Translate

Wednesday, 17 October 2012

யாழ். நெடுந்தீவிற்கு பா.உ சி.சிறீதரன் விஜயம்: மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வு


யாழ். நெடுந்தீவிற்கு பா.உ சி.சிறீதரன் விஜயம்: மக்களின் நிலைமைகள் குறித்து ஆராய்வு
யாழ்.நெடுந்தீவிற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் விஜயம் செய்து, பொதுமக்கள், திணைக்கள அதிகாரிகள்  மற்றும் வர்த்தகர்களை சந்தித்து நெடுந்தீவின் நிலைமை குறித்து ஆராய்ந்துள்ளார்.
இன்று காலை நெடுந்தீவிற்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர், கரையோர மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்தார்.

இதன்போது உவர் நீர் தடுப்பணை அமைப்பது குறித்தும், கடலுணவுகளை வெளியில் கொண்டுசென்று விற்பனை செய்வதிலுள்ள பிரச்சினைகள் குறித்தும் மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர்.
மேலும், கரையோரத்தில் மிக நீண்டகாலம் புனரமைக்கப்படாமலிருக்கும் வீதிகளின் புனரமைப்புக் குறித்தும் தெரிவித்தனர். இதேபோல் தற்போது நெடுந்தீவில் நிலவும் கடுமையான வறட்சி தொடர்பாகவும் தெரிவித்த மக்கள் இதற்கான நிரந்தரத் தீர்வொன்றினை காணுமாறு வலியுறுத்தினர்.

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர், நெடுந்தீவிற்கு தண்ணீர் கொண்டுவருவதற்கான அமைக்கப்பட்ட இரணைமடு நீர் விநியோகத்திட்டம் கிடப்பிலிருப்பதாகவும், அது நடைமுறைக்கு வரும் வரையில் மாற்றுத் திட்டம் ஒன்று குறித்து ஆராய்வதாகவும் தெரிவித்ததுடன், புலம்பெயர்ந்து வாழும் நெடுந்தீவு மக்கள் இதற்கான பங்களிப்பை செய்யவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பிரதேச செயலகம், வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர், அங்குள்ள பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

இதன்போது கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றிலும், உட்கட்டுமானத்துறையிலும் நிறையவே மக்களுக்குத் தேவைகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். தொடர்ந்து நெடுந்தீவில் அதிகளவான இளைஞர், யுவதிகள் வேலைவாய்ப்பற்றிருப்பது தொடர்பில் மக்கள் பாராளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இதற்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர், இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் நிரந்தரமான தொழில் துறைகளை நெடுந்தீவிலேயே ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டதுடன், இதற்கும் புலம்பெயர் நாடுகளிலுள்ள நெடுந்தீவு மக்கள் உதவ முன்வரவேண்டும் எனவும் அவ்வாறு உதவ முன்வரும் பட்சத்தில் நெடுந்தீவிலுள்ள மக்களுடைய வாழ்வாதரத்தை கட்டியெழுப்பும் வகையில் ஒரு நிலையான கட்டமைப்பை ஏற்படுத்த தம்மாலான உதவியை தொடர்ந்து செய்ய தாம் தயாரக விருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இந்த விஜயத்தின்போது பாராளுமன்ற உறுப்பினருடன், யாழ். மாநகரசபை உறுப்பினர் எஸ்.விந்தன், வலி. வடக்கு பிரதேச சபையின் உப தவிசாளர் எஸ்.சஜீவன், பாண்டியன்குளம் பிரதேச சபையின் உபதவிசாளர் எஸ்.செந்தூரன் மற்றும் சிரேஸ்ட ஊடக வியலாளரும், மனிதவுரிமை ஆர்வலருமான தியாகராஜா நிரோஸ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

No comments:

Post a Comment