இந்தியாவின் பிரிவினை கொள்கைகளுக்குத் துணைபோய் நாட்டின் இறையாண்மையைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு டில்லியில் காட்டிக்கொடுத்துள்ளது.
இதற்கு எதிராகச் சிங்கள மக்கள் வீதியில் இறங்கிப் போராட முன்வர வேண்டும். அதேபோன்று டில்லியிலுள்ள இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசம் எவ்வாறு அரசுக்கு எதிராகச் செயற்பட்ட கூட்டமைப்பினருக்கு இரவுப் போசனம் அளிக்க முடியும்.
இது தேசத்துரோகிகளுக்குத் துணைபோன செயல் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் குறிப்பிட்டுள்ளது.
13 ஆவது திருத்தச் சட்டத்தை அரசியலமைப்பிலிருந்து அப்புறப்படுத்தி விட்டால் 13 பிளஸ் என்ற விடயத்தை யாரும் கேட்கமாட்டார்கள். எனவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசமைப்பிலிருந்து இந்தியாவின் பிரிவினைவாதக் கொள்கையான 13ஆவது திருத்தச் சட்டத்தை அப்புறப்படுத்துமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வலியுறுத்த வேண்டும் என்றும் அந்த இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இது குறித்து தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர கூறுகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான குழுவினர் இந்தியாவுக்குச் சென்று நாட்டுக்கு எதிரான சதியில் ஈடுபட்டுள்ளனர். மேற்குலகச் சக்திகளையும் சந்தித்துள்ளனர்.
எனவே, இனியும் பொறுமைகாப்பதில் பலனில்லை. நாட்டுக்கு எதிராக கடுமையான சூழ்ச்சிகளை கூட்டமைப்பின் உதவியுடன் இந்தியா உள்ளிட்ட மேற்குலகச் சக்திகள் முன்னெடுக்கின்றன. இவர்கள் அரசியல் தீர்வென்று கூறுவது நாட்டைத் துண்டாடும் தமிழீழக் கொள்கையினையே, எனவே, சிங்கள மக்கள் ஒன்றிணைந்து பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.
டில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் பிரசாத் காரியவசத்தை உடனடியாக நாட்டுக்கு அழைத்து ஜனாதிபதி விசாரணை நடத்த வேண்டும்.
நாட்டுக்கு எதிராக அழுத்தம் கொடுக்கச் சென்ற கூட்டமைப்பினருக்கு இரவுப் போசனம் அளித்தது மிகப் பெரிய தேசத்துரோகச் செயலாகும். எவ்வாறாயினும் தேசிய அரசியலில் ஊடுருவியுள்ள பிரிவினைவாத சக்திகளையும் கொள்கைகளையும் வேரோடு அழிக்க நடவடிக்கை அவசியம் என்றார்.
No comments:
Post a Comment