இலங்கை உயர் அதிகாரிகளுக்கு இரட்டை குடியுரிமை வழங்கியமை தொடர்பில் அமெரிக்காவிடம் நோர்வே அரசாங்கம் கேள்வி எழுப்பியதாக விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் முக்கிய தலைவர்களுக்கு குடியுரிமை மற்றும் கிரீன் கார்ட் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக நோர்வே வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
குறித்த அதிகாரிகளின் மீது அழுத்தங்களை பிரயோகித்து யுத்தத்தில் பாதிக்கப்படும் சிவிலியன்களை பாதுகாக்க முடியுமா என நோர்வே அதிகாரிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
நோர்வேக்கான அமெரிக்கத் தூதுவவர் க்ளைன்ட் வில்லியம்ஸூடன், நோர்வே வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் நடத்திய சந்திப்பு தொடர்பான தகவல்களே விக்கிலீக்ஸ் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அந்நாட்டு ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்த சந்திப்பு தொடர்பான தகவல்களை அனுப்பி வைத்துள்ளனர்.
2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து கிளிநொச்சி மீட்கப்பட்டதனைத் தொடர்ந்து அரசாங்கம் படையினரின் பாதுகாப்பையே முதனிலையாகக் கொண்டது எனவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை எனவும் நோர்வே அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தாத காரணத்தினாலேயே பொதுமக்கள் நிலைகள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
நோர்வேக்கான அமெரிக்கத் தூதரக பிரதிப் பொறுப்பாளர் செரீ டெனியல்ஸ் இந்தத் தகவல்களை அனுப்பி வைத்துள்ளார்.
சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து ஒன்றிரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு மட்டுமே தெரியும் என நோர்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் அநேகமான சட்டவிரோத உத்தரவுகள் வாய்மொழி மூலமாகவே விடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
யுத்தக் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அரசாங்க அதிகாரிகள் சாட்சியமளிக்க மாட்டார்கள் எனவும், தமிழ் மக்கள் அச்சம் காரணமாக சாட்சியமளிக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பில் அசராங்கம் வழங்கிய உறுதிமொழிகள் பின்பற்றப்படவில்லை என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர் என விக்கிலீக்ஸ் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
நன்றி: கொலம்போ ரெலிகிராப், விக்கிலீக்ஸ், தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்-
No comments:
Post a Comment