங்களை ஐ.நாசபையில் வழங்குவது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் ஒக்டோபர் 6ஆம் திகதி நியூயோர்க் செல்லவுள்ளனர். அங்கு ஐ.நா.சபையில் டெசோ மாநாட்டு தீர்மானங்களை அவர்கள் கையளிக்கவுள்ளனர் என்று மேலும் குறிப்பிடப்படுகின்றது.

No comments:

Post a Comment