Translate

Tuesday, 23 October 2012

13வது திருத்தத்தை,மாகாணசபைகளை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம்: மனோகணேசன்


13வது திருத்தத்தை,மாகாணசபைகளை ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம்: மனோகணேசன்

இலங்கை - இந்திய ஒப்பந்தம் வழிகாட்டிய 13வது திருத்தத்தையும், மாகாண சபைகளையும் இல்லாது ஒழிக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் குற்றச்சாட்டியுள்ளார்.


13வது திருத்தத்தை ஒழிப்பது தொடர்பில் சில அரசு சார்பு தீவிரவாத கட்சிகள் தொடர்ந்து பேசி வருவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இந்நாட்டில் இன்றுள்ள ஒன்பது மாகாணங்களின் எல்லைகளையும் மீளமைத்து அவற்றை ஐந்து மாகாணங்களாக மாற்றுவதற்கு இந்த அரசாங்கம் இரகசிய திட்டம் தீட்டியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தலைமையில் அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள் இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த இலக்கை முன் வைத்தே அரசாங்கம் இன்று காய் நகர்த்துகிறது. இந்த தகவலை முடியுமானால், அரசாங்கத்தின் அதிகாரபூர்வ பேச்சாளர் மறுக்கட்டும். அதேபோல் அரசில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகளும்,இ இடதுசாரி கட்சிகளும் இதற்கு பதில் சொல்லட்டும் முழு நாட்டையும் சிங்கள பெளத்த நாடாக அறிவிக்க வேண்டும் என்பதுவே இவர்களது கொள்கை திட்டம்.

இதன் முதற்கட்டமாக, 13வது திருத்தமும் அதையோட்டிய மாகாணசபைகளும் ஒழிக்கப்படும். இரண்டாம் கட்டமாக, நாட்டின் மாகாணங்களின் எல்லைகள் மாற்றியமைக்கப்பட்டு, ஒன்பது மாகாணங்கள், ஐந்து மாகாணங்களாக அறிவிக்கப்படும். இதன்மூலம், எந்த ஒரு மாகாணத்திலும், தமிழ், முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக இருக்க மாட்டார்கள்.

மூன்றாவது கட்டமாக, அனைத்து நிர்வாக மற்றும் தேர்தல் மாவட்டங்களிலும் தமிழ்இ முஸ்லிம் மக்கள் சிறுபான்மையாக மாற்றப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, எந்த ஒரு மாவட்டத்திலும் தமிழ் பேசும் மக்கள் பெரும்பான்மையாக இருக்க முடியாத நிலைமை உருவாக்கப்படும். இன்று வட மாகாணத்தில் தமிழர்களும், கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இந்த மாகாணங்களுக்கு உள்வரும் மாவட்டங்களிலும் தமிழர்களும், முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கிறார்கள்.

இந்த நிலைமை மாற்றப்படும். அனைத்து மாகாணங்களுக்கும், கடல் எல்லை அவசியம் என்ற காரணத்தை காட்டி மாகாண எல்லைகளை மீளமைக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்மூலம், தமிழ், முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வரும் மாகாண, மாவட்டங்களின் எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டு, அனைத்து மாகாணங்களிலும், மாவட்டங்களிலும் ஜனத்தொகை குடிபரம்பல் மாற்றி அமைக்கப்படும்.

இதுதான் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசாங்கத்தின் தீர்வாகும். இந்த இலக்கை நோக்கியே அரசாங்கம் பயணம் செய்கிறது. இதன் முதல் கட்டமாகவே 13வது திருத்தத்திற்கும், மாகாணசபைகளுக்கும் எதிரான பிரசார இயக்கத்தை அரசாங்கம் இன்று தனது பங்காளி கட்சிகள் மூலமும், பாதுகாப்பு செயலாளர் மூலமும் ஆரம்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment