இனிமேலும் தாமதிக்காமல் 13வது அரசியல் திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்று சிறிலங்காப் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம், களநிலவரங்களைக் கருத்தில் கொண்டு 13வது அரசியலமைப்புத் திருத்தத்தை இல்லாமல் செய்ய வேண்டும் அல்லது அதில் திருத்தங்களைச் செய்ய வேண்டும்.
13வது திருத்தத்தில் எதுவும் இல்லை. ஆனால், போருக்குப் பிந்திய அபிவிருத்தி முயற்சிகளுக்கு அது முட்டுக்கட்டையாக இருந்தது.
மக்கள் ஆதரவுத் திட்டங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ அதன் ஆதரவாளர்களோ தலையிடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது.
இதுபற்றிய எனது கருத்தை சிறிலங்கா அதிபரிடமும் அமைச்சர்களிடமும் வெளிப்படுத்தியுள்ளேன்.
சிறிலங்கா அரசுக்கு எழுந்துள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அச்சுறுத்தல்களை முறிடியப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
13வது திருத்தச் சட்டமும், நோர்வேயின் ஏற்பாட்டில் 2002 பெப்ரவரியில் கையெழுத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடும் ஒரே வகையானவை. இவை இரண்டினாலும் சிறிலங்கா மக்களுக்கு பயனில்லை.
இருந்த போதிலும், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரின் நலன்களையே கருத்தில் கொண்டவை. பிரிவினைக்கு இந்த இரண்டுமே ஆதரவளிக்கின்றன.
சிறிலங்கா அரசாங்கம் உடனடியாகச் செயற்படத் தவறினால், தற்போதைய நெருக்கடிகள் நிச்சயமாக தேசிய பாதுகாப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
ஏற்கனவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், வெளிநாடுகளில் உள்ள அதன் ஆதரவாளர்களும் வடக்கில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.
திவிநெகும சட்டமூலத்துக்கு எதிராக காட்டப்படும் எதிர்ப்பு என்று பார்ப்பது எமது தவறாக அமையும்.” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். |
No comments:
Post a Comment