இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவை அறிவித்துள்ளது. தேசிய இனப்பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேசப் போவதில்லை என உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென அரசாங்கம் மெய்யாகவே விரும்பினால், முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென விரும்பினால், மக்களினால் தெரிவு செய்யப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இலகுவில் தீர்வினை எட்ட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து நான்கு ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் இதுவரையில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் யதார்த்தமான முனைப்புக்களை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சுமத்தப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச சுயாதீன விசாரணை என்ற நிலைப்பாட்டிலிருந்து புலம் பெயர் சமூகம் மாறுபடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குமரன் பத்மநாதன் வடக்கு கிழக்கில் மனிதாபிமான தொண்டுகளை மேற்கொண்டு வருவதில் தமக்கு எவ்வித பிரச்சினையும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களுக்கு எவரேனும் உதவிகளை வழங்கினால் அதனை விமர்சனம் செய்யும் அவசியம் கிடையாது என சுரேன் சுரேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment