தமக்கு கடந்த காலங்களில் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக தமிழ் மக்கள் மீண்டும் நினைக்காது இருப்பதை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் துணைத் தலைவி யூலி பிஷப் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் மேற்கொண்டு, இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது மிக முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அவுஸ்திரேலியாவை தளமாகக் கொண்ட On Line Opinion எனும் இணையத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்களாவன:

"இலங்கையில் இடம்பெற்ற 25 ஆண்டு கால போரில் 80,000 வரையான மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் பெரும்பான்மையாகவுள்ள சிங்கள சமூகத்தவர்களால் தாம் ஓடுக்கப்படுவதாக நம்பிய தமிழ் மக்களால் தொடங்கப்பட்ட ஆயுதப் போராட்டம், போராக மாறி 2009ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இப்போரின் இறுதிக்கட்டத்தில் இரு தரப்பினரும் மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இப்போரில் வெற்றி பெறுவதற்காக எதிர்கொண்ட சவால்களைவிட, இலங்கை அரசாங்கத்தைப் பொறுத்தவரை இலங்கையில் சமாதானத்தை வெல்வதென்பது மிகவும் முக்கியமானது.  போர் இடம்பெற்ற பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள இலங்கைப் படைத்தரப்பினர் வெளியேற்றப்பட்டு, அங்கு மக்களாட்சி உறுதி செய்யப்பட வேண்டும்.

தமிழ்ப் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிகளை முறியடிப்பதற்கு அங்கே முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதுடன்,  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இப்பகுதிகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான உந்துதல்களை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாம் உலகப் போர் நடந்து முடிந்த பின்னர், அமெரிக்கா முன்னைய எதிரி நாடுகளுக்கு பல பில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியது. அதேபோன்று இலங்கையில் ஒளிமயமான எதிர்காலத்துக்கு தமிழ் மக்கள் பொருளாதாரப் பங்காளிகளாக சேர்க்கப்பட வேண்டும். இலங்கையின் பொருளாதாரத்திலிருந்து தாம் ஓதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் நினைக்கக் கூடாது.

தமக்கு கடந்த காலத்தில் இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பாக தமிழ் மக்கள் மீண்டும் நினைக்காது இருப்தை உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் நம்பகமான விசாரணைகள் மேற்கொண்டு, இக்குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவது மிக முக்கியமானது. இன மற்றும் பதவி போன்ற எதுவும் செல்வாக்குச் செலுத்தாத வகையில் நீதியின் முன் அனைவரும் சமன் என்ற நிலையை இது உருவாக்கும்.

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்க முயற்சிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அத்துடன் எதிர்கால தலைமுறையினர் தாம் அநீதியாக நடாத்தப்படுகிறோம் என உணராத வகையில் அரசாங்கம் செயற்பட வேண்டும்' என இக்கட்டுரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.