Translate

Monday, 22 October 2012

வடக்கில் தமிழ் பெண்களை மணம் முடிக்கத் துடிக்கும் இராணுவத்தினர்!

யுத்தத்தின் கோரப் பிடிக்குள் சிக்கித் தவித்த எமது தமிழ்ச் சமூகம், கடந்த மூன்று வருடங்களாக யுத்தமற்ற சூன்யப் பிரதேசத்தினுள் பிரவேசித்துள்ளனர்.

அத்தகைய சூன்யப் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள காக்கிக் சட்டைகள், ஆயுத கலாசாரத்திலிருந்து கீழிறங்கி, புதிய யுக்தியொன்றை கையாண்டு வருகின்றமை அதிர்ச்சியளிக்கின்றது.


யுத்தத்தின் வடுக்களும் இடப்பெயர்வுகளின் தாக்கமும் தமிழர்களின் மனதிலிருந்து அகலாமல் இருக்கும் நிலையில், தமிழ்ச் சமூகத்தின் கலாசாரத்தினை, அவர்களின் வாழ்க்கை முறைமையினை திட்டமிட்டு சிதைக்கும் நடவடிக்கைகள் தற்போது மேலேழுந்துள்ளன.

வடக்கில் உள்ள முன்னாள் போராளிகளோ சரி, போரின் போது அவயவங்களை இழந்து வாழ்க்கையினைக் கொண்டு நடாத்த முடியாத பெண்கள் மற்றும் விதவைகள் ஆகியோர் படையினரால் மேலும் மேலும் தங்களுக்குள்ளே ஒரு உளவியல் போராட்டத்தினையே நடாத்திக் கொண்டு வருகின்றனர். நிம்மதியான வாழ்க்கை கிடைக்காதா என்ற ஏக்கம் பெண்களிற்கு மட்டுமல்ல. தற்போது ஆண்கள் பலரிடமும் கேள்விகளாக தொடுக்கப்பட்டுள்ளன.

இதற்கெல்லாம் காரணம், தமிழ்ப் பெண்களை தற்போது குறிவைத்துள்ள இராணுவத்தினரைப் பற்றிய சிந்தனைகள் தான்.  வெளியில் சொல்ல முடியாமலும், சொல்வதானால் பழிக்கு ஆளாக வேண்டிவரும் என்ற பயத்தினாலும் பல பெண்கள் பல பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களை சகித்துக் கொண்டுதான் போகவேண்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் சமூகக் கட்டமைப்புக்கள் வலுவிழந்து வருகின்றமையை உணரக் கூடியதாக உள்ளது. அதாவது திட்டமிட்டு சிதைக்கப்படுகின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலங்களிலெல்லாம் கட்டுப்பாடுகள் மீறமுடியாதவைகளாக இருந்தன. மீறினால் நேரடியாகவே மறைமுகமாகவே தண்டனைகள் வலுவாக இருந்தன. ஆனால் இன்று ஆறாத ரணங்களோடு வாழ்க்கையினைக் கொண்டு நடத்தும் தமிழ்ச் சமூகத்தை சிங்கள மேலாதிக்க அரசாங்கம் எவ்விதத்திலெல்லாம் அடிமைப்படுத்த முடியுமோ அதையெல்லாம் திட்டமிட்டு மேற்கொள்கிறது.

தமிழர்களின் தாயகப் பகுதியான யாழ்ப்பாணத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் வாழ்ந்த சாதாரண மக்கள், அரசியல் ரீதியாக வழி நடத்திய தமிழ்த் தலைவர்களின் காலத்திலும், தமிழர்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப் புலிகளின் காலத்திலும், தங்களுடைய கலாசாரம், பண்பாடு, விழுமியங்கள், மரபுகள் வழக்காறுகள் ஆகியவற்றை மிகவும் கண்டிப்பாக கடைப்பிடித்து வந்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மக்கள் மட்டுமின்றி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழ்ந்த மக்களும் அவ்வாறே வாழ்ந்தனர். ஆனால் ஆயுத ரீதியாக எப்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டார்களோ, அன்றிலிருந்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வுகள், உரிமைகள், சுதந்திரங்கள் என்பவற்றை விரட்டியடிக்க சமூக சீரழிவு எனும் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர்.

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் வன்புணர்வுக்குள்ளாக்கியும், பாலியல் ரீதியான துஸ்பிரயோகங்களை மேற்கொண்டும் இராணுவத்தினர் தங்களது இச்சைகளைத் தீர்த்துக் கொண்டனர். பிணம் தின்னும் கழுகுகளைப் போலவே அவர்கள் செயற்பட்டனர் என்பதில் சந்தேகம் இல்லை. இது முடிந்துவிட்ட பின், மீண்டும் இளம் பெண்களை குறிவைத்திருப்பது வேதனைக்குரியது. ( இதற்கு சில பெண்கள் உடன்படுகின்றமை அதைவிட வெட்கக்கேடு)

யாழ்ப்பாணத்தில் தற்போது அதிகமான பாடசாலைச் சிறுமிகளை தங்களது வலையில் சிக்க வைக்கும் இராணுவத்தினர் வயது வித்தியாசமின்றி திருமணம் செய்யவும் துடிக்கின்றனர். ஒரு புறம் காதல் லீலைகள் நடந்தேற, மறுபுறம் திருமணம் முடிப்பதில் தீவிர முயற்சிகள். அவ்வாறு திருமணம் செய்வதற்காக பொய் சான்றிதழ்களை உருவாக்குவதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

இரவு பகலாக நடமாடும் தமிழர்களின் பகுதிகளின் நடமாடும் படையினர் அங்குள்ள பெண்களைப் பார்க்கும் பார்வை கழுகைவிட மோசமானதாக உள்ளதாக தெரிவிக்கின்றனர். இவற்றிற்கெல்லாம் காரணம், யாராலும் தங்களைத் தட்டிக் கேட்க முடியாது என்ற சிந்தனைகள் மேலோங்கி இருப்பதுதான்.

அதாவது, தமிழ்ப் பெண்ணைத் திருமணம் முடித்துவிட்டு, வேறொரு சிங்களப் பெண்ணை திருமணம் செய்யலாம். இல்லையேல் வேறு பெண்களை காதலிக்கலாம். (எத்தனை பெண்களென்றாலும்) காரணம், திருமணம் முடித்தது தமிழ்ப் பெண்ணை. அவளாலோ இல்லை, அவள் சார்பாகவோ யாரும் கேட்க முடியாது. கேட்கவும் வேறு நபர்கள் முன்வர மாட்டார்கள். சிங்கள அரசின் பார்வையில் தமிழினம் ஒரு ஒடுக்கப்பட்ட சிறுபான்மை இனம் என கருதப்படுவதனால்.

அது மட்டுமல்ல, யுத்தத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்த சிங்கள அரசு, தமிழ் இனப்பெருக்கத்தைக் குறைப்பதற்காக இவ்வாறு சிங்கள இராணுவம் திட்டமிட்டு தமிழ்ப் பெண்களை திருமணம் முடித்து, தமிழர்களின் வாழ்விடங்களில் சிங்களப் பரம்பலை உருவாக்கலாம்.

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் தங்களது தொழில் நிமித்தம் யாழ். மாவட்டத்தில் ஏனைய படைகள் இருப்பதனால், அவ் இராணுவத்தினர் நீண்ட காலங்களாக தம் குடும்பங்களைப் பிரிந்து தங்கி வாழ்வதனால் அவர்களின் இச்சைக்காக தமிழ்ப் பெண்களை நாடுவதனால் திருமணம் செய்யும் ஆசை ஏற்பட வாய்ப்புக்கள் அதிகரிப்பதோடு, யாழில் கலாசார சீரழிவுகளும் கூடவே இள வயது கர்ப்பங்களும் அதிகரிக்கின்றன.

இதனால் வடக்கைப் பொறுத்தவரையில் தமிழ் பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை எந்த நேரமும் எதிர்நோக்க வேண்டியுள்ளது. பாலியல் துஸ்பிரயோகம், விபச்சார நிர்ப்பந்தம், இளவயதுக் கர்ப்பம் போன்ற சம்பவங்களால் பாதிப்புற்ற பெண்கள், நீதி கேட்கவோ, அல்லது சட்ட பரிகாரம் தேடிக்கொள்ளவோ, சிகிச்சை பெற்றுக்கொள்ளவோ முடியாத சூழ்நிலை போன்ற கொடுமைகளை சர்வதேச சமூகத்திற்கு தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றமையே உண்மை.

இவ்வருடம் ஜனவரி மாதம் இராணுவச் சிப்பாய் ஒருவருக்கும் முன்னாள் போராளி ஒருவருக்கும் ஜனாதிபதி செயலகத்தால் திருமணம் நடாத்தி வைக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே. இதுவே யுத்தத்தின் பின்னர் இராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது திருமண ஆசைக்கான தூண்டுகோலாகவும் இருந்திருக்கலாம்.

இவ்வாறு எமது பண்பாட்டுக் கோலங்கள் சிதைக்கப்பட்டு, தாயகத்தின் மக்கள் தொகைச் சமநிலையை மாற்றுவதன் மூலம் வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் அல்ல என்பதனை உறுதி செய்துவிடும் என்பதே நிதர்சனம்.

புவிலக்ஸி
http://www.eelamboys.net/archives/528 

No comments:

Post a Comment