கிளிநொச்சி, வட்டக்கச்சி கலைவாணி சனசமுக நிலையத்தில் நிர்வாகி தெரிவு நேற்று இடம்பெற்றுள்ளது. சனசமூக எல்லைக்குட்பட்ட ஆர்வலர்கள், நலன் விரும்பிகள் இதில் கலந்து கொண்டு நிர்வாக தெரிவை மேற்கொண்டதுடன் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.
கலைவாணி சனசமூக நிலையத்தின் தலைவராக கிளி. தர்மபுரம் மகா வித்தியாலய அதிபர் ச.பூலோகராஜா தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் வி. சுவிஸ்கரன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அதிகாரி உட்பட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட ச. பூலோகராஜா இங்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்த பிரதேசத்திற்கு சேவை செய்ய வேண்டிய கடமை எனக்குண்டு. நான் பாடசாலை அதிபராக இருக்கிற காரணத்தால் பெரும்பாலான செயற்பாடுகள் ஒத்த தன்மை உடையன என்பதால் சிறப்பாக செய்யக்கூடிய வாய்ப்புகள் உண்டு.
பலமான சனசமூக நிலையங்கள் காணப்படுகின்ற இடங்களில் பலம் மிக்க இளைஞர்களும் யுவதிகளும் காணப்படுகின்றனர். இவ்வாறான பலம்தான் ஒட்டுமொத்தமான பிரதேசங்களின் பலமாக அமையும்.
மாறுபட்ட கருத்துக்களை விலக்கி ஒத்த தன்மையுடன் இந்த சமூகத்தின் வளர்ச்சிக்காக செயற்படும் எண்ணம் ஏற்பட வேண்டும் என்றார்.
இங்கு கலந்து கொண்ட கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் வி. சுவிஸ்கரன் உரையாற்றும்போது,
இன்றைய இந்த தெரிவு வட்டக்கச்சி பிரதேசத்தின் அபிவிருத்தியில் ஒரு பலத்தை சேர்க்கின்றது. கடந்த காலங்களில் இந்த பிரதேசத்தில் பல சனசமூக நிலையங்கள் செயற்பட்டு வந்த காரணத்தால் அறிவுள்ள சமூகத்தையும் புத்திஜீவிகளையும் பெற்றுள்ளதுடன் எமது இனத்தினுடைய கொள்கை, கலை, கலாசாரம், பண்பாட்டு விழுமியங்களுடன் நாம் அனைவரும் நிலைத்து நிற்கின்றோம்.
இவ்வாறான நிலையில் இன்று எமது எதிர்கால சந்ததியினரை அறிவுசார்ந்த துறைகளில் பிரகாசிக்க விடாது தவறான பாதைகளுக்கு இழுத்து எதிர்காலத்தில் தமிழினத்தை நிரந்தர ஏமாளிகள் ஆக்குவதற்காக பல தீயசக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் இருந்து எமது இளைய தலைமுறையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு.
எனவே சமூகத்தில் சனசமூக நிலையங்களை இயங்க வைப்பதன் மூலம் வாசிப்பு பழக்கத்தையும் ஏனைய சமூக செயற்பாடுகளையும் பலமடையச் செய்து எமது இனத்தின் அடையாளத்தை நிலைநாட்ட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment