Translate

Sunday 14 October 2012

இலங்கை தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் விரைவில் மாற்றம்; சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவிப்பு


இலங்கை தொடர்பான இந்திய நிலைப்பாட்டில் விரைவில் மாற்றம்; சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி தெரிவிப்பு
news
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா கொண்டுள்ள நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படும் காலம் நெருங்குவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தை இந்தியா ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏழு பேர் இந்தியாவுக்கான பயணம் மேற்கொண்டு பிரதமர் மன்மோகன்சிங், எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ,மற்றும் சிவ்சங்கர் மேனன் ஆகியோரைச் சந்தித்து உரையாடியுள்ளனர். தமது சந்திப்புக்கள் குறித்து இந்திய ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக இலங்கை அரசாங்கம், அளித்த உறுதிமொழிகள் எவையும்  காப்பாற்றப்படவில்லை என்பதை இந்தியா புரிந்து கொண்டுள்ளது. அதனால், இலங்கை மீது ஓர் அதிருப்தி ஆரம்பமாகியிருப்பதைக் காண முடிகிறது.

இலங்கை அரசாங்கத்தை எந்த அளவிற்கு நம்புவது என்ற கேள்வி தற்போது இந்திய அரசுக்கு எழுந்துள்ளது. இதனையடுத்து, இலங்கை தொடர்பாக இந்தியா ஒரு மாற்று சிந்தனைக்கு வரும் காலம் விரைவில் வரும்.

அத்துடன், இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு மூலமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்ற எமது குழுவின் கருத்தையும் இந்திய மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. என்றார்.

இலங்கை அரசு, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் தொடர்ந்து இழுத்தடித்துக் கொண்டே போகிறது என்று இந்தியாவும் கருதும் நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு அடுத்தகட்டமாக, அகிம்சைப் போராட்டத்தில் இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்றும், அப்போது தமிழகத்திலும் அதன் தாக்கம் எதிரொலிக்கும் என இந்திய அரசிடம் தாங்கள் எடுத்துரைத்ததாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

சீனாவின் ஆதிக்கம், குறிப்பாக வடமாகாணத்தில் இராணுவ முகாம்களை நவீனப்படுத்துவதிலும், இராணுவக் குடியிருப்புக்கள் கட்ட நிதியுதவி அளிப்பதிலும் சீனா அதிக முனைப்புடன் செயல்பட்டுவருகிறது. அது அங்கு வாழும் தமிழ் மக்களால் ஏற்க முடியாது எனவும் அது அவர்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்பதால், இது தொடர்பில் இந்தியா ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment